பெண்கள் மேல் ஏன் இவ்வளவு வன்மம்?



-ஷாலினி நியூட்டன்

அதென்ன Misogyny? பெண்ணை சிறுவயது முதலே தேவையே இல்லாமல் உதாசீனப்படுத்துவதும், எதற்கெடுத்தாலும் அடக்கிவைப்பதும், அவளை ஓர் உயிரற்ற பொருளைப் போல் நடத்துவதும்தான் Misogyny. அதாவது ‘பெண் வெறுப்பு’. இதை எதிர்த்துத்தான் குரல் கொடுக்கிறார் ஆரண்யா ஜோஹர்.

ஒரு பெண்ணின் உடையும், அவளது க்ளீவேஜும்தான் நடக்கும் அத்தனை பாலியல் பிரச்னைகளுக்கும் காரணம் என்பதை எப்படி ஆண் உலகத்தால் அவ்வளவு வசதியாக சொல்ல முடிகிறது? ஏன், நாங்கள் உயிர் இல்லையா? சக மனிதர்கள் இல்லையா? எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டாயம்? நம் நாட்டில் ஏன் நிர்பயா நிலை? இவை எல்லாம் ஆரண்யா ஜோஹர் கேட்கும் வினாக்கள்.

இவரது வீடியோ இன்று உலகம் முழுக்க வைரலாகி இருக்கிறது. ‘‘பிறந்தது கோவா. வளர்ந்தது கேரளா. கொஞ்ச நாட்கள் இலங்கை வாசம். இப்ப மும்பை. +2 முடிச்சுட்டேன். அடுத்து சைக்காலஜி படிக்கணும். அப்பா, அம்மா, அண்ணா, நான்-இதுதான் என் குடும்பம். அண்ணனுக்கும் எனக்கும் சின்ன வயசுலேர்ந்தே ராப் பாடவும், கவிதை எழுதவும் பிடிக்கும்.

அப்படித்தான் இந்த ‘More than mics’ குழுவை ஆரம்பிச்சோம்...’’ நிதானமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஆரண்யா ஜோஹர். ‘‘எங்க குழு மூலமா நிறைய காமெடி நிகழ்ச்சிகள், மியூசிக், கவிதை நேரங்கள் செய்துட்டு இருந்தோம். சில மாதங்களுக்கு முன்னாடி வயதானவர்களுக்கு மரணம் ஒரு பிரச்னை இல்லைன்னு ஓர் உரையாடலை நடத்தினோம். இணையம் முழுக்க அது ட்ரெண்டாச்சு.

இதுக்குப் பிறகுதான் சமூகம் சார்ந்த சில விஷயங்களைப் பேச ஆரம்பிச்சேன். கவிதையா ராப் பாடல் பாணில இதை செய்தேன். அப்படியான ஒரு வீடியோதான் ‘Unspoken: A brown girl’s guide to gender’. சின்ன வயசுலேந்து எனக்குள்ள கொழுந்துவிட்டு எரியற கோபம் இது. ஸ்கர்ட் இப்படிப் போடணும், லோ நெக் உடைகள் கூடாது, தொடை தெரியக் கூடாது, துப்பட்டாவை சரி பண்ணு’னு ஏன் இத்தனை கட்டுப்பாடு? தன்னோட உடலே ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிரச்னைகள் தருதா..? பாலியலும் பாலியல் சார்ந்ததும்தான் நம்ம வாழ்க்கையா..? தாங்கிக்கவே முடியலை.

ஓகே. சரியான உடைகளை பெண்கள் அணியணும். ரைட். அப்புறம் ஏன் அஞ்சாறு வயசு பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்? இந்த வீடியோவுக்கு இந்தியாவுல வரவேற்பு கிடைக்கும்னு தெரியும். ஆனா, அமெரிக்கா, கனடா, லண்டன்ல எல்லாம் பிரபலமாகும்னு நினைக்கலை.

நிச்சயம் இது சந்தோஷத்தை தரலை. உலகம் முழுக்கவே இந்தப் பிரச்னை இருக்குனுதானே இதுக்கு அர்த்தம்? பெண்கள் மேல ஏன் இவ்வளவு வன்மம்? ஒவ்வொரு பெண் குழந்தையும் ஆணோட பாலியல் திருப்திக்காகத்தான் படைக்கப்படறாளா..?’’ ஆவேசத்துடன் கேட்கும் ஆரண்யா ஜோஹர், பிரச்னை குடும்ப சூழ்நிலைகளில் இருக்கிறது என்கிறார்.

‘‘இதை நாம மாத்தணும். பெண் குழந்தைகளை மட்டம் தட்டாதீங்க. ஆணையும் பெண்ணையும் சமமா வளர்க்கப் பாருங்க. தேங்க் காட், என் குடும்பம் அப்படி இல்ல. அப்பா, அம்மா, அண்ணன்னு எல்லாரும் ஆதரவா இருக்கறதாலதான் மனசுல பட்டதை வீடியோல பேசறேன். எந்த உடை அணியணும்னு பெண்தான் தீர்மானிக்கணும். வேறு யாரும் இதுல தலையிடக் கூடாது. எந்த இடத்துல எந்த உடை அணியணும்னு எல்லா பெண்களுக்கும் தெரியும். மத்தவங்க அதை கத்துத் தரவேண்டியதில்லை...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் ஆரண்யா ஜோஹர்.