தனுசு லக்னம் - குரு - சனி சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 88

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

இரண்டு ராஜ கிரகங்கள் ஒன்று சேரும்போது தானாக ரசவாதம் ஏற்பட்டுவிடுகிறது. கொடிகாத்த குமரன் முதல் கோட்டையைக் காக்கும் காவலன் வரை இந்த அமைப்புதான். தனுசு லக்னத்தின் தனாதிபதி, சேவகாதிபதியோடு சேரும்போது குருவின் இயக்கத்தை சனியானது கட்டுப்படுத்த முயற்சிக்கும்.

குருவும் சனியும் ஒன்று சேர்ந்தாலே வழக்கறிஞராகத் திகழ்வார்கள். எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்வார்கள். பழைய பொருட்கள், ஆவணங்கள், புத்தகங்களைப் பாதுகாப்பார்கள். பொதுவாகவே குருவின் ஆதிக்கம் மிகுந்தோர் கம்பீரமாக இருப்பார்கள். எந்த காலகட்டத்திலும் கீழே இறங்க மாட்டார்கள்.

ஆனால், சனி சேரும்போது சட்டென்று விட்டுக் கொடுத்துப் போவார்கள். மடங்கள், கோயில்களில் தர்மகர்த்தா, பொக்கிஷத்தை பாதுகாக்கும் அதிகாரி, இந்து அறநிலையத்துறை அதிகாரி போன்ற பதவிகளில் அமர்வார்கள். கோயில், தெய்வம், கர்ப்பக் கிரகத்தை குருவெனக் கொண்டால், மதிற் சுவரும் கோயில் பராமரிப்புமே சனியின் பணியாகும். குருவும் சனியும் சேர்ந்திருந்தால் சமூகத்தில் தியாகியாக அறியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, அளந்து பேசி அறிவோடும் விவேகத்தோடும் நடந்து கொண்டால் நல்லது. தரம் தாழ்ந்து நடந்து கொண்டால் துரோகியென்று பெயரெடுப்பார்கள். ஏனெனில், சில ராசிகளில் அமர்ந்து பகை பெற்றால் கோள் சொல்லுதல், தன்னைப் பற்றி மிகையாகப் பேசுதல், தானே முக்கிய அதிகார மையம் என்று பிதற்றுதலெல்லாம் நடந்தேறும்.

சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி சலிப்பூட்டுவார்கள். எனவே, சற்றே பொறுமையோடு புகழ்ச்சியை சுருக்கி காரியமாற்றினால் பிறர் நம்மை புகழ்வார்கள். இவ்விரு கிரகங்களும் நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால் பொறுமையாக பதில் சொல்வார்கள். இந்த அமைப்பிலுள்ள பெண்களில் சிலர் வாடகைத் தாயாகவும் இருப்பதுண்டு.

மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் ஏற்படும் பலன்களையும் பார்ப்போமா! தனுசு லக்னத்தில் - ஒன்றாம் இடத்திலேயே குருவும், சனியும் சேர்ந்திருந்தால் இரக்க உணர்வோடு விளங்குவார்கள். எந்த விஷயத்திற்கும் அக்கறையோடு ஆலோசனைகள் கூறுவார்கள்.

தோற்றப் பொலிவை விட அறிவுப் பொலிவிற்கே முக்கியத்துவம் தருவார்கள். யாருக்கு என்ன உதவி என்றாலும் உடனே ஓடிப்போய் உதவுவார்கள். கவிதை, கட்டுரை, நாவல்கள் போன்றவற்றில் முழு ஈடுபாடு காட்டுவார்கள். குலதெய்வம், பரம்பரை, பாரம்பரியம் போன்றவற்றின் வேர்களைத் தேடி ஓடுவார்கள்.

இரண்டாம் இடமான மகரத்தில் குரு, சனியோடு சேர்ந்திருப்பதால் வகுப்பறையில் கற்றுக் கொண்டதைத் தாண்டி யோசிப்பார்கள். சிறுவயதிலேயே வாழ்க்கைப் பாடத்தை படிக்கத் தொடங்கி விடுவார்கள். பல மொழிகளை அறிந்த பண்டிதர்களாகவும் விளங்குவார்கள். ஆனால், படித்தது ஒன்றும் வேலை பார்ப்பது ஒன்றுமாக இருப்பார்கள்.

