மகாபலிபுரம்



அறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

‘‘திஸ் இஸ் அர்ச்சுனா பினான்ஸ். டுவல் மீட்டர் ஹைட். டோன்டி சவன் மீட்டர் லென்த். ஒன்லி ஒன் ராக். ஒன் ஃபிப்டி த்ரீ ஸ்கல்ப்ச்சர்ஸ். அர்ச்சுனா இஸ் ஒன் ஆப் த பாண்டவாஸ். பினான்ஸ் டூ லார்டு சிவா. ஸோ, ஹி கெட் பவர்ஃபுல் பவ் அண்ட் டெஸ்ட்ராய் கவுரவாஸ்.’’

கைவிரல்களில் நடனம் ஆடிக்கொண்டே பீட்டர்விடும் கைடின் விளக்கத்திற்கு, ‘வாவ்’ போட்டு ரசிக்கிறார் வெள்ளை கவுன் அணிந்த அந்த சீனப் பெண். அவருக்குப் பின்னே பள்ளிக் குழந்தைகளும், கல்லூரி மாணவ - மாணவிகளும், குடும்பங்களும், வடநாட்டினரும் வரிசையாக சிற்பங்களில் லயிக்கிறார்கள். எங்கே? மகாபலிபுரத்தில்!

காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட பல்லவர்களின் அற்புதமான துறைமுக நகரம் இது. 1300 வருடங்களுக்கு முன்பே சிற்பங்களையும், கோயில்களையும், மண்டபங்களையும், ரதங்களையும் கல்லிலேயே எழுப்பி சிற்பக் கலையில் மாபெரும் புரட்சி செய்திருக்கிறார்கள். இன்று இந்தியாவில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நகரம் என்றால் அது மகாபலிபுரம்தான்.

தென்னிந்தியாவின் பழமையான கோயில்களில் ஒன்றான கடற்கரைக் கோயில், குடவரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், வராக மண்டபம் போன்றவற்ைற மிஸ் செய்யாமல் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் இங்கே வருபவர்களின் ஆவல்.

ஆனால், இங்கேயுள்ள சிற்பங்களைப் பற்றி போதுமான விவரங்கள் இல்லை. அதனால், நாம் விளக்கம் பெற சிற்ப வழிகாட்டிகள் சங்கப் பொதுச் செயலாளர் பாலனை தொடர்பு கொண்டோம். ‘‘முதல்ல, அர்ச்சுனன் தபசுல இருந்தே ஆரம்பிச்சிடலாம்...’’ என்றார். ‘‘இது ரெண்டு இடத்துல இருக்கு. கம்போடியா நாட்டின் தலைநகர் அங்கர்வாட்ல மணல்ல இந்தக் காட்சியை பல்லவர்கள் பண்ணியிருக்காங்க. அதுக்கு முன்பே இங்க கல்லுல வடிச்சிட்டாங்க.

பாசுபத வரம் வேண்டி சிவனை நோக்கி அர்ச்சுனன் தவம் செய்றதால இந்த இடம் அர்ச்சுனன் தபசுனு சொல்லப்படுது. இதுல அர்ச்சுனனுக்கு ரிஷிகள், பஞ்சபூதங்கள், முக்கோடி தேவர்கள்னு எல்லோரும் காட்சி கொடுக்குறாங்க. அப்புறம், நடுவுல சிவன் தலையில் கங்கை நீர் கொட்டுது. அதுல பாம்புகள் வர்றமாதிரி இருக்கா? அதுக்கு கீழ பத்து யானைகள் நீர் குடிக்கிற காட்சி. இப்படி மொத்தம் 153 சிற்பங்கள் இங்க இருக்கு. எல்லாத்தையும் ஒரே கல்லுல செதுக்கியிருக்காங்க!’’ என்றவர், விஷ்ணு கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

‘‘இதுல ஒரு மான் சிற்பம் இருக்கு பாருங்க. இதை பிரதமர் இந்திராகாந்தி இங்க வந்தப்ப பார்த்தாங்க. அவங்களுக்கு இந்தச் சிற்பம் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. உடனே, அப்ப அடிச்ச பத்து ரூபாய் நோட்டுல இந்த மானை பிரின்ட் பண்ணினாங்க. இன்னைக்கும் பத்து ரூபாய்ல அதை நீங்க பார்க்கலாம்!’’ என ஆச்சரியம் கூட்டினார்.

அடுத்து, வெண்ணை உருண்டைக் கல் பக்கமாக சென்றோம். அதன் அடியிலே ஒரு பெண்மணி உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். நம் போட்டோகிராபர் வெண்ணைக் கல்லை புகைப்படம் எடுக்க ஆயத்தமாகவும், அந்தப் பெண்மணி, ‘‘சார்... நான் உருண்டைக் கல்லை மறைக்கிறேனா?’’ எனக் கேட்டார். ‘‘கல்லு ரொம்ப பெரிசும்மா. அதை எப்படி உங்களால மறைக்க முடியும்?’’ என்றதும் அருகிலிருந்தவர்கள் வெடுக்கென சிரித்துவிட்டார்கள்.

