காலடி ஓசையிலே... பார்வையை நான் அறிந்தேன்...



- ப்ரியா

‘சென்னையில் பட்டப்பகலில் ஓர் இருளைச் சந்தித்தேன்...’ என்றால் ஏதோ கவிதை வரி போல இருக்கிறது என்பீர்கள். ‘பார்வையற்றவர்களின் உலகம் எப்படி இருக்குதுன்னு பார்க்க வர்றீங்களா?’ என்று ஓர் அழைப்பு வந்தது. அழைத்தவர் கிருஷ்ணன். சென்னை ‘டயலாக் இன் த டார்க்’ ரெஸ்டாரண்டின் உரிமையாளர். ‘முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.

எங்கள் விடுதிக்கு வந்து ஒரு மணி நேரம் பார்வையற்றவராக வாழ்ந்திடுங்கள்’ என்று அவர் அழைக்கவே சரி அதையும் பார்த்து விடுவோம் என கிளம்பினோம். சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அந்த ஹைடெக் மாலின் உயர்தளத்தில் இருக்கிறது இந்த ரெஸ்டாரண்ட். நுழைந்ததும் நம் செல்போன், கைப்பை, கடிகாரம் உட்பட அனைத்தையும் லாக்கரில் வைக்கச் சொல்கிறார்கள்.

பிறகு, உட்புறம் செல்வதற்கான கதவின் வாசலில் ஒருவர் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வாக்கிங் ஸ்டிக்கை நம்மிடம் தருகிறார். கதவைத் திறந்து உள்ளே சென்றால் - இருட்டு. நம் முகமே மறந்துபோகும் பாழ் இருட்டு. ‘இப்படி வாங்க’ என்று ஒரு குரல் மட்டும் கேட்டது. அவர் பெயர் வேல்முருகன். எவ்வளவு முயன்றும் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. இனி அவரின் குரல்தான் நமக்குக் கண்.

வாக்கிங் ஸ்டிக்கை நிலத்தில் தட்டித் தட்டி வேல்முருகனின் குரலைத் தொடர்ந்தோம். முதலில் அவர் அழைத்துச் சென்ற இடம் ஒரு பூங்கா. நிலத்தில் பதிக்கப்பட்ட கூழாங்கற்கள் காலில் நிரட தடுமாறியபடியே சென்றோம். ஓடை நீரின் சலசல சத்தம் காதில் விழுந்ததும் நம் உடல் சில்லிடுவது பிரமையா? தெரியவில்லை. ஓடையைக் கடக்க வேண்டும்.

அதற்கு ஒரு பாலம் இருந்தது. அதுவும் தொங்கு பாலம். நல்லகாலத்திலேயே தொங்கு பாலத்தில் செல்ல அச்சமாக இருக்கும். இதில் இது வேறா என்று பயமாக இருந்தது. ஆனால், எப்படியும் சென்று விடுவோம் என்ற நம்பிக்கை உடலெங்கும் படர்ந்தது. என்ன இருந்தாலும் இது ஒரு விளையாட்டுதானே; ஆபத்தெல்லாம் இருக்காது என்று ஓர் எண்ணம்.

தட்டித் தடுமாறி ஒருவழியாக பாலத்தைக் கடந்து ஓர் இடத்தில் கொஞ்சம் இளைப்பாறினோம். கிளி, மைனா, குயில், சிட்டுக்குருவிகள் எனப் பலதரப்பட்ட பறவைகளின் கீச்சிடல். எதையுமே பார்க்க இயலவில்லை. ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அருகே ஓர் இடத்தில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், டீத்தூள் எனப் பலதரப்பட்ட உணவுப்பொருட்கள் இருந்தன.

ஒவ்வொன்றையும் நுகர்ந்து மட்டுமே அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். இருட்டில் பொருட்களின் வாசம்கூட நுட்பமாவதை அனுபவத்தில் உணர்ந்தோம். அடுத்து கிரிக்கெட். வேல் முருகன் நம் கையில் ஒரு பேட்டைக் கொடுத்தார். ‘இந்த இருட்டில் எப்படி பாஸ்..?’ அவரிடம் கிணிகிணியென சப்தமிடும் பந்து இருந்தது.

அதை அவர் தரையோடு தரையாக உருட்டிவிட நாமும் கிரிக்கெட் மட்டையை வேகமாகச் சுழற்றினோம். ‘வாவ்... ஃபோர், இது சிக்ஸ்...’ குழந்தைபோல நம்மை உற்சாகப்படுத்தினார். அடுத்து சுவரில் சுதைகளாக ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. தொட்டுப்பார்த்து அவை ஒவ்வொன்றையும் கண்டுபிடிக்க வேண்டும். நமக்குப் புலி இப்படித்தான் இருக்கும் என்று தெரியும்.

ஆனால், கண்ணை மூடிக்கொண்டு அதை உணர்வது சிரமமாக இருந்தது. போகப் போகப் பழகும் போல... கடைசியாக உணவு மேசை. ஒரு மூன்றடுக்கு கேரியரைக் கொண்டுவந்து வைத்தார். ‘இதில் உங்கள் உணவு உள்ளது. பிரித்துச் சாப்பிடுங்கள்...’ சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதில் என்ன உணவு உள்ளது என்பதை சுவைத்துத்தான் அறிய வேண்டும்.

சைவம் / அசைவம் இரண்டுமே உள்ளன. ஸ்பூனில் உணவை எடுத்துச் சாப்பிடுவதற்குள் மூச்சு வாங்கியது. ஸ்பூனில் ஒரு பக்கம்தான் குழியாக இருக்கும். அது எந்தப் பக்கம் என்று நாம் புரிந்துகெள்ள சில விநாடிகள் பிடித்தன. பார்வை இல்லாததால் ஒரு ஸ்பூனின் அமைப்பை புரிந்துகொள்ளவே திணறுகிறோம்.

இவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் அறிந்துகொள்ள எவ்வளவு சிரமப்படவேண்டி இருக்கும் என்று மனம் கசிந்தது. ஒருவழியாக இந்த சாகசத்தை முடித்துக்கொண்டு வெளியே வர 45 நிமிடங்களானது. வெளிச்சத்தைப் பார்த்தபிறகுதான் தைரியமே வந்தது. இருளில் நம்மை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற வேல்முருகனுக்கு நன்றி சொல்ல அவரைப் பார்த்த போது மனம் கனத்தது.

காரணம் அவர் பார்வையற்றவர். இப்போதுதான் பட்டப்படிப்பு முடித்துள்ளார். விரைவில் டெட் பரீட்சை எழுத உள்ளாராம். ஆல் த பெஸ்ட் சொல்லிவிட்டு விடைபெற்றோம். மின்வெட்டு நேரத்தில் மட்டுமே இருட்டை உணரும் நமக்கு, பார்வையற்றவர்களின் வாழ்வைப் புரிந்துகொள்ள நிஜமாகவே இது ஒரு ஐ ஓப்பனிங் டிராவல்தான்.                      

படங்கள்: கவுதம்

இருட்டுக்கு காரணம்

முழுக்க முழுக்க பிளைவுட்டைப் பயன்படுத்தி இருளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் துளி வெளிச்சம்கூட இல்லை. பொதுவாக, இருட்டில் இருந்தால் சிறிது நேரத்தில் கண்ணுக்கு இருட்டு பழகி, கொஞ்சமாக பார்வை தெரியும். இங்கு அதுகூடத் தெரியாத அளவுக்கு இருள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வேலை பார்க்கும் யாருக்குமே பார்வை கிடையாது. பார்வையற்றவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு இரண்டு மாதப் பயிற்சி அளிக்கிறார்கள். இந்தப் பயிற்சியைத் தரும் பைசல் என்பவரும் பார்வையற்றவர்தான்.

நாங்கள் இந்தியாவுக்கான பார்ட்னர்!

‘‘நான் சென்னையைச் சேர்ந்தவன். மருத்துவ நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக வேலை பார்த்துவந்தேன். என் மனைவி சுதா மனநலம் சார்ந்த துறையில் பட்டப்படிப்பு படித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கவுன்சிலிங் வொர்க்‌ஷாப் நடத்திவந்தார். வேலை காரணமாக அமெரிக்கா செல்ல நேர்ந்தது. அங்குதான் முதன் முதலில் ‘டயலாக் இன் த டார்க்’ உணவகத்தின் அனுபவம் கிடைத்தது.

இது ஓர் உலகளாவிய நிறுவனம். இப்போது 23 நாடுகளில் இயங்கிவருகிறது. நாங்கள்தான் இந்தியாவுக்கான பார்ட்னர். இந்தியாவில் ஏஸ் பவுண்டேஷன் என்ற பெயரில் இதை நடத்தி வருகிறோம். முதன் முதலில் 2011ல் ஹைதராபாத்தில் இதைத் தொடங்கினோம். 2015ல் சென்னையிலும் கடந்த ஆண்டு ராய்ப்பூரிலும் கிளைகளைப் பரப்பியிருக்கிறோம்.

பெங்களூரூவில் தொடங்குவதற்கான வேலை நடக்கிறது. ஹைதராபாத்தில் தொடங்கியபோது அரசு எங்களுக்கு நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. அதைக்கொண்டு பல மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான வாழ்வை அமைத்துத்தரும் பயிற்சிகளைக் கொடுத்துவருகிறோம். இதன்மூலம் கிட்டத்தட்ட 3000 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளோம்...’’ என்கிறார் கிருஷ்ணன்.