ஆக்ரோஷமான அரசியல் சினிமா!



இது அடங்காதே சீக்ரெட்ஸ்

-நா.கதிர்வேலன்

‘‘படத்தின் பெயர், ‘அடங்காதே’. யாருக்கும் அடங்காதேன்ற அர்த்தத்தில் இது வராது. நம்மளைப் பார்த்து ஒருத்தன் கோழை, வீரன், நல்லவன், கெட்டவன்னு ஏதோ ஒண்ணு நினைப்பான். இப்படி எதிலும் அடங்காமல் இருக்கிறவன்தான் என் ஹீரோ. அதாவது மத்தவங்க நினைக்கிறதிற்குள் நாம் அடங்கிடக்கூடாது என்பதுதான் விஷயம்.

ஒருத்தன் கடைசி வரைக்கும் கஷ்டப்படுவான்னு நினைப்போம். அவன் பணக்காரனா முன்னாடி வந்து நிற்பான். ஜெயிக்கமாட்டான்னு முடிவுக்கு வந்திருப்போம். ஆனால், அவன் வெற்றிகள் குவிப்பான். மத்தவங்க எண்ணத்திற்குள் அடங்காதே, யார் வரையறைக்குள்ளும் அடங்கிடாதே. நீ யாருங்கிறதை நீயே முடிவு செய். இதுதான் ‘அடங்காதே’ படம்...’’ விறுவிறுப்பாகப் பேசுகிறார் புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி. அமரர் இயக்குநர் மணிவண்ணனின் அணுக்க சீடர்.

படம் என்ன வகையில் இருக்கும்..?
இன்னிக்கு சூழ்நிலையில் இந்தக் கதையை சொல்லியே ஆகணும். நம்மகிட்டே காதல் படங்கள் இருக்கு. காமெடிகளும் காணக் கிடைக்குது. எக்கச்சக்கமாக பேய்க்கதைகளும் இருக்கு. இப்படி எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அரசியல் பேசுறது கம்மியாகிவிட்டது. தனிமனிதன் சார்ந்தே அதிகம் பேசுறோம்.

என் குருநாதர் மணிவண்ணன் அரசியல் நையாண்டி செய்வார். அந்தக் கிண்டலைத் தூக்கிட்டு அரசியலை தீவிரமாகச் சொன்னா எப்படியிருக்கும்னு யோசித்து எழுதி படமாக்குகிற கதை இது. படம் முழுக்க முழுக்க அரசியல்தான். இப்ப இருக்கிற அரசியலை எந்த சமரசமும் இல்லாமல் 100% சொல்லிடணும்னு நினைச்சு செய்திருக்கோம். இது சென்றடைய வேண்டிய அரசியல். கேட்க வேண்டிய அரசியல். சொல்ல முடியுமான்னு தயங்குகிற அரசியலையும் பேசிட்டோம்.

இதில் எப்படி ஜி.வி. பிரகாஷ்..?
‘பென்சில்’ படத்திற்கு நான்தான் வசனம் எழுதினேன். முதல் நாள் ஜி.வி. கேமராவுக்கு முன்னாடி நிற்கும்போது நான்தான் வசனம் சொல்லிக் கொடுத்தேன். அதுல ஒரு பிரியம் உண்டு. அவர் உலகத்திலே உரிமை எடுத்து திட்டுறது என்னைத்தான். நெருங்கிய நண்பனாகி விட்டதால் வந்த உரிமை. மத்தவங்க மாதிரி இல்லை. அடுத்த நாள் சீனுக்கு இன்னிக்கே அவர் ஸ்டுடியோவிற்கு போயிடுவேன்.

‘இதுதான் சீன். வாங்க டார்லிங், பேசலாம், என்ன செய்வோம்’னு பேச ஆரம்பிச்சிடுவேன். அவரோடு வித்தியாசமான வியூகம் ‘அடங்காதே’யிலிருந்து ஆரம்பிக்கிறது. என்னை புரடியூசர்கிட்டே ‘இவர் டைரக்ட் செய்தால் நல்லாயிருக்கும்’னு சுட்டிக்காட்டியது அவரே. தேங்க்ஸ் டூ பிரகாஷ்! மத்தவங்ககிட்டே இந்தக் கதையை சொல்லியிருக்க முடியுமான்னு தெரியலை.

நண்பன் என்பதால் என்னால் சொல்லவும், அவரால் நடிக்கவும் முடிந்தது. இதுவரைக்கும் பார்த்த ஜி.வி.இதுல இருக்கமாட்டார் என உத்தரவாதம் தரமுடியும். இதுவரைக்கும் ஜி.வி.க்கு காமெடி வரும், டான்ஸ் தெரியும் என்பது தெரிய வந்திருக்கிறது. இவ்வளவுதான் தெரியுமா என்பதற்கு மேல் இதில் தெரியும். இதில் கதைக்கு அவர் கொடுத்திருக்கிற முக்கியத்துவம் அவ்வளவு தூரம் இருக்கிறது.

