COFFEE TABLE



சைலன்ட் கார்னர்

கல்கியின் பொன்னியின் செல்வன்

- சித்திரக்கதை
சித்திரம்: ப.தங்கம் [தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு, மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் - 613501. விலை ரூ.200. தொடர்புக்கு: 94434 85550]

உருளும் காலம் உறையும் அற்புதங்களைச் செய்பவை புத்தகங்கள். சித்திரக்கதைகள் படிக்கிற அனுபவத்தை இன்றைய குழந்தைகள் இழந்து வருவது தலைமுறை துயரம். ஏராளமான சேனல்களும், கணினிகளும் திரிக்கும் ஒளிக் கயிறுகளால் தாவிக் குதிக்கும் குழந்தைகள் சீக்கிரமே தங்களுக்கான தேவ உலகத்தை இழந்துவிடுகிறார்களோ எனப் பயமாக இருக்கிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் புழுதி வாசத்தையும், புத்தக வாசத்தையும் அறிமுகப்படுத்துவது நமது முதல் கடமை. சிறியோர் முதல் பெரியோர் வரை பார்க்க, படிக்கத்தக்கதாக கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக்கதை வெளிவந்திருக்கிறது. சித்திரக்காரர் ப.தங்கத்தின் பணி அளப்பரியது. கல்கியின் கதைக் களனை சித்திரத்திற்குள் கொண்டு வந்து சேர்ப்பது சுலப காரியமில்லை.

பெரியவர் தங்கம் செய்திருப்பது வாழ்நாள் சிறப்பு. வரலாற்றின் தீப்பந்தங்களை தன் மெருகூட்டும் சித்திரங்களின் வழியாக ஏந்திச் செல்கிறார். ஓய்வெடுக்கும் தருணத்தில் தங்கம் செய்திருப்பதை தமிழ் உலகம் வணங்க வேண்டியது அவசியம். கண்கள் இடுங்கி படிக்க வேண்டிய பொன்னியின் செல்வனை சரேலென அழகு சித்திரக் கோடுகளில் அனாயாசமாக செய்து முடிக்கிறார். தங்கம் அவர்களின் படைப்புக்கு மரியாதை செய்ய வேண்டிய கடமை தமிழ்ச் சமூகத்துக்கு இருக்கிறது. தவிர்க்க முடியாத
புத்தகம்.

ப்ரியங்கா வெயிட்டிங்

டபுள் ஹேப்பியில் மிதக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. தனது purple pebble pictures சார்பில் தயாரித்து நடித்த மராத்திய படமான ‘வென்டிலேட்டர்’ இயக்குநருக்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷம் ஒருபுறம்... இன்னொன்று, அவர் நடித்த  ஹாலிவுட் படமான ‘பே வாட்ச்’ சம்மர் ரிலீஸ் என அறிவித்து, நியூ லுக் போஸ்டரும் வெளியிட்டுவிட ப்ரியங்காவிற்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த ப்ரீமியர் ஷோவில் படத்தைப் பார்த்த சக நடிகர்கள் ப்ரியங்காவை டன் கணக்கில் புகழ்ந்துள்ளனர். ‘பே வாட்ச்’சில் கிளாமரில் பிச்சு உதறியிருக்கும் ப்ரியங்கா, ரசிகர்களின் பாராட்டுக்காக வெயிட்டிங்!

பாவம் ஆண்கள்!

இந்தியாவில் இளம் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது மத்திய அரசின் புள்ளியியல் துறை. இதன்படி 1971ல் ஆயிரம் ஆண்களுக்கு 961 என்ற விகிதத்தில் இருந்த இளம்பெண்களின் எண்ணிக்கை 2011ல் 939 ஆக குறைந்திருக்கிறது. இப்படியே போனால் 2021ல் 904 ஆகவும், 2031ல் 898 ஆகவும் படுத்துவிடுமாம். ஆனால், இளைஞர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம். இது குடும்ப உறவுகளில் பல்வேறு சிக்கல்களை விளைவிக்கும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

இனி நறுக் ஈஸி

நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் உள்ள வகை வகையான பழங்களை பந்தியில் பரிமாறுவது என்பது ஒரு கலை. அதனை அழகுற நறுக்குவது என்பது இன்னொரு தனிக்கலை. அந்தக் கலையை வெகு எளிதாக 8 நொடிகளில் அழகாக கற்றுத்தருகிறது ஃபேஸ்புக்கின் blossom என்ற பக்கத்தில் இடம் பெற்றுள்ள வீடியோ ஒன்று.

‘வாழ்க்கை கடினம்தான். ஆனால், பழங்களை வெட்டுவது அவ்வளவு கடினமல்ல’ என்ற தலைப்பில் உள்ள அந்த வீடியோவில் ஃபுருட்ஸ் கட்டிங்கை செய்முறையுடன் விளக்க... 30 லட்சம் பார்வையாளர்கள், 3 லட்சம் லைக்குகள், 4 லட்சம் ஷேர்கள் என வைரலாக அதிர்கிறது அந்த வீடியோ. இம்முறையில் பழங்களை வெட்டுவதினால் நிறைய சத்துக்கள் வீணாகும் என்று கமென்ட்கள் களைகட்டுகின்றன.

ரீடிங் கார்னர்

காற்று, மணல், நட்சத்திரங்கள்

அந்த்வான் து செந்த் - எக்சுபெரி / தமிழில்: வெ.ஸ்ரீராம் (க்ரியா, புது எண்.2, பழைய எண்.25, 17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை -41. விலை ரூ.190/- தொடர்புக்கு: 7299905950)

‘குட்டி இளவரசன்’ தந்த எக்சுபெரியை மறக்க முடியாது. அந்த இளவரசன் கேட்ட சின்னஞ்சிறு கேள்விகளுக்கு விடை அறியாமல் விழித்திருந்தது, அருமையான காலம். எக்சுபெரி எப்போதும் மொழி மயக்கத்தில் கட்டுண்டவர் இல்லை. அவரது சுயசரிதை அடிப்படையிலேயே நாவலின் இனிய பயணம் தொடங்குகிறது. விமானங்களின் செயல்பாட்டில் இருந்த, விஞ்ஞானம் சரிவர பொருந்தி வராத காலக்கட்டத்தில் எழுதியிருக்கிறார்.

வானத்திலிருந்து பார்த்தால் எல்லாமே அழகு. விமானங்கள் பறக்கும்போது தானே பறப்பதுபோல் உணர்வதுதான் நல்லபடியாக அவை சென்றடைவதற்கான காரணங்கள் என்பார்கள். நிச்சயமாக கதை சுவாரஸ்யம், சாகசம், ரம்மியம் நிறைந்த வேலை என உணர வைக்கிறார். குட்டி இளவரசன் எழுதப் போவதற்கான ஆரம்ப சாத்தியங்கள் இந்த நாவலிலேயே தெரிய ஆரம்பிக்கிறது.

பொதுவாக எக்சுபெரியின் படைப்புகளை மூளை கொண்டு அணுக முடியாது. உணர்வுகளின் சூழ்நிலையில் இன்னும் சுவை தருகிற இதம் சொல்லி மாளாது. நேரடியாக பிரெஞ்சிலிருந்து வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கிறார். அப்படியே கன்னிமை மாறாமல் மொழி வந்திருக்கிறது. மிகச் சிறந்த நாவல். படித்துப் பார்த்தால் எக்சுபெரியின் ஒரு துண்டு வார்த்தைக்குக் கூட பொருள் இருப்பது புரியும்.