ஆங்கிலம் மற்றும் தமிழ் ஈறாக பழைய உலக மொழிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். ஆரம்பக் கல்வியை விட கல்லூரியில் சிறப்பாகப் பயிலுவார்கள். தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும். அவசரப்பட்டு யாரையும் எதுவும் கடுஞ்சொல்லால் பேசாமல் இருப்பது நல்லது.

மூன்றாம் இடமான கும்பத்தில் குருவும் சனியும் இணைந்திருந்தால் விஷயங்களைத் தள்ளிப் போட்டபடியே இருப்பார்கள். சரியான வேலைக்காரர்கள் அமையாமல் திண்டாடுவார்கள். போராளியாகத் திகழ்வார்கள். எழுத்துத் திறமையோடு திகழ்வார்கள். அயல்நாட்டுத் தொடர்புள்ள ஆதாயம் நிச்சயம் உண்டு.

வரவுக்கு மீறி செலவு செய்து சிக்கிக் கொள்வார்கள். நாலு வார்த்தை பாராட்டிப் பேசினால் மயங்கி விடுவார்கள். எல்லா விஷயங்களையும் அறிந்தும், புரிந்தும் வைத்திருப்பதால் முகத்தில் ஒரு முதிர்ச்சியிருக்கும். நான்காம் இடமான மீன ராசியில் குருவும் சனியும் இருப்பதால் தாயே தெய்வமாக இருப்பார். ஏனெனில், உங்களின் லக்னாதிபதியான குருவே தாய்க்குரிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறார்.

பங்குச் சந்தையில் கொடிகட்டிப் பறப்பார்கள். பழைய கருங்கல் வீட்டைப்போல் புதுமையாகக் கட்டுவார்கள். பதவியை நேசிக்காமல் அதில் அமர்ந்திருக்கும் மனிதரை நேசிப்பார்கள். ஒரு பக்கம் புகழ் வந்தாலும் இவர்களைப்பற்றி தவறாகப் பேசுவதற்கென்றே ஒரு கூட்டமும் இருக்கும். ஐந்தாமிடமான மேஷத்தில் குருவோடு சனி அமர்கிறது.

பூர்வீகச் சொத்தில் ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். அறிவும், அழகுமான குழந்தைகள் பிறக்கும். நிறைய மந்திரங்களை கற்றுக் கொள்வார்கள். இவர்கள் வாழ்வினில் திடீர் அதிர்ஷ்டம் வந்தபடி இருக்கும். முற்பிறவி குறித்த ஆராய்ச்சிகளில் அடிக்கடி ஈடுபடுவார்கள். தாய்மாமன் கொஞ்சம் சிரமப்பட்டுக் கொண்டேயிருப்பார்.

ஆறாம் இடமான ரிஷபத்தில் இவ்விருவரும் அமர்ந்தால் வீண்பழி, சண்டை சச்சரவு ஏற்பட்டு நீங்கும். இவர்கள் கடன் வாங்கவே கூடாது. இல்லையெனில், மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். பகைவர்களின் தொந்தரவு இருந்து கொண்டேயிருக்கும். எதிரிகள் ஏதேனும் வழக்கை போட்டபடி இருப்பார்கள். தேவையற்ற ஆடம்பரத்தால் கடன் தொல்லையும் மிகும்.

வாகனங்களை இவர்களின் பெயரில் வைத்துக் கொள்ளாமலிருப்பதே நல்லது. ஏழாம் இடமான மிதுனத்தில் குருவும் சனியும் அமர்வதால் திருமணம் தள்ளிப் போகும். தடை வந்தபடி இருக்கும். ஆனால், திருமணம் தாமதமாக நடந்தால் குழந்தை பாக்யம் உடனே கிட்டும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது வாழ்க்கைத் துணையின் ஜாதகத்தை கவனமாகப் பார்த்துத்தான் சேர்க்க வேண்டும்.

