Ajith Photography ஸ்பெஷல் ஆல்பம்



-மை.பாரதிராஜா

* அஜித்தின் பர்த்டே கொண்டாட்டம்  போலவே அவரது போட்ரோகிராபி ஹாபியும் செம கூல் செலிபிரேஷன்தான்.  ‘Ajith sir is one of my favourite co stars - chef and photographer! phew! talk about multi tasking!’ என ‘வேதாளம்’ டைமில் அஜித், தன்னை போட்டோ ஷூட் செய்ததை ஸ்ருதிஹாசன் சிலாகித்ததைப் போலத்தான் ‘விவேகம்’ யூனிட்டிலும் இப்போது எனர்ஜியாகப் பேசுகிறார்கள்.

* ‘தீனா’வில் இருந்துதான் போட்டோகிராபி மேல் அவருக்கு ஆர்வம் வந்திருக்கிறது. அந்தப் படத்தின் கேமராமேன் அரவிந்த் கமல்நாதன் அவருக்குள் இருந்த ஒளி ஓவியரைக் கண்டுபிடித்திருக்கிறார். அரவிந்த் கேமராவை கையாளும் ஸ்டைலைப் பார்த்து அஜித்துக்கும் ஸ்டில் கேமரா ஆர்வம் வந்திருக்கிறது.

* கார், பைக் ரேஸ், ரிமோட் விமானம், போட்டோகிராபி, பிரியாணி மேக்கிங், ஃபாரீன் ரெஸிபி ஸ்பெஷலிஸ்ட் என்பதில் தொடங்கி இப்போது இன்டீரியர் எக்ஸ்பர்ட், தோட்டக்கலை வல்லுனர் என அவர் சிறகு விரிக்கிறார்.

* எல்லா வகை கேமராக்களையும் தன் கலெக்‌ஷனில் வைத்துள்ளார். ‘‘அவரோட ஆறேழு படங்கள்ல ஒர்க் பண்ணிட்டேன். ரொம்ப அபூர்வமானவர். என்கிட்ட இல்லாத கேமராகூட அவர்கிட்ட இருக்கும். எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்து கிச்சன் பொருட்கள் வரை எதை வாங்கினாலும் உடனே நெட்ல அதைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்குவார்...’’ என்கிறார் அஜித்தின் ஃபேவரிட் ஸ்டில் போட்டோகிராபரான சிற்றரசு. ‘வீரம்’ ஷூட்டிங்கில் சிற்றரசுவையும் அவர் எதிர்பாராத தருணத்தில் புகைப்படம் எடுத்து, அதில் தன் ஆட்டோகிராப்பையும் போட்டு பரிசளித்துள்ளார்.

* ‘என்னை அறிந்தால்’ ஷூட்டிங்கில் திடீரென பார்வதி நாயருக்கு ஒரு கிஃப்ட் பரிசளித்தார். பார்த்ததும் அது ஒரு போட்டோ ஃபிரேம் என பார்வதிக்கு புரிந்துவிட்டது. பிரித்துப் பார்த்தவர் நெகிழ்ந்து விட்டார். ஷூட்டிங் பிரேக்கில் அவர் மனம்விட்டுச் சிரித்து மகிழ்ந்த அந்தத் தருணத்தைத்தான் அழகாக அஜித் சிறைப்பிடித்திருந்தார். போலவே, இயக்குநர் சிவா, ‘என்னை அறிந்தால்’ ஹாலிவுட் கேமராமேன் டான்மேக் ஆர்தர், ஸ்டன்ட் சில்வா என பலரும் அஜித்தின் கேமராவில் அழகாக மின்னுகின்றனர். 

* தன் வீட்டிலேயே லைட்டிங் வசதியோடு ஸ்டூடியோ ஒன்றை அஜித்  வைத்திருப்பது தெரிந்ததுதான். அதில்தான் சிவபாலன், அப்புக்குட்டி, ஸ்ருதிஹாசன், ஷாம்லி என பலரையும் போட்டோ எடுத்திருக்கிறார். ‘‘அது மறக்க முடியாத மொமன்ட். மதியம் ரெண்டு மணிக்கு தொடங்கின ஷூட் முடிய நைட் பதினொண்ணு ஆகிடுச்சு.

காஸ்ட்யூமும் அவர்தான் அரேன்ஜ் பண்ணியிருந்தார். அக்கா ஷாலினியும் அப்ப கூட இருந்தாங்க. ஒரு நேர்த்தியான போட்டோகிராபர் போல அஜித் ஒர்க் பண்ணினதைப் பார்த்து எல்லாருமே பிரமிச்சிட்டோம்...’’ என்கிறார் ஷாம்லி.

* ‘வேதாளம்’ ஷூட்டிங் கொல்கத்தாவில் நடந்த போது அங்குள்ள ஆற்றங்கரை அழகை சுற்றிச் சுற்றி படம் எடுத்திருக்கிறார். அங்கே சலவைத் தொழிலாளி ஒருவரை போட்டோ எடுத்து அவருக்கே அதை பரிசளித்துள்ளார்.

* மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகிய இருவரும் பிறந்தது முதல் இன்றைய தேதி வரை எல்லா தருணங்களையும் கேமராவில் படம் பிடித்து தேதி வாரியாக பாதுகாக்கிறார். தவிர தனது மற்றும் ஷாலினியின் பால்ய கால புகைப்படங்களை வீடு முழுவதும் நிறைத்திருக்கிறார்.

* போட்டோ ஜர்னலிஸ்ட் ஆகவேண்டும் என்பது அவரது ஆசைகளில் ஒன்று.

* ‘விவேக’த்தில் அஜித்தின் ஒவ்வொரு லுக் போஸ்டர் வரும்போதும் ஊரே அதை அள்ளி அரவணைத்து மகிழ்கிறது. ஆனால் அவரோ கேமராவும் கையுமாக உலகையே ‘கைது’ செய்யத் துடிக்கிறார்!