புருஷனுக்கு தெரியாம தினமும் ரெண்டு படம் பார்ப்பேன்!



மனம் திறக்கிறார் சுந்தர்.சி.யின் அம்மா

-மை.பாரதிராஜா

‘‘அம்மா ரொம்ப அமைதி. அதிகமா பேச மாட்டாங்க. இன்டர்வியூனு வந்துட்டீங்க... எவ்வளவு பேசுவாங்கனு தெரியலை. ஆனா, சினிமா பத்தி கேட்டீங்கன்னா மணிக்கணக்குல பேசுவாங்க...’’ அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்திலும் நமக்கு ‘ஹலோ’ சொல்லி அம்மாவை அறிமுகப்படுத்துகிறார். ‘‘வேற புடவை கட்டிக்கம்மா... போட்டோல அழகா தெரிவ...’’ என்றபடி அம்மாவை முத்தமிடுகிறார்.

‘‘சீ போடா...’’ வெட்கத்துடன் புன்னகைக்கிறார் தெய்வானை. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், சன் டிவியில் பட்டையை கிளப்பும் ‘நந்தினி’ சீரியலின் கதாசிரியர் ப்ளஸ் புரொடியூசர் என எட்டு திசையிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் சுந்தர்.சி.யின் அம்மா. ‘‘பூர்வீகம் திருச்சி. மலைக்கோட்டைலதான் பிறந்து வளர்ந்தேன். எங்க தாத்தா சுப்பையா பிள்ளை அங்க ஜவுளிக்கடை வைச்சிருந்தார்.

அப்பா சுந்தரம்பிள்ளையும் பிசினஸ்மேன்தான்...’’ நிதானமாக அதேசமயம் கூச்சம் விலகாமல் பேச ஆரம்பிக்கிறார் தெய்வானை. ‘‘என்னோட எட்டு வயசுல அம்மா இறந்துட்டாங்க. அப்பாவுக்கு என்மேல பாசம் அதிகம். எங்களை நல்லா வளர்க்கணும்னே இரண்டாம் கல்யாணம் பண்ணிக்காம இருந்தார். ஆனா, குழந்தைங்களை வைச்சுகிட்டு அவர் கஷ்டப்படறதை தாத்தாவால தாங்கிக்க முடியலை.

அவரோட வற்புறுத்தலுக்காக அப்பா இரண்டாம் திருமணம் செய்துகிட்டார். அந்த சமயத்துல பிசினஸ் கொஞ்சம் டல்லாச்சு. பொழப்பு தேடி எங்களைக் கூட்டிட்டு தாத்தா கேரளா போனார். வயநாடுல குடியேறினோம். நாங்க போன நேரம் நல்ல நேரமா இருக்கணும். வசதிகள் பெருக ஆரம்பிச்சது. காபி, மிளகு எஸ்டேட், விவசாய நிலங்கள்னு வாங்கினோம். வீட்டு வேலைக்கு ஆட்களை வைச்சோம். சின்னம்மாவுக்கு குழந்தைங்க பிறந்தாங்க.

எனக்கு 15 வயசானப்ப திருமணம் செய்ய முடிவு பண்ணினாங்க. எங்கம்மா காலமாகறதுக்கு முன்னாடி அப்பாகிட்ட ஒரு கோரிக்கை வைச்சாங்க, அவங்க வழியைச் சேர்ந்த சிதம்பரத்துக்குதான் என்னை கட்டி வைக்கணும்னு. அப்பாவும் அதுக்கு சம்மதிச்சிருந்தார். அந்த வாக்கை அப்பா மீறலை. 1949ம் வருஷம் கேரளாவுல இருந்த எங்க எஸ்டேட்டுல ஜாம் ஜாம்னு எங்க திருமணம் நடந்துச்சு.

என் வீட்டுக்காரரோட ஊர் பழனி. மிலிட்டரி கேம்ப்ல இருந்தவர். ஒரு அண்ணன், ரெண்டு தம்பிங்க அவருக்கு. அப்ப அவர் போக்குவரத்துல ஆர்டிஓ-வா இருந்தார். சென்னைலதான் ஆபீஸ். கல்யாணமான பத்தாவது நாள் சென்னை வந்துட்டேன். தன்னோட மகள் மாதிரி என்னை எங்க மாமியார் பார்த்துக் கிட்டாங்க. பார்த்தசாரதி கோயில் பக்கம் குடியிருந்தோம். வாடகை 15 ரூபா.

