மணிரத்னத்தோட மோதியிருக்கேன்..!



தமிழ் சினிமாவில் புது ரத்தம்

8 தோட்டாக்கள் - ஸ்ரீகணேஷ்

‘‘மணிரத்னம் சாரோட படம் ரிலீஸ் ஆன அன்னிக்கு நான் இயக்கின படமும் ரிலீஸ் ஆகியிருக்கு. இந்த சந்தோஷத்தை எதிர்பார்க்கவே இல்லை...’’ மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக பேசுகிறார் ஸ்ரீகணேஷ். ‘‘பிறந்தது கும்பகோணம். வளர்ந்தது சென்னை. எங்க குடும்பத்துல நான்தான் முதல் பட்டதாரி. சென்னைல பி.காம். படிச்சேன். காலேஜ் டேஸ்ல கவிதை, கட்டுரைகள்னு நிறைய போட்டிகள்ல கலந்துக்கிட்டிருக்கேன். ‘நாளைய இயக்குநர்’ சீஸன்3ல என்னோட குறும்படங்கள் பங்கேற்று பாராட்டுகளைக் குவிச்சிருக்கு.

மிஷ்கின் சார்கிட்ட ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துல ஒர்க் பண்ற சான்ஸ் கிடைச்சது. ‘8 தோட்டாக்கள்’ ஸ்கிரிப்ட் ரெடியானதும் இரண்டரை வருஷம் தயாரிப்பாளர் தேடி அலைஞ்சேன். இந்த படத்தோட லைன் புரொட்யூசர் கார்த்திகேயன் சாருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கறேன். படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சாலும், மறக்க முடியாதது சவுண்ட் என்ஜினியர் ஐயப்பன் நெகிழ்ந்து உருகியதுதான்.

படத்துல வரும் ஹோட்டல் சீன் பார்த்ததும் அவர் நெகிழ்ந்துட்டார். ‘மனைவிக்கு ஒரு கணவனோட பாதுகாப்பும், அரவணைப்பும் எவ்வளவு முக்கியமானதுனு இப்ப புரிஞ்சுகிட்டேன்’னு விசும்பி அழுதார். என்னை கலங்கவைச்ச பாராட்டு அது...’’ எனச் சொல்லும் ஸ்ரீகணேஷ், அடுத்து அதர்வாவை இயக்குகிறார்.