வாழ்க்கைத் துணைவர் பலபேருக்கு வழிகாட்டியாகவும் விளங்குவார். அந்நிய தேசத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு மத்திம வயதில் சொந்த தேசத்திற்கு திரும்புவார்கள். பங்குதாரர்களோடு சேர்ந்து தொழிலைத் தவிர்ப்பது நல்லது. எட்டாமிடமான கடகத்தில் குரு உச்சமாகிறார். ஆனால், மறைகிறார்.

இவர்கள் இதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத துறையில் ஈடுபட்டு தங்களின் தனி முத்திரையைப் பதிப்பார்கள். பழைய மரபுக் கலைகளுக்கு புத்துயிர் தருவார்கள். திடீர் பயணங்களை வெறுப்பார்கள். தர்மம் தலைகாக்கும் என்பதை பொன்னெழுத்தில் பொறித்து வைத்திருப்பார்கள். யாரேனும் ஒரு ஆன்மிக குரு இவர்களின் வாழ்க்கையினூடாக வந்து வழிகாட்டியபடி இருப்பார்கள்.

ஒன்பதாம் இடமான சிம்மத்தில் குருவும் சனியும் அமரும்போது ராஜாங்க விஷயங்கள், அரசியல்வாதிகளின் தொடர்புகளை அதிகப்படுத்திக் கொள்வார்கள். அரசாங்கத்திற்கே ஆலோசனை கூறுபவராக விளங்குவார்கள். சொந்த ஊரிலிருந்து அல்லது தந்தையிடமிருந்து விலகி தனித்துவம் பெற்று வளருவார்கள். கடன் இருந்துகொண்டே இருக்கும்.

அவருக்கு என்னங்க குறைச்சல் என்று ஏற்றிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். பத்தாம் இடமான கன்னியில் குருவும் சனியும் இருந்தால் எல்லா வேலைகளிலுமே கறாராக இருப்பார்கள். அறநிலையத்துறை, கல்வெட்டு ஆய்வாளர், பத்திரப்பதிவு, வழக்கறிஞர், மியூசிய காப்பாளர் போன்ற பணிகளில் அமர்வார்கள். ஒரே வேலையில் முன்னேற விடாமல் இந்த கிரக அமைப்புகள் அலைக்கழிக்கும்.

பதினோராம் இடமான துலா ராசியில், பாதக ஸ்தானத்தில் சனியும் குருவும் அமர்ந்திருக்கிறார்கள். சொந்த சகோதரரே இவர்களிடம் வேலை பார்த்து ஆதரவாக இருந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார். இவர்கள் எந்தத் தொழிலை தொடங்கினாலும் அதில் எப்பாடுபட்டாவது முன்னேறுவார்கள். பன்னிரெண்டாம் இடமான விருச்சிகத்தில் குருவும் சனியும் சேருகிறது.

இது பிரயாணம், தூக்கம், மோட்ச ஸ்தானத்தைக் குறிக்கிறது. மகான்களின் ஜீவ சமாதிகள், சித்தர் வழிபாடு என்று ஈடுபடுவார்கள். அரசாங்க அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றாலும் இவரைத் தேடிவந்து ஆலோசனை பெற்றுச் செல்வார்கள். குருவும் சனியும் மிகச் சுமாரான பலன்களை அளிக்கக் கூடியவையாகும்.

நற்பலன்களைப் பெற கிரகங்கள் பகை இடங்களில் அமராது இருக்கவேண்டும். இதனால் எதிர்மறைப் பலன்கள் கூடும். இம்மாதிரி நேரங்களில் சித்தர்களின் ஜீவசமாதிகளுக்குச் சென்று தரிசிப்பது நல்லது. முக்கியமாக இவர்கள் திருவண்ணாமலையில் அமைந்துள்ள சேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதிக்குச் சென்று தரிசித்து வந்தால் அனைத்து நன்மையான பலன்களையும் பெறலாம்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்