இந்தியாவின் கால்பந்து இளவரசி



-ச.அன்பரசு

மேகாலயாவின் ஷில்லாங்கிலுள்ள ஜேஎல்என் மைதானம். கூடியிருந்த 22 ஆயிரம் பார்வையாளர்கள் நகம் கடித்தபடி டென்ஷனுடன் நகரும் பெண்களின் கால்களினூடே செல்லும் பந்தை கண்ணிமைக்காமல் பார்த்தனர். இந்தியாவும், நேபாளமும் ஆக்ரோஷமாக மோதிய பெண்களுக்கான கால்பந்து போட்டி அது. இறுதியில் 4 புள்ளிகள் பெற்று நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா.

இந்த வெற்றிக்கு ஒரே காரணம், மணிப்பூரின் கால்பந்து இளவரசியான பெம்பெம் தேவி. 21 ஆண்டுகள் தன் வாழ்வை ஃபுட்பாலுக்காகவே அர்ப்பணித்து, கேப்டனாக உயர்ந்து இந்திய அணியை சாம்பியனாக உயர்த்திய ஆய்னம் பெம்பெம் தேவிக்கு அது இறுதிப் போட்டி. ஆய்னம் பெம்பெம் தேவி பிறந்தது மணிப்பூரின் இம்பாலில்.

போஷாக்கு பானம் குடிக்கும் வயதிலேயே பள்ளி நண்பர்களோடு கால்பந்தை எட்டி உதைக்கத் தொடங்கிவிட்டார். ‘‘நண்பர்கள் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டு விளையாடிய போட்டி அது. என்னை ஆணா, பெண்ணா என கண்டறியவே பலருக்கும் வெகுநேரமானது. அப்போட்டியின் மெடல் இன்றும் என் அண்ணனின் வீட்டிலுள்ளது...’’ புன்னகைத்தபடி தேவி பேசுவது இம்பாலிலிருந்து இருபது கி.மீ. தொலைவிலுள்ள யுனைடெட் பயனீர் கிளப்பில் இருந்தபடி.

1988ஆம் ஆண்டு தன் பயணத்தை இவர் தொடங்கியதும் இங்கிருந்துதான். படிப்பிலும் விளையாட்டிலும் பட்டாசாய் வெடித்த தேவியின் கால்பந்து ஆர்வம் அவரது அப்பா நாகேஷோர் சிங்கிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் வீட்டில் இருந்தால், நைஸாக விளையாட ஓடிவிடுவார். அக்கா அல்லது அண்ணன்கள்தான் bagஐ மைதானத்திற்கு கொண்டு வந்து கொடுப்பார்கள்.

‘‘கால்பந்தில் காயங்கள் சகஜம். என் உடம்பில் காயத்தை பார்த்தால் என் அம்மா பத்ரகாளியாகி விடுவார். எனவே, காயங்களை மறைக்க பெரும்பாலும் ஃபுல் ஸ்லீவ்ஸ் அணிவேன். அப்படியும் காயத்தை கண்டுபிடித்துவிடும் பெற்றோரிடமிருந்து என் அண்ணன்களே என்னை அடி விழாமல் காப்பாற்றி வந்தனர்...’’ என பால்யத்தை ஜாலி ரீவைண்ட் செய்யும் பெம்பெம் தேவியின் கால்பந்து வாழ்வு அவரின் 15 வயதில் தொடங்கியது.

1991ஆம் ஆண்டு YAWA கிளப்புக்காக கால்பந்தை உதைப்பதில் இவர் காட்டிய வேகம், நான்கே ஆண்டுகளில் மணிப்பூர் காவல்துறை அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. பெம்பெம் தேவியின் கால்பந்து மீதான வேட்கையும் வெற்றிகளும் அவரின் பெற்றோருக்கு நம்பிக்கை தர, அதற்குப் பிறகு படிப்பு குறித்த கண்டிப்பு பேச்சு எழவில்லை.

‘‘பள்ளியில் எனது பேட்டிகளையும், விளையாட்டு வெற்றிகளையும் கண்ட ஆசிரியர்கள் தனி வகுப்பு, தனித்தேர்வு என காட்டிய நேசத்தையும் அனுசரணையையும் என்றுமே என்னால் மறக்கமுடியாது...’’ என நெகிழ்கிறார். 1994 ஆம் ஆண்டு போட்டியில் இவர் காட்டிய பர்ஃபெக்‌ஷன், தேசிய பயிற்சியாளர்களை ஈர்க்க, அடுத்த ஆண்டே இந்திய அணிக்கு செலக்ட் ஆனார்.

