தூய காற்றுக்காக போராடும் வக்கீல் டீம்!



-ச.அன்பரசு

டெல்லியிலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரே நேரத்தில் அந்த வாட்ஸ்அப் மெசேஜ் சென்றது. படித்த சிலர் முகம் சுளித்தார்கள்; சிலர் புதுசா இருக்கே! என வியந்தனர்; சிலர், எங்களுடைய நம்பிக்கையை எப்படி நீங்கள் தடுக்கலாம் என ஆவேசமானார்கள். சரி, அந்த மெசேஜில் அப்படி என்னதான் இருந்தது?

சிம்பிள். ‘பட்டாசுகள் காற்றை மாசுபடுத்துவதால் இவ்வாண்டு பட்டாசு வெடிப்பதில்லை என உங்கள் குழந்தையோடு இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்பதுதான் அந்தச் செய்தி. உச்சநீதிமன்றத்தில் அரசமைப்புசட்டம் 21 படி, தூய காற்றுக்கு அரசுதான் பொறுப்பு என அரசு எந்திரத்தையே கூண்டிலேற்றி, பதில் சொல்லும் நிர்ப் பந்தத்தை ஏற்படுத்தியது சவுரப் பாசின், கோபால் சங்கரநாராயணன், அமித் பண்டாரி ஆகிய 3 வழக்குரைஞர்களின் கூட்டணி போட்ட மனுதான்.

‘‘நம்மைச் சுற்றியுள்ள பலரும் இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இருமல், தொற்றுநோய்கள், எரிச்சல் உள்ளிட்ட கோளாறுகளுக்கு காரணம், நாம் சுவாசிக்கும் மாசுபட்ட காற்றுதான் என்பதை அவர்கள் அறிவதில்லை...’’ என புன்னகையோடு ஆழமான விஷயத்தை அழகாக பேசுகிறார் உச்சநீதிமன்ற பயிற்சி வழக்குரைஞரான கோபால் சங்கரநாராயணன்.

‘‘பட்டாசுகளை தடை செய்வது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இப்புகார் மனுவில் பயிர்களை வயலில் எரிப்பது, கட்டுமான மாசு உள்ளிட்ட சிக்கல்களையும் விரிவாகப் பேசியுள்ளோம்...’’ என சீரியஸ் மோடுக்கு தாவுகிறார் அமித் பண்டாரி. 2014ம் ஆண்டு காற்று மாசு பிரச்னையை கோபால் கையிலெடுத்து தீவிரமாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

‘‘டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசால், எங்கள் குழந்தைகளின் நுரையீரலை காக்க வேறிடம் நோக்கி செல்லலாமா என்ற எண்ணம் மனதிலிருந்தது. மாசுபடுத்தலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதபோது, மக்கள் தாமே நிலைமையை சீராக்க முனைவதில் என்ன தவறிருக்கிறது? இதனால்தான் நீதிமன்றத்தை அணுகினேன்...’’ தீர்க்கமான குரலில் பேசுகிறார் சவுரப்.

இன்றும் பண்டிகைக் காலங்களில் இவரது மனைவி மற்றும் குழந்தைகளின் உடல்நலனை பாதுகாக்க அவர்களை லண்டனுக்கு அனுப்பிவிடுகிறார். பட்டாசுகளில் மாசுபாடு, ஒலி குறித்த பல்வேறு புகார்களுக்கு வழி கிடைத்தது 2005ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த ‘தீபாவளியன்று குறிப்பிட்ட நேரம் வரை பட்டாசுகளை வெடிக்கலாம்’ என்ற ஆணை மூலம்தான்.

மாசுபடுதலைப் பற்றிய புரிந்துணர்வின்றி இந்த ஆணையையும் ஒத்திவைக்க இந்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ‘‘தீபாவளியின்போது ஒரு க்யூபிக் மீட்டர் காற்றில் 999 மைக்ரோகிராம் மாசு துகள்கள் அதிகரிக்கும். இவை அடுத்த சில வாரங்களுக்கு நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும்...’’ என அதிர்ச்சித் தகவலைக் கூறுகிறார் வழக்குரைஞர் கோபால்.

‘‘பெரியவர்களின் நுரையீரல்கள் காற்றிலுள்ள மாசுக்களை தாங்கிப் பிழைக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி தீர்ப்பது? சீனாவின் பெய்ஜிங் நகரைப் போல காற்று மாசு உச்சம் தொடும் முன்பே விழித்துக் கொள்ளவேண்டும்...’’ என்கிற சவுரப்பின் குரலில் யதார்த்தத்தின் தகிப்பு அதிகம்.

முதலில் என்ஜிஓ தொடங்கி அதன் மூலம் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் மூன்று நண்பர்களின் திட்டம். ஆனால், இந்திய அரசின் ஆமைவேக நடவடிக்கைகள்தான் இவர்களை வழக்கு பதிவு செய்யத் தூண்டியுள்ளது. ‘‘காற்று மாசுபடுதல் என்பது முக்கிய பிரச்னையாக மாறாதது வேதனை.

காற்று மாசு குறித்து இன்னும் நாம் அலட்சியமாக இருந்தால் பெய்ஜிங்கில் மாஸ்க் அணிந்து மக்கள் நடமாடும் நிலை இந்தியாவில் ஏற்பட அதிக காலமாகாது...’’ என உறுதியாகப் பேசுகிறார் வழக்குரைஞர் கோபால். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 4 இடங்களில் செய்த ஆய்வில் காற்றில் மாசுகளின் துகள் சதவிகிதம் அதிகரித்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

வயலில் பயிர்களை எரிக்கும் மாசுத்துகள் காற்றில் தேங்கியது மாசுபடுதலுக்கு முக்கியக் காரணம் என வானிலை ஆராய்ச்சி மற்றும் காற்று மாசு ஆராய்ச்சி (Safar) நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ‘‘காற்று மாசுபடுதல் குறித்து அரசு கடுமையான விதிகளை வகுக்கவேண்டும். இதற்கான சரியான ஆலோசனைகளைத் தருவதே எங்கள் லட்சியம்...’’ மூன்று வழக்கறிஞர்களும் கோரஸாக சொல்கிறார்கள்.         

உயிரிழப்பு ஏற்படுத்தும் மாசு!

உலகில் ஏற்பட்ட காற்று மாசு இறப்பு - 4.2 மில்லியன் (மாசு அளவு PM2.5)
சீனா மற்றும் இந்தியாவில் உயிரிழப்பு - 52%
ஓசோன் பாதிப்பால் ஏற்பட்ட இறப்பு - 2,54,000 (இந்தியாவில் மட்டும் 42%)
ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் காற்று மாசு இறப்பு - 1.1. மில்லியன்
(Health Effects Institute’s (HEI) - 2015, State of Global Air Report 2017 தகவல்படி)

காற்று மாசில் முன்னணி!

இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம் (காஸியாபாத், அலகாபாத், பரேலி), ஹரியானா (ஃபரிதாபாத்), ஜார்கண்ட் (ஜரியா), பீகார் (பாட்னா) ஆகியவை காற்று மாசில் முன்னணியில் இருக்கின்றன.

காற்று மாசு உச்ச அளவு - 268 µg/m3
ஏற்படும் நோய்கள் - மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம்.
(Greenpeace 2015 தகவல்படி)