ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 22

இந்த பாட்டையெல்லாம் பாடிய மாமாவை இன்றைக்குச் சந்திக்கப் போகிறோம் என ஒரு மதிய வேளையில் அப்பா சொன்னபோது, அதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘‘உண்மையாகவா, உண்மையாகவா...’’ என்றுதான் கேட்டோம். அவருடைய பாடல்கள் எங்களுக்குள் ஏற்படுத்தியிருந்த பிரமிப்பில், அவரைச் சந்திக்கப் போகிறோம் என்னும் செய்தி களிகொள்ள வைத்தது.

மாலையில் நடக்கவிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டத்திற்குப் போகும்வரைகூட ‘‘உண்மையாகவா...’’ என அப்பாவிடம் கேட்டுக்கொண்டிருந்தோம். பெத்தனன் கலையரங்கமோ பெசன்ட் அரங்கமோ சரியாக நினைவில்லை. அங்குதான் முதல்முதலில் கே.ஏ.குணசேகரனை அப்பா எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.

அறிமுகப்படுத்தியதுமே “என்ன மருமகனே என்ன படிக்கிறீங்க, நல்லா படிக்கணும்...” என்றார். “எம் மருமக ஜாடையிலதான் நடிகை சரிதா இருக்கிறாங்க...” என்றதும் அக்காவுக்கு தலைகால் புரியவில்லை. சரிதாவைப் போல் கண்களை அகல விரித்து ஆமோதித்தாள். அதன்பின் பல்வேறு மேடைகளில் அவர் பாடக் கேட்டிருக்கிறோம்.

நாடக ஆக்கங்களில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகும்கூட அவருடைய இசைப்பாடல் ஆர்வம் குறையவே இல்லை. நாட்டுப்புற இசையை முற்போக்கு மேடைகளில் முழங்கிக் கொண்டே இருந்தார். தலித் இசை அடையாளமாக நாட்டுப்புற இசையை நிறுவியதில் அவர் ஒருவருக்கே முதன்மை பங்குண்டு. அவருக்கு முன்னாலும் பின்னாலும் பலர் இருக்கிறார்கள். என்றாலும், அவருடைய பங்களிப்புகள் தனித்துவமானவை.

நாட்டுப்புற இசையிலிருந்தே சாஸ்திரீய இசை பிறந்ததாக இன்றைக்கு முன்வைக்கப்படும் பல ஆய்வுகளுக்கு அவரே முன்னோடி. 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி தமிழகத்தில் எழுந்த தலித் பேரலைதான், கே.ஏ.குணசேகரனை உலகிற்கு யாரென்று அடையாளங்காட்டியது. அதற்கு முன்புவரை அவருமே தன்னை தலித்தாக எங்கேயும் அறிவித்துக்கொள்ளவில்லை. அவர் அறிவித்துக் கொள்ளவில்லை என்றாலும், அவரை இந்த சமூகம் அப்படித்தான் பார்த்தது என்பது வேறு விஷயம்.

தன்னுடைய இருப்பு சார்ந்தும் அடையாளம் சார்ந்தும் தனக்குள் எழுந்த கேள்விகளை ‘வடு’ என்னும் சுயசரிதையில் எழுப்பினார். 125 பக்கங்களைக் கொண்ட அச்சுயசரிதையில், தான் கடந்துவந்த பாதைகள் குறித்து எழுதியிருக்கிறார். முழுக்கவும் பேச்சுமொழியில் எழுதப்பட்ட அச்சுயசரிதை நூல் 2005இல் வெளிவந்தது.

தலித் சுயசரிதை என்னும் அளவில் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான நூல்களில் அதுவும் ஒன்று. 1936ல் வெளிவந்த இரட்டைமலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ என்னும் நூலையடுத்து பெருங் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நூல் ‘வடு’. பாமாவின் ‘கருக்கு’, ராஜ் கவுதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ஸ்ரீதர கணேசனின் ‘சந்தி’, சிவகாமியின் ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ ஆகியவை தலித் தன்வரலாற்று நூல் முயற்சியில் குறிப்பிடத்தக்கவை.

