50 மணி நேர முத்த மழை!



- த.சக்திவேல்

கார் வாங்க வேண்டும் என்பது பலரின்  பெருங்கனவு. கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து, வங்கியில் கடன் வாங்கி அல்லோல கல்லோலப்பட்டு கார் வாங்கியிருப்போம். ஆனால், ‘‘தொடர்ந்து நீங்கள் ஐம்பது மணி நேரம் காரை முத்தமிட்டாலே போதும். முத்தமிடுகிற கார் உங்களுக்குச் சொந்தம்!’’ என்ற கலக்கலான அறிவிப்பை வெளியிட்டு இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது டெக்சாஸ் நகரில் உள்ள ஒரு கார் ஷோரூம்.

இருபது ஆண்களும், பெண்களும் இப்போட்டியில் கலந்துகொண்டனர். சிலர் நின்று கொண்டும், காரின் மேற்கூரையில் ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டும், தரையில் அமர்ந்தும், கட்டிப்பிடித்துக் கொண்டும், காரின் டயரிலிருந்து மேற்கூரை வரை எல்லா இடங்களிலும் முத்த மழை பொழிந்தனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை பத்து நிமிட ஓய்வு. உணவு இடைவேளை.

இருந்தபோதிலும், சோர்வு தட்டி, முகம் சிவந்துபோய் பலர் நான்கு மணி நேரத்திலேயே போட்டியிலிருந்து விலகிவிட்டனர். துரதிர்ஷ்டவசமாக யாராலும் காரை வெல்ல முடியவில்லை. இந்த ஆஃபர் கொஞ்ச நாட்களுக்குத்தானாம். தொடர்ந்து ஐம்பது மணி நேரமாக முத்தமிடப்பட்ட கார் யார் வசமாகப் போகிறதோ!