அப்ப அது பெரிய தொகை. வீடும் பெருசு. எப்பவும் ஊர் நினைவாவே இருக்கும். இவரும் ஆபீஸ் போயிடுவார். அக்கம்பக்கம் யார்கிட்டயும் பேசமாட்டேன். இது என் பழக்கம். குணம். அதனாலதான் கிளம்பறதுக்கு முன்னாடி உங்ககிட்ட சுந்தரம் (சுந்தர்.சி.யை அப்படித்தான் அழைக்கிறார்) அப்படிச் சொன்னான்...’’ என்று சிரிக்கும் தெய்வானைக்கு சினிமா பார்க்கப் பிடிக்குமாம்.

‘‘அதுதான் என் பொழுதுபோக்கு. முதன் முதல்ல அவரோட சேர்ந்து கெயிட்டி தியேட்டர்ல ‘வேதாள உலகம்’ பார்த்தேன். அப்புறம் சினிமா பார்க்கிற ஆர்வம் அதிகமாகிடுச்சு. ஆனா, அவருக்கு படம் பார்க்கவே பிடிக்காது. எப்பவாவதுதான் கூட்டிட்டுப் போவார். இதுக்கு இடையில திருவல்லிக்கேணில இருந்த ஸ்டார் தியேட்டர் பக்கம் குடிவந்தோம்.

இதுவும் பெரிய வீடுதான். வாடகை 20 ரூபா. அவர் காலைல ஆபீஸ் போனார்னா மாலைதான் வருவார். சீக்கிரமா வந்தார்னா பீச்சுக்கு போவோம்...’’ என்று மலரும் நினைவுகளில் மூழ்கிய தெய்வானைக்கு முதலில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், பதினொரு மாதங்களில், லலிதா என்று பெயர் வைக்கப்பட்ட அந்தக் குழந்தை இறந்துவிட்டதாம்.

‘‘இரண்டாவதா கர்ப்பமானப்ப ‘பராசக்தி’ ரிலீசாகியிருந்தது. குணசேகரன், ராஜசேகரன் பேருதான் அப்ப ஃபேமஸ். நமக்கு பையன் பொறந்தா குணசேகரன்னு பேரு வைக்கணும்னு முடிவு செய்திருந்தேன். ஆனா, பொண்ணு பொறந்தா. வெள்ளிக்கிழமை பிறந்ததால விஜயலட்சுமினு பேரு வைச்சோம். இதற்கு அடுத்தும் பொண்ணுதான். சாந்தி. பிறகு ராஜா. எட்டு வருஷம் கழிச்சு சுந்தரம்.

இதுக்குள்ள நாங்க சென்னைல இருந்து கடலூர், திருச்சி, ஈரோடுனு டிரான்ஸ்ஃபர் ஆகியிருந்தோம். சுந்தரம் ஈரோட்டுலதான் பொறந்தான். எல்லா பிரசவமும் வீட்லதான் நடந்தது. சுந்தரம் மட்டும் ஆஸ்பத்திரில பிறந்தான்...’’ என்ற தெய்வானை சிறு வயதிலிருந்தே சுந்தரம் என்கிற சுந்தர்.சி.க்கு கதை எழுதுவதில் ஆர்வம் என்கிறார்.

‘‘எப்பவும் ஏதாவது படம் வரைஞ்சுட்டு இருப்பான். இல்லைனா கதை எழுதிட்டு இருப்பான். சென்னைல படம் பார்த்து பழகியிருந்ததால நான் சினிமா பைத்தியமா இருந்தேன்! தினமும் ரெண்டு படமாவது வீட்டுக்காரருக்கு தெரியாம தியேட்டர்ல போய் பார்த்திடுவேன். புள்ளைங்ககிட்ட, ‘அப்பாகிட்ட சொல்லாதீங்க கண்ணுங்களா’னு சொல்லிட்டு போவேன்.

குழந்தைங்களும் என்னை காப்பாத்திடுவாங்க! திடீர்னு அவர், ‘ஆபீஸ்ல ஒரு படம் நல்லா இருக்குதுனு சொன்னாங்க. வா போயிட்டு வரலாம்’னு சொல்லுவார். எதுவும் தெரியாத மாதிரி ரெண்டாவது தடவை அந்தப் படத்தை போய் பார்ப்பேன்! அவரு கொஞ்சம் கண்டிப்பா இருந்தாலும் எம்மேல ரொம்ப பாசமா இருப்பார். வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் என்னோட சமையல்தான் அவருக்கு பிடிக்கும்.