கன்னடத்திலும் மராட்டியத்திலும் வெளிவந்த தன் வரலாற்று நூல்களை கணக்கிட்டால், தமிழில் மிகமிக குறைவாகவே தலித் சுயசரிதைகள் வெளிவந்துள்ளன. தன்னுடைய வலியையும் வேதனையையும் அடுத்தவர்க்குச் சொல்லி, அதன் மூலம் எந்த சகாயங்களையும் கோர கே.ஏ.குணசேகரன் ‘வடு’வை எழுதவில்லை. தலித் அரங்கியல், தலித் அரசியல் என்னும் தளத்தில் தனக்குப் பின்னால் வரக்கூடியவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவே அந்நூலை எழுதியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அந்நூலில் அவர் இந்த சமூகத்தில், தான் கால் ஊன்றிக்கொள்ள பயன்பட்ட அத்தனைபேரையும் குறிப்பிட்டிருக்கிறார். இளவயதிலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் தலித் என்பதற்காக ஒரு கலைஞன் எங்கெல்லாம் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான் என்னும் உண்மையை அந்நூல் பேசுகிறது. மீண்டும் மீண்டும், தான் ஒரு தலித்தாகவே நடத்தப்படுவோம் என்ற தயக்கத்தை அவர் அந்நூலில் எங்கேயும் காட்டவில்லை. பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லும் மொழிநடை விசேஷமானது.

அந்நூலில் காமராஜரும், எம்.ஜி.ஆரும் நாட்டுப்புறப் பாடல்கள் மீது கொண்டிருந்த பார்வை என்ன என்பதைப் பதிவு செய்திருக்கிறார். தன்னுடைய  பாடலைக் கேட்ட காமராஜர் தனக்கு வழங்கப்பட்ட காளி மார்க் கலர் பாட்டிலைக் கொடுத்து கெளரவித்தார் என்கிறார். தம்முடைய மைத்துனரான முனியாண்டியின் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். பத்தாயிரம் ரூபாய் பரிசளித்ததை பெரும் உற்சாகத்தோடு பதிவு செய்கிறார்.

நூல் குறித்து எழுத்தாளர் சுந்தர ராமசாமி, ‘திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிடக் கழகமும் தன் வாழ்வில் கொண்டிருந்த பங்கு குறித்து குணசேகரன் எழுதவில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார். ‘பராசக்தி’யில் நடிகர் சிவாஜி கணேசனின் பெயர் குணசேகரன் என்பது ஏனோ இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

‘வடு’ என்னும் சுயசரிதை நூலில் தன் வாழ்வில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை எந்த பூச்சும் இல்லாமல் மக்கள் மொழியில் எழுதியிருக்கும் கே.ஏ.குணசேகரன், தன்னை இந்த சமூகம் தலித்தாகப் பார்த்து ஒதுக்கியதற்கான காரணங்களைத் தேட முயன்றிருக்கிறார். அந்தத் தேடலில் ஓர் இடத்திலும் அவர் தன்னைத் தொலைக்கவில்லை.

கல்லூரிக் கால நிகழ்வுகளைக் குறிப்படுகையில், ஒரு வாரத்திற்குத் தேவையான புளியோதரையை ஓலைப்பெட்டியில் கட்டிக்கொடுத்த அம்மாவை நினைவுபடுத்துகிறார். தனியார் விடுதியில் தங்கி தேர்வு எழுதும் வசதியில்லாததால் ஆறு நாளைக்கு முன் தயாரித்த புளியோதரையை உண்டதாகக் குறிப்பிடுகிறார். பூசணம் பூத்த அந்தப் புளியோதரையை உண்டதால் ரத்த பேதி ஏற்பட்டு, உள்ளாடைக்கு மேல் வேட்டியணிந்து அதன்மேல் கால்சிராயைப் போட்டுக்கொண்டு தேர்வு எழுதியதைக் கதைபோல் அவர் சொல்லிச்செல்வது கண்ணீரை வரவழைக்கிறது.

‘வறுமையும் தீண்டாமையும் சுழற்றிச் சுழற்றி அடித்ததால்தான் நான் மக்கள் முன் வந்து விழுந்தேன்’ என்கிறார். தன்னை தலித்தாக உணர்ந்தபொழுது அதிலிருந்து தன்னை மட்டும் விடுவித்துக்கொள்ள முயலாமல் ஒட்டுமொத்த தலித்துகளின் விடுதலைக்காகப் போராடும் இடத்தை வந்தடைந்திருக்கிறார். “தலித் இசைக்கருவிகளை திரையில் பயