காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 3

“இன்னா தலை. கடலுக்குள்ளாற போய் தூண்டில் போடுறதை உட்டுட்டு, குஜிலிங்களோட பீச்சாங்கரையில கும்மாளம் போட்டுக்கினு இருக்கே?” கேள்வி கேட்ட பையனுக்கு வயசு பதினெட்டுதான். டீ ஷர்ட்டில் நாலெழுத்து ஆங்கில கெட்ட வார்த்தைக்கு பெண்களை அழைப்பதைப் போன்ற ஏதோ குஜால் வாசகம். முட்டி வரை நீளும் ஷார்ட்ஸ். ஹிப்பி பாணி ஹேர்ஸ்டைல். கூர்மையானநாசி. அலைபாய்ந்து  கொண்டே இருக்கும் குறும்புக் கண்கள். பல்கலைக்கழக மாணவன்.

அவனுடைய கேள்வியை எதிர்கொண்ட ஜார்ஜுக்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம். அஜித் மாதிரி பெப்பர் & சால்ட் ஹேர்ஸ்டைல். சிக்ஸ்பேக் உடல்வாகு. கட்டழகை ஊருக்கே பறைசாற்றும் விதமாக திறந்த உடம்புடன் ஒயிலாக வீற்றிருந்தார். சில்க் ஷார்ட்ஸ். அந்த மாணவனுக்கு கல்லூரியில் பாடம் எடுக்கும் பேராசிரியர் அவர்.

“தூண்டிலைப் போட்டு ஒவ்வொரு மீனா புடிச்சு அலுத்துடுச்சு. இன்னிக்கு நைட்டு வலையை விரிச்சி மொத்தமா வாரப்போறேன்...” பைனாகுலரில் தீவிரமாக கடலை ஆராய்ந்துகொண்டிருந்தார். கடலில் உலவிக் கொண்டிருந்த ஒவ்வொரு போட்டும் அவரது கழுகுப் பார்வைக்கு தப்பவில்லை. அவர் எதிர்பார்க்கும் சமிக்ஞை கிடைத்துவிட்டால், அன்று இரவு டன் கணக்கில் ‘சரக்கு’ கிடைக்கும்.

பில்லியன் கணக்கில் பிசினஸ் செய்யலாம். பனாமா பக்கத்தில் சொந்தமாக ஒரு தீவையே வாங்கலாம். கரன்ஸியை சுருட்டி, அதில் கஞ்சாவை நிரப்பி புகைக்கலாம். படுக்கையறை முழுக்க ஐரோப்பிய அழகிகளை நிரப்பி காமசூத்திரத்தின் அத்தனை கலைகளையும் முயற்சிக்கலாம். ஓவர் நைட்டில் ஓஹோவென்று ஆகிவிடலாம். ஜார்ஜுக்கு இருபுறமும் உடைகளில் தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கும் லோக்கல் மியாமி அழகிகள்.

சும்மா ஒரு கெத்து அட்மாஸ்பியருக்காக நிரப்பியிருந்தார். மியாமி கடற்கரை முழுக்கவே இதுமாதிரி காட்சிகள்தான். அரைகுறை ஆடைகளில் அழகிகள். பணம் கொழுத்தவர்கள் ஒன்றுக்கு நான்காக வாடகைக்கு அமர்த்தி உல்லாசமாக சூரியக் குளியல் நடத்துவார்கள். மதுவும், கஞ்சாவும் தூள் கிளப்பும். மியாமி கடற்கரையே முகலாய மன்னர்களின் அந்தப்புரம் மாதிரி எப்போதும் கிளுகிளுவென்றுதான் இருக்கும்.

“தல... இன்னிக்கு செம கலெக்‌ஷன். நாளைக்கும் டிமாண்டு ஓவரா இருக்கும் போலிருக்கு...” ஷார்ட்ஸ் பையிலிருந்து கத்தையாக டாலர் நோட்டுகளை எடுத்து அவர் முன்பாக நீட்டினான். ஆசிரியர், போதை மருந்து டீலர். மாணவன், அவரிடமிருந்து சரக்கு வாங்கி ரீடெயில் பிசினஸ் செய்கிறவன்.

“எத்தனை முறை சொல்லியிருக்கேன்... பிசினஸை ஆபீசில் செய்யணும். பணத்தை அங்கே கொண்டு போய் கேஷியர் கிட்ட கட்டு...” ஆபீஸ் என்பது ‘பிளாக் டுனா gang’குக்கு ஹோட்டல் ரூம். மியாமி கடற்கரையை ஒட்டியிருந்த ஃபவுண்டன் ப்ளூ ஹோட்டல்தான் இந்த போதை மாஃபியாவின் தலைமையகம். அங்கிருக்கும் அறைகளை ஜார்ஜ் மாதிரி டீலர்கள் ஆக்கிரமித்து தங்களுக்கு அலுவலகமாகப் பயன்படுத்துவார்கள்.

ரிசப்ஷனிஸ்ட்டில் தொடங்கி கேஷியர், டெஸ்பாட்ச் என்றெல்லாம் தனித்தனி டிபார்ட்மெண்டுகளாக பக்கா ஆபீஸ் செட்டப். இப்படித்தான் எழுபதுகளின் மத்தியில் போதை பிசினஸ், கார்ப்பரேட் ஸ்டைலில் பக்காவாக அமெரிக்காவில் நடந்து கொண்டிருந்தது. ‘ப்ளாக் டுனா’ என்பது ஒரு மீனின் பெயர்.

இந்த கும்பல் சரக்கு பரிமாற்றத்துக்கு கோட்வேர்டாக ‘ப்ளாக் டுனா’ என்கிற பெயரை அடிக்கடி பயன்படுத்துவார்கள். அதுவே அவர்கள் கேங்கின் பெயராகவே நிலைத்து விட்டது. இவர்களுக்கென்று தனி லோகோ உண்டு. நம் பாண்டியர்களின் சின்னமான துள்ளும் மீன்தான், இந்த மொள்ளமாறி கும்பலின் லட்சனை.

மீன் படம் பொறிக்கப்பட்ட டாலரை செயினில் அணிந்திருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு அடையாள அட்டை. இவர்களைக் கண்டுபிடித்து சிறைப்படுத்த அமெரிக்க போலீசார் திணறினார்கள். காரணம், சிம்பிள். ஒரு பல்கலைக்கழக ஆசிரியர், போதை மருந்து வியாபாரியாகவும் இருப்பார் என்று யார்தான் கணிக்க முடியும்? அவர் தன்னிடம் படிக்கும் மாணவன் மூலமாகவே சரக்கு விற்கிறார் என்பதை யோசித்தாவது பார்க்க முடியுமா?

வக்கீல், ஆடிட்டர், டாக்டர் என கவுரவமான தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களே சைடு பிசினஸாக போதை வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். ஆதாரமில்லாமல் யார் மீதும் அவசரப்பட்டும் கை வைக்க முடியாது. அமெரிக்கா, தனிமனித சுதந்திரத்துக்கு ரொம்பவும் முக்கியத்துவம் தரும் நாடு.

தவிர, சரக்கு பரிமாற்றத்துக்கு வழக்கமான கேங் லெவல் நடைமுறைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனத்தில் எல்லாம் சரக்கு கடத்தப்படும். ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் கர்ப்பிணி மாதிரி நடித்து, அம்பிகா சரக்கு கொண்டு போவாரே... அந்த முறையெல்லாம் ‘ப்ளாக் டுனா’ கும்பலின் கண்டுபிடிப்புதான்.

இவர்களை எதுவும் செய்ய முடியாமல் நறநறவென்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்த அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு, ஹோல்சேல் ரேட்டில் சரக்கு சப்ளை செய்யும் கொலம்பியா மீதுதான் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஒன்றரை வருஷத்தில் 500 டன் அளவுக்கு அசால்டாக ஏற்றுமதி செய்கிறார்கள்.

கொலம்பியாவுக்கு இதெல்லாம் சப்பை மேட்டர். காட்டுப் பகுதிகளில் காம்பவுண்டெல்லாம் போட்டு தொழிற்சாலை அமைத்து கோகெய்ன் தயாரிப்பார்கள். கிலோவுக்கு 1500 டாலர் உற்பத்திச் செலவு. ஆனால், அமெரிக்கச் சந்தையில் குறைந்தபட்சமாகவே கிலோ 50,000 டாலருக்கு போகும். நேர்மையாக வியர்வை சிந்தி பாடுபட்டு விவசாயம் செய்து கரும்போ, கோதுமையோ விளைவித்து 50 மடங்கு லாபம் பெற முடியுமா என்ன?

எனவே, ஆளாளுக்கு குடிசைத் தொழில் கணக்காக போதை ஃபேக்டரிகளை உருவாக்கினார்கள். அதை மார்க்கெட்டிங் செய்ய ‘கார்டெல்’கள் இருந்தன. ‘கார்டெல்’ என்றால் கேங். ஊரில் இருக்கும் ரவுடிப் பயல்கள் எல்லாம் ஏதாவது ஒரு கார்டெல்லில் எக்ஸிக்யூட்டிவ் ரேஞ்சில் இருப்பார்கள். ஒவ்வொரு கார்டெல்லுக்கும் ஒரு காட்ஃபாதர் உண்டு.
 
நம்ம காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபாருடையது மெதிலின் கார்டெல். இந்த சனியன்கள் எல்லாம் சேர்ந்துதான் அமெரிக்காவை போதை சாக்கடைக்குள் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அதற்கு காரணமும் அவர்களேதான். வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பான் ஓர் அசுரன் என்பார்களே, அந்த கதை அமெரிக்காவுக்கு எப்போதுமே பொருந்தும்.

அவர்களே ஓர் அமைப்பை பொத்திப் பொத்தி வளர்ப்பார்கள். வளர்ந்ததும் அந்த அமைப்பே அவர்களைப் போட்டுத்தள்ள தொடை தட்டிக் கிளம்பும். அந்தக் காலத்திலிருந்து அல்குவைதா வரை இதுதான் அமெரிக்காவின் ராசி. இரண்டாம் உலகப் போர் முடிந்ததுமே உலகநாடுகளை அமெரிக்காவும், ரஷ்யாவும் இரண்டாக பங்கு போட்டுக் கொள்ள முயற்சித்தன. பாதி நாடுகள் கம்யூனிஸம். மீதி நாடுகள் முதலாளித்துவம். பனிப்போர் என்பார்களே, அது இதுதான்.

ரஷ்யாவின் மூக்குக்கு அருகிலேயே ஐரோப்பாவின் பல நாடுகளை முதலாளித்துவ நாடுகளாக, தன்னுடைய தோஸ்துகளாக மாற்றியது அமெரிக்கா. பதிலுக்கு அமெரிக்காவின் காலிலேயே குழி பறித்தது ரஷ்யா. தென்னமெரிக்க நாடுகள் பலவற்றிலும் ‘புரட்சி’ ஏற்பட ஏதுவாக பொதுவுடைமைக் கருத்துகளை பரவலாக்கியது. அமெரிக்கா ஆட்டுவித்தால் ஆடும் பொம்மை அரசுகளைக் கவிழ்த்து கலகம் செய்ய கொரில்லா குழுக்களை ஆதரித்து ஆயுதங்களையும் வழங்கியது.

சோவியத் ரஷ்யாவின் ஆதரவில் ஏராளமான இடதுசாரி ஆயுதக் குழுக்கள் தென்னமெரிக்காவில் தோன்றி, தத்தம் அரசுகளுக்கு எதிராக தினந்தோறும் புரட்சிப் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக கியூபாவில் ஏற்பட்ட புரட்சி, அமெரிக்காவை தூங்கவிடாமல் தொந்தரவு செய்தது. அதுபோன்று வேறு நாடுகளில் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது.

கொரில்லாக்களை போட்டுத்தள்ள பொம்மை அரசுகளுக்கு பக்கபலமாக உள்ளூர் தாதாக்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்து, வலதுசாரி ராணுவக் குழுக்களை அமெரிக்கா உருவாக்கியது. இந்தக் குழுக்களுக்கு தாராளமாக நிதியுதவியும், அள்ள அள்ளக் குறையா ஆயுதங்களும், இதர ஜல்ஸா சமாச்சாரங்களும் கிடைத்துக் கொண்டே இருந்தன.

தான் உருவாக்கிய அமைப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு பெர்ஃபார்ம் பண்ணமுடியாமல் மொக்கையாகி விடும் பட்சத்தில் அவற்றை முற்றிலுமாகக் கைவிட்டுவிடுவது அமெரிக்காவின் ஸ்டைல். அம்மாதிரி அனாதரவாகிவிட்ட அமைப்புகள் பலவும், கார்டெல் அமைத்து போதை பிசினஸ் செய்து அரசை ஆட்டம் காணவைக்கும் அமைப்புகளாக அடித்துப் பிடித்து வளர்ந்துவிடுவார்கள்.

அமெரிக்காவுக்கு போதை சரக்கு ஏற்றுமதி செய்வார்கள். ஓகே. ஓரளவுக்கு அந்த காலக்கட்டத்தையும் சூழலையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். இனி, டைரக்டாகவே தி கிரேட் காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபார், ஓனர் ஆஃப் மெதிலின் கார்டெல் அவர்களை தரிசிப்போம்.

(மிரட்டுவோம்) 

ஓவியம்: அரஸ்