ஆஸ்திரேலியாவை கலக்கிய இளம் டிரைவர்!



-த.சக்திவேல்

ஆஸ்திரேலியாவின் தார் சாலைகளிலும், மணற் பரப்புகளிலும் 150 கி.மீ வேகத்தில் விர்ரென்று பறந்து கொண்டிருந்தது அந்த கார். டிராஃபிக் போலீஸின் அதிரடியான கட்டளைக்கோ, சிக்னல் நிறுத்தங்களுக்கோ எந்த மதிப்பும் கொடுக்காமல் பாய்ந்துகொண்டே இருந்தது. பெட்ரோல் தீர்ந்து போய் ஓரிடத்தில் கார் நிற்க, டிரைவரை லபக் என்று பிடித்த போலீஸின் கண்களில் ஈயாடவில்லை.

‘‘நான் யூ-டியூப்பை பார்த்து கார் ஓட்ட கற்றுக்கொண்டேன். எனக்கு ஆஸ்திரேலியா முழுக்க காரில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது தீராத ஆசை. அதனால் வீட்டிலிருந்த என் பெற்றோரின் காரை எடுத்து வந்துவிட்டேன்...’’ கூலாக போலீஸிடம் சொல்லியிருக்கிறார் அந்த டிரைவர்.

ஏறக்குறைய 1300 கி.மீ க்கு மேல் பயணம் செய்திருக்கிறார். பெட்ரோல், உணவுக்காக வீட்டிலிருந்து பணத்தை எடுத்து வந்த அவரிடம் ஓட்டுனர் உரிமம் கூட இல்லை. இவ்வளவு வேகத்தில் சென்றிருந்தாலும், பெரிதாக எந்த விபத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை என்பது டிராஃபிக் போலீஸை ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருக்கிறது. பெற்றோரிடம் அந்த டிரைவரை ஒப்படைத்த பிறகே போலீசார் நிம்மதியடைந்தனர். அந்த டிரைவரின் வயது ஜஸ்ட் 12!