இதன் பிறகு தடபுடலாகத் தொடங்கியது சுக்கிர திசை. இவருடன் பயிற்சியாளர் ஏகேந்திர சிங்கும் கைகோர்க்க, மணிப்பூர் மாநில விளையாட்டு சங்கத்தின் (AMFA) சிறந்த விளையாட்டு வீரர் விருது தேடி வந்தது. ‘‘போட்டியில் கலந்து கொள்ளும் பயணச்செலவு வீரருடையது. ஒரு முறை அம்மாவிடம் பணமில்லை.

கோபம் பிளஸ் விரக்தியில் அவர்மேல் கல்லை எறியலாம் என்று கூட நினைத்தேன். பின் தினக்கூலியான அவரது நிலையைப் புரிந்து கொண்டவளாக வேலைக்கு முயற்சித்தேன்...’’ என்று கம்மிய குரலில் பேசும் பெம்பெம் தேவியின் முகத்தில் அக்காலகட்ட வேதனையின் நிழல்கள். பிறகு தேசிய அணி சாதனைகளால் 1998ம் ஆண்டு மணிப்பூர் காவல்துறையில் காவலர் பணி கிடைக்க, குறைந்த சம்பளம் என்றாலும் நிம்மதியுடன் விளையாட்டில் கவனம் செலுத்தினார்.

விளையாடிய 19 தேசியப் போட்டிகளில் 16 வெற்றிகளை மணிப்பூர் அணிக்கு பெற்றுத் தந்தார். இதில் 9 வெற்றிகளை அணி கேப்டனாக பொறுப்பேற்று சாதித்தார் என்பது கேரியர் பெஸ்ட் ரெகார்ட். இந்திய அணிக்கு 13 ஆண்டுகள் கேப்டனாக இருந்து வழி நடத்தியவர், ஒலிம்பிக்ஸ், உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியைத் தகுதி பெறச்செய்ய தம் குழுவினரின் கருத்து வேறுபாடுகள், மொழிச் சிக்கல்களைக் கடந்து அசராமல் உழைத்தார்.

ஆசிய போட்டிகள், ஏஎஃப்சி போட்டிகளிலும் இந்திய அணி முன்னேறி சாம்பியன் பட்டம் பெற்றதே இவரின் தலைமைப் பண்புக்கு சான்று. 2014ஆம் ஆண்டு மாலத்தீவிலுள்ள ரேடியண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு முதல் இந்திய கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெம்பெம் தேவி, அந்த அணி 2014 - 2015 ஆண்டுகளில் கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்தார். 

மணிப்பூர் மாநிலத்தில் சொற்ப வசதிகளோடு போராடி, தன் இயல்பூக்கத்தால் இந்தியாவிற்கு கவுரவம் சேர்த்த இவரது பெயர் அர்ஜுனா விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் கூட இல்லை என்பது வேதனை. கடந்தாண்டு டிசம்பரில் தன் நேசத்திற்குரிய கால்பந்து விளையாட்டிற்கு குட்பை சொல்ல பெம்பெம்தேவி நினைத்தாலும், அவரது அணியினரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் விளையாடிய போட்டிதான் முதல் பத்தி மேட்டர். 

‘‘இனி என் வாழ்வின் ஒவ்வொரு மைக்ரோ செகண்டையும் கால்பந்துக்காகவே அர்ப்பணிக்கப் போகிறேன். நான் தொடங்கவிருக்கும் கால்பந்து பயிற்சிப் பள்ளி, பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் திறமையான குழந்தைகளுக்கு புதிய விடியல் தரும். இந்த லட்சியத்தில் என் திருமணம் ஒரு பொருட்டேயில்லை...’’ என்கிறார் இந்த மணிப்பூர் இளவரசி.          

பெம்பெம் தேவி ஹிஸ்டரி!

பெம்பெம் தேவியின் செல்லப்பெயர் போபோ. வெளிநாட்டு ரேடியன் கிளப்பில் டைட்டிலை ஜெயித்ததோடு மூன்று கோல்களையும் அடித்தார். 2012ம் ஆண்டு மிட் ஃபீல்டராக தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடி பெற்றது இரண்டு தங்கங்கள். 2014ம் ஆண்டு மட்டும் மணிப்பூர் தேசிய அணிக்கு 17 டைட்டில்களைப் பெற்றுத் தந்தார். சர்வதேசப் போட்டிகளில் ஏறத்தாழ 50 கோல்களுக்கு மேல் அடித்துள்ள பெம்பெம் தேவி, AIFF விருதை முதன்முதலாகப் பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மணிப்பூரில் தலைமைக் காவலராகப் பணிபுரிகிறார்.