மாரடோனாவை முறியடித்த சிறுவன்!



-ரோனி

சாதனை என்றாலே அது ஃப்யூச்சரில் முறியடிக்கப்படுவதற்குத்தானே! இந்த வார்த்தையை கால்பந்தில் கின்னஸ் ரெகார்ட் செய்து அமர்க்களமாக நிரூபித்திருக்கிறான் இங்கிலாந்து சிறுவன். இங்கிலாந்தின் ஹென்லே கல்லூரியைச் சேர்ந்த டாமி பாய்டு என்ற 13 வயது சிறுவன்தான் அந்த கின்னஸ் கில்லி. என்ன சாதனை அது? அர்ஜென்டினா கால்பந்து ஸ்டாரான டியாகோ மாரடோனா, இரண்டு அடி உயரத்தில் முழங்கால், தோள், தலை என ஒருங்கிணைந்து கால்பந்தை உதைத்து விளையாடும் செவன் புட்பால் ட்ரிக் என்பதை கண்டுபிடித்து சாதித்திருந்தார்.

டாமி இந்த ட்ரிக்கை 29.78 நொடிகளில் பத்து முறை செய்து இதற்கு முன்னர் விளையாட்டு வீரர் ஜான் ஃபார்ன்வொர்த் என்பவர் 35.47 நொடிகளில் செய்திருந்த சாதனையையும் அடித்து நொறுக்கி தன் பெயரை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறான். புரஃபஷனல் கால்பந்து வீரராக மாறுவதே என் எதிர்கால லட்சியம் என்ற டாமி, கடந்தாண்டு லூக்கேமியாவால் இறந்த தாத்தாவுக்கு தன் கின்னஸ் சாதனையை அர்ப்பணித்தது நெகிழ்ச்சியான மொமெண்ட்.