சரத்குமார் வெகுநாளைக்குப் பிறகு நடித்திருக்கிறார்...
அவரிடம் கதை சொல்ல முற்படும்போதெல்லாம் வேண்டாம் என்றே சொன்னார். அவருக்கான கதையின் இடம் எனக்கு அவசியமாக இருந்தது. ஒரு தடவை ‘சார், கதை கேளுங்க. பிடிக்காவிட்டால் வேண்டாம்’ எனச் சொன்னேன். வரச் சொல்லி கேட்ட பிறகு ‘நீங்க போங்க, புரடியூசர்கிட்டே பேசிக்கிறேன்’ என்றார்.

நான் ஆபீஸ் வருவதற்குள் புரடியூசர்கிட்டே ‘பையன் கதை சொல்லி அசத்திட்டான். அதற்கான கெட்டப்புக்கு எனக்கு ஐடியா வந்திடுச்சு. கண்டிப்பாக பண்றேன்’னு போன் பண்ணிச் சொல்லியிருக்கார். அவர் போர்ஷன் கொஞ்சம் பாக்கியிருக்கிறது. அதற்காகவே தாடி வைத்திருக்கிறார். இவ்வளவு வெற்றி உடையவர், இன்னமும் ஈடுபாட்டோடு சினிமாவில் இருக்கிறார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் ‘சாம்ஸ், இது உங்க தாடி. சீக்கிரம் முடிங்க’னு பிரியமாகச் சொல்வார்.

சுரபி ரொம்ப அழகாக இருக்காங்க...
அவங்களுக்கான இடமும் கணிசமாக இருக்கு. இன்னிக்கு தெலுங்கில் அவங்க கோயிங் ஸ்டெடி. பின்னி எடுக்கிறாங்க. தனுஷ், ஜெய் கூட தமிழில் செய்திருக்காங்க. என்ன, மொழிப் பிரச்னைதான். அவங்க ஆங்கிலத்தில் கெட்டி. இந்தி தெரியும். நமக்கு அந்த இரண்டும் சுட்டுப் போட்டாலும் வராது. ஆனாலும் நடிப்பில் குறை வைக்கலை.

மந்திரா பேடியை கொண்டு வந்திட்டிங்க...
அப்படி ஒரு கேரக்டர் இருக்கு. என் மனதில் அதற்கு முதலில் இருந்தது விஜயசாந்தி. அவங்க படத்தை இப்பப் பார்த்தேன். எனக்கு வேறு ஒருத்தரை தேடணும்னு தோணிச்சு. நான் இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் நிறைய சினிமாக்காரர்களை ஃபாலோ பண்றேன். அவர்களில் மந்திராவும் ஒருவர். அவர் சமீபத்தில் ஒரு படம் போட்டிருந்தார்.

போலீஸ்னா எக்ஸ்ட்ரா ஒரு பிட் சதை உடலில் இருக்கக்கூடாதுன்னு நினைப்பேன். அப்படியிருந்தார் அவர். பல பிரயத் தனங்களுக்குப் பிறகு அவரைத் தொடர்பு கொண்டேன். ‘கதை சொல்லுங்க, வசனம் சொல்லுங்க...’ என்றார். அனுப்பியதும் ராத்திரி என் போனில், ‘அருமையா இருக்கு... வந்திடுறேன். என் மானேஜர் நிறையத் தொகை சொல்வாரு. கண்டுக்காதீங்க’னு சொல்லிட்டு கம்மி தொகைக்கே நடிச்சுக் கொடுத்தார்.

காசிக்கு போயிருக்கீங்க...
இந்த சமயத்திற்கு, காசிதான் உச்சம். அது புனித நகரமும் கூட. படமே அங்கேதான் எடுக்க முடியும். அதற்கான காரண காரியங்கள் அங்கேதான் நடக்குது. ஆனால், காசியில் படம் எடுப்பது கடினம். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பக்கத்தில் காவி உடையில் பிரகாஷ் ஒரு பெண்ணை துரத்திட்டு ஓடுவது மாதிரி எடுத்தோம். மறைவான வேற இடத்திலிருந்து கேமரா இயங்கியது.

ஒண்ணரை லட்சம் பக்தர்கள் ஒரு முக்கியமான அன்னதானத்திற்கு கூடியிருக்காங்க. 2500 போலீஸ்காரர்கள் பாதுகாப்பில் இருக்காங்க. அந்த இடத்தில் கூட படப்பிடிப்பு நடந்தது. போலீஸ் வந்து ஜி.வியை பிடிச்சுக்கிட்டாங்க. இது சினிமான்னு புரியவைச்சு, அங்கேயிருக்கிற ஆபீஸர்களின் துணையில் மீட்டோம்.

அப்புறம் சந்தோஷப்பட்டு இரண்டு மணி நேரம் டைம் கொடுத்தாங்க. அந்த இடங்கள் தமிழ் சினிமா பார்க்காத புதுசுன்னு சொல்வேன். பி.கே. வர்மா காசியின் அழகை, பிரமாண்டத்தை பூர்ணமாக கொண்டு வந்திருக்கிறார். அது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பது காசிக்கு போனவர்களுக்குத் தெரியும். ஆக்ரோஷமான ஓர் அரசியல் சினிமாவிற்கு உங்களை அழைக்கிறேன்.