பாலன் தொடர்ந்தார். ‘‘கிருஷ்ணர் வெண்ணை விரும்பிச் சாப்பிடறதால இப்ப இதை ‘கிருஷ்ணா பட்டர் பால்’னு சொல்றாங்க. இந்தப் பாறை இரண்டடிதான் கீழ ஒட்டிட்டு இருக்கு. பிரிட்டிஷ் காலத்துல ஏழு யானைகள் கொண்டு இழுத்துப் பார்த்திருக்காங்க. ஆனா, கீழ விழலையாம். அப்படியே விட்டுட்டாங்க...’’ என்றார்.

வராக மண்டபத்தில் மகாபலி சக்கரவர்த்தி சிற்பம் இருப்பதைப் பார்த்தோம். ‘‘மகாபலி இங்கதான் பிறந்தார் என்பதற்கு சாட்சி இதுதான். அப்புறம், இது திருமூர்த்தி குகைக் கோயில். படைத்தல், காத்தல், அழித்தல்னு மூன்று தெய்வத்துக்கான சிற்பங்களும் இருக்கு...’’ என்றவர், குரங்கு பேன் பார்க்கும் சிற்பத்தையும், பால் கொடுக்கும் சிற்பத்தையும் நம்மிடம் காட்டி, ‘‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை அப்பவே உணர்த்தியிருக்காங்க!’’ என்றார்.

திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில். அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள். கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது.

இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கிறார்கள். இவை இரண்டையும் கடற்கரைக் கோயில் என்கிறார்கள் ‘‘இது யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமா விளங்குது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலை இரண்டாம் நரசிம்மவர்மன் கட்டியிருக்கார்.

இதுல, 7 கோயில்கள் இருந்திருக்கு. இதை ‘செவன் பகோடோஸ்’னு சொல்வாங்க. அதாவது, பகோடான்னா இந்தியில கோயில்னு அர்த்தம். மற்றவை கடல்ல மூழ்கி இருக்கலாம். அப்புறம், இது திவ்ய தேச கோயில்ல ஒண்ணாகவும் வருது. பிண்ட மகரிஷி கடலுக்கு அடியில் இருக்கும் விஷ்ணுவைப் பார்க்கணும்னு கடல் நீரை இறைக்கிறார்.

அப்ப, இறைவன் அவரை சோதிக்க வயசான கோலத்துல வந்து மகரிஷியிடம் பசிக்குதுனு கேட்கிறார். உடனே, மகரிஷி உணவு வாங்க கிராமத்துக்குள் போக இறைவன் கடல்நீரை இறைக்கிறார். மகரிஷி வந்து பார்க்கும் போது அங்கு வயசானவரைக் காணலை. அதனால, இந்தக் கடல் ராமேஸ்வரத்துக்கு சமமான சக்தி வாய்ந்ததா கருதப்படுது. இந்த கடல் நீரை தலையில் தெளிச்சாலே புண்ணியம்.

இங்க, விஷ்ணு படுத்திட்டு இருக்கிற காட்சியை சிற்பமா பண்ணியிருக்காங்க. அடுத்து, பதினாறு முகம் கொண்ட லிங்கம் இருக்கு. அதாவது, கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், உண்மை, துணிவு, பொறுமை, பொன், பொருள், புகழ், நிலம், நலொழுக்கம், நல்லெண்ணம், முயற்சி, வெற்றினு பதினாறும் பெற்று பெருவாழ்வு என்பதைக் குறிக்கும் விதமாக சிவனை அமைச்சிருக்கார் பல்லவ ராஜா.

சூரிய ஒளியும் நேரடியா படும்படியா வச்சிருக்காங்க. அப்படியிருந்தா எல்லாமே வெற்றியாம். இங்க சோமாஸ்கந்தரும் இருக்கார். பிள்ளையார் சிலை ஆரம்பத்துல இல்லை. பல்லவர்கள் வாதாபி வரை படையெடுத்துப் போய் வெற்றி ெபற்ற பிறகுதான் பிள்ளையார் சிலையை எடுத்து வந்திருக்காங்க...’’ என நீண்ட விளக்கம் தந்து விடைபெற்றார்.

ஐந்து ரதத்தை நோக்கி விரைந்தோம். செல்லும் வழிகளில் நிறைய சிற்பக் கலைஞர்கள் சிலைகளைச் செதுக்கியபடியே இருப்பதைப் பார்க்க முடிந்தது. விநாயகர் சிலையில் மும்முரம் காட்டிய அரிகிருஷ்ணனிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘இது மலேசியா ஆர்டர். பதினைந்து நாள்ல முடிச்சி கொடுக்கணும்.

தமிழர்கள் மட்டுமல்ல... இங்க வர்ற வெளிநாட்டினரும் ஆர்டர் கொடுக்குறாங்க. ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் சிலை கூட செஞ்சி அனுப்பியிருக்கேன். சிலர் அவங்க புகைப்படத்தைக் கொடுத்து அதேமாதிரி சிலை செஞ்சு அனுப்பச் சொல்லி பணம் கொடுத்துட்டுப் போவாங்க. எல்லாத்தையும் பண்ணி அனுப்பிடுவேன்...’’ என்கிறார் சிற்பத்தை செதுக்கிக் கொண்டே.

ஐந்து ரதத்தில் நான்கு ரதங்கள் ஒரே கல்லால் செதுக்கப்பட்டவை. முதல் கோயில் திரௌபதியையும், இரண்டாவது கோயில் அர்ச்சுனனையும், மூன்றாவது பெரிய கோயில் பீமனையும், நான்காவது தர்மனையும், ஐந்தாவது நகுலன், சகாதேவனையும் குறிக்கிறது. இரவு நெருங்கியது. மகிஷாசூரமர்த்தினி குகை, லைட்ஹவுஸ் எல்லாம் போய்விட்டு கடற்கரை பக்கம் ஒதுங்கினோம். குடும்பத்தினர் குழந்தைகளுடன் குதூகலமாக இருந்தனர். நிலவின் ஒளியில் அழகாய் மின்னுகிறது ஏழாம் நூற்றாண்டு!           

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

மாமல்லபுரம் டேட்டா

* இங்கேதான் மகாபலி அரசர் பிறந்தார் என்றும், அவர் வாமனன் அவதாரம் எடுத்து வந்த விஷ்ணுவால் கொல்லப்பட்டதாகவும், இதனாலேயே மகாபலிபுரம் என்றானதாகவும் குறிப்புகள் தருகிறார்கள் வழிகாட்டிகள். அதன்பிறகு வந்த பல்லவ அரசர் முதலாவது நரசிம்மவர்மன் மாபெரும் மல்யுத்த வீரனாகத் திகழ்ந்ததால் அவன் ‘மாமல்லன்’ என அழைக்கப்பட்டான். அதனால் பின்னாளில் மாமல்லபுரம் என அழைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

* இங்குள்ள சிற்பங்கள் 7 மற்றும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இதனை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ!

* வருடத்துக்கு சுமார் மூன்று லட்சம் டூரிஸ்ட்டுகள் வந்து செல்கிறார்கள்.

* உள்நாட்டினருக்கு ரூ.30ம், வெளிநாட்டினருக்கு ரூ.500ம் கட்டணமாக வசூலிக்கிறார்கள். பதினைந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு டிக்கெட் கிடையாது. இதில், கடற்கரை கோயில், ஐந்து ரதம் இரண்டையும் பார்வையிட மட்டுமே 30 ரூபாய். மற்றவற்றுக்கு தொகை கிடையாது. வீடியோ எடுக்க தனியாக 25 ரூபாய் கட்டணம்.

* காலை ஆறு மணி முதல் மாலை 6 வரை பார்வையிடலாம். சென்னையிலிருந்து நிறைய பஸ்கள் இருக்கின்றன.

* டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி வரை தமிழ்நாடு சுற்றுலாத் துறை இங்கே நடனத் திருவிழா நடத்தி வருகிறது.

பிரச்னைகளும் கோரிக்கைகளும்...

* பஸ் ஸ்டாண்ட் இல்லை என்பது பெரிய குறை. இதற்காக பல கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
* போதுமான கழிப்பறைகள் இல்லை. இருக்கும் கழிப்பறைகளும் அசுத்தமாக இருக்கின்றன.
* சுற்றுலா அலுவலர், தொல்லியல் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் வேலைகள் நடப்பதில் சுணக்கம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் மக்கள்.
* சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. சென்ற வருடம் வெளிநாட்டு டூரிஸ்டிடம் பணம் பறித்ததும், கடந்த மாதம் ஜெர்மனி பெண் பாலியல் பலாத்கார சம்பவமும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலிக்குகை

* மாமல்லபுரம் செல்லும் வழியிலேயே 4 கிமீக்கு முன்னால் இந்தப் புலிக்குகை வந்துவிடுகிறது.
* 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் குகை, 11 புலி வடிவங்களுடன் ஒரு திறந்தவெளி கலையரங்கம் போல் காட்சியளிக்கிறது. இங்கே, பல்லவர்கள் காலத்தில் கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
* கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இதன் அருகே இருந்த ஒரு பாறை முற்றிலுமாக வெளிப்பட்டது. அதை ஆய்வு செய்த தொல்லியல் துறை, இங்கு சங்ககால முருகன் கோயில் இருந்ததைக் கண்டறிந்துள்ளது.