ப்ளஸ் டூ முடிச்சதும் தன் வாழ்க்கை சினிமாதான்னு சுந்தரம் முடிவு பண்ணிட்டான். ‘என் பையன் நடிக்கணும். பெரிய டைரக்டர் ஆகணும்’னு மனசுக்குள்ள எனக்கும் ஆசை இருந்ததால எந்த மறுப்பும் நான் சொல்லலை. ஆனா, அவருக்கு இதுல விருப்பமில்லை. ‘வசதியா வாழ்ந்தவன் அங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவான்’னு கவலைப்பட்டார். ஆனாலும் மகன் விருப்பத்தை அவர் தடுக்கலை.

சென்னை வந்த சுந்தரம் போராடித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கான். தான் பட்ட கஷ்டங்களைப் பத்தி எங்ககிட்ட சொல்ல மாட்டான். வசதியா வாழறா மாதிரி லெட்டர் எழுதுவான். ஒருமுறை கோவைல மணிவண்ணனை பார்த்தோம். ‘உங்க பையனைப் பத்தி கவலைப்படாதீங்க. பயங்கர புத்திசாலி. பெரிய ஆளா வருவான்’னு சொன்னார். அப்பதான் அவருக்கு கொஞ்சம் நிம்மதியாச்சு.

ரிடையரான கொஞ்ச நாள்ல அவர் காலமானார். மணிவண்ணனோட ‘வாழ்க்கைச் சக்கரம்’ படத்துல அப்ப சுந்தரம் சின்ன கேரக்டர் பண்ணியிருந்தான். ‘அப்பா அதை பார்க்காமப் போயிட்டாரே’னு இப்பவும் வருத்தப்படறான். சென்னைல அவன் இருந்த இடம் ராஜாவுக்கு மட்டும்தான் தெரியும். தனக்கு பணம் தேவைப்படறப்ப அவனும் தன் அண்ணனுக்குதான் லெட்டர் போடுவான்.

ராஜாவும் எங்களுக்கு தெரியாம அனுப்பி வைப்பான்...’’ என்று சொல்லும் தெய்வானை, தன் கணவர் உயிருடன் இருந்தபோதே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும், தன் பெரிய மருமகன் வழியாகவே சுந்தரத்துக்கு ‘முறை மாமன்’ இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் சொல்கிறார்.

‘‘பெரிய மருமகன் செல்வராஜ், பேங்க் மானேஜர். இவரோட நண்பர் குடியாத்தத்துல தியேட்டர் வைச்சிருக்கார். அவர்தான் சுந்தரத்தோட முதல் படமான ‘முறைமாம’னை தயாரிச்சார். இரண்டாவது மருமகன் காலேஜ் புரொபஸர். கோவைல இருக்கார். முதல் படம் ஹிட்டானதும் சுந்தரம் பிஸியானான். அஞ்சாறு வருஷம் கழிச்சு சாலிகிராமத்துல ஒரு வீட்டுக்கு வந்தோம். அவனுக்கும் குஷ்புவுக்கும் திருமணமாச்சு.

எனக்கு மொத்தம் மூணு மருமக. சித்ராவும், செந்தில்குமாரியும் என்னை அத்தைனு கூப்பிடுவாங்க. குஷ்பு மட்டும் ‘அம்மா’ங்கற சொல்லுக்கு மறுசொல்லு சொல்லாது. மொத்த குடும்பத்துல யார் வீட்ல எந்த ஃபங்ஷன் நடந்தாலும் சரி, பண்டிகைனாலும் சரி... எல்லாருக்கும் ஆசை ஆசையா குஷ்பு துணி எடுத்து கொடுப்பா.

எனக்கு மொத்தம் 5 பேத்திகள், 5 பேரன்கள்..!’’ மகிழ்ச்சியுடன் சிரிக்கும் தெய்வானைக்கு தன் பிள்ளைகளும், மருமகள்களும் ஒற்றுமையாக இருப்பதில் அவ்வளவு திருப்தி. ‘‘எனக்குப் பிறகும் அவங்க இதேமாதிரி இருக்கணும். அதுதான் என் ஆசை. குஷ்பு இந்தளவுக்கு எம்மேல பிரியமா இருக்கறதுக்கு காரணம், சுந்தரம்தான். நான்னா அவனுக்கு உயிர். பொதுவா பெரியவங்க சொல்லுவாங்க, ‘நம்ம பையன் நம்மள எப்படி வச்சிருக்கானோ... அப்படித்தான் நம்ம மருமகளும் நம்மை நடத்துவாங்க’னு. அது என் விஷயத்துல சரியா இருக்கு. மொத்தத்துல நான் ரொம்ப கொடுத்து வைச்சவ தம்பி...’’ நெகிழ்கிறார் தெய்வானை.

படங்கள் : ஆ. வின்சென்ட் பால், ‘தேர்டு ஐ’ பிரகாஷ்

பரிசு

‘அருணாசலம்’ வெற்றிவிழாவில் ரஜினி தனக்கு அளித்த தங்க செயினை உடனே அம்மாவுக்கு சுந்தர்.சி. பரிசாக அளித்து விட்டாராம். தெய்வானைக்கு பச்சை கலர் புடவை பிடிக்கும் என்பதால் புடவைகளாக வாங்கிக் கொடுத்து அம்மாவை திக்குமுக்காட வைப்பாராம். தன் அத்தைக்கு குஷ்பு முதன் முதலில் வாங்கிக் கொடுத்தது வைரக்கம்மல்! அப்போது முதல் இப்போது வரை சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறாராம்.

ஃபேமிலி விளையாட்டு

சனிக்கிழமை அன்று அம்மா, மனைவி, குழந்தைகளுடன் கேரம், தாயம் விளையாடுவது சுந்தர்.சிக்கு பிடிக்குமாம். இரவு எட்டு மணிக்கு தொடங்கும் விளையாட்டு மறுநாள் அதிகாலை வரை தொடருமாம்.   

ஆச்சரியப்பட்ட ஜெயலலிதா

‘‘ஜெயலலிதா முதல்வரா இருந்தப்ப சுந்தர், குஷ்பு, குழந்தைகளோட நானும் அவங்களைப் பார்க்கப் போயிருந்தேன். அப்ப சுந்தரைப் பார்த்து, ‘உங்களுக்கு சினிமால எப்படி ஆர்வம் வந்துச்சு’னு ஜெயலலிதா கேட்டாங்க. உடனே என் மருமகள், ‘‘இவரு பிறக்குறதுக்கு முன்னாடி இவங்க தினமும் ரெண்டு படமாவது பார்த்திடுவாங்க!’னு சொன்னா. ‘அதான் இயல்பாவே சினிமா ஆசை வந்திருக்கு’னு சொல்லி ஆச்சரியப்பட்டாங்க...’’ என்கிறார் தெய்வானை.

சுந்தர்.சி. - குஷ்பு லவ் சீக்ரெட்

‘முறைமாமன்’ ஹிட்டுக்குப் பிறகு சுந்தர்.சி. - குஷ்பு காதல் துளிர்விட்டது. ‘‘சாலிக்கிராம வீட்டுக்கு குஷ்பு அடிக்கடி வருவா. ரெண்டு பேரும் வெறும் ஃப்ரெண்ட்ஸ்னு நினைச்சோம். அந்த டைம்ல நாங்க ஈரோட்டுல இருந்தோம். அங்க வந்த சுந்தரம், ‘உங்க எல்லாருக்கும் ஓகேனா குஷ்புவை கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொன்னான். சுந்தரத்தை பார்க்க குஷ்பு வரும்போதெல்லாம் பார்த்திருக்கேன். எம்மேல ரொம்ப ப்ரியமா இருப்பா. பாசமா பழகுவா. அதனால சுந்தரம் அப்படி சொன்னதுமே நாங்க சம்மதம் சொல்லிட்டோம்...’’ என ரகசியத்தை உடைத்தார் தெய்வானை.

சுந்தர்.சி.யின் ஒரிஜினல் பெயர்!

விநாயக சுந்தர வடிவேல் சிதம்பரம். இதுதான் சுந்தர்.சி.யின் நிஜப்பெயர்.  ‘‘திருச்செந்தூர் முருகன் ஞாபகமா குற்றால விநாயகரோட சேர்த்து எங்கப்பா சுந்தரம் பேரையும் இணைச்சோம்...’’ என்கிறார் தெய்வானை.

சின்னத்தம்பி!

‘‘என் பையன் நடிப்பில் ‘தலைநகரம்’, குஷ்புவின் நடிப்பில் ‘சின்னத்தம்பி’, ‘நாட்டாமை’, ‘தர்மத்தின் தலைவன்’ படங்கள் பிடிக்கும். அவன் டைரக்‌ஷன்ல ‘அருணாசலம்’ ரொம்ப பிடிக்கும். இன்னொரு விஷயம், இப்ப என் பையன் படங்களை மட்டும்தான் பார்க்கறேன்!’’ என்கிறார் தெய்வானை. ‘முறைமாமன்’ ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்த போது அம்மாவை படப்பிடிப்புக்கு அழைத்து சென்ற சுந்தர்.சி., அதன்பிறகு எந்த படப்பிடிப்புக்கும் அழைத்துச் செல்லவில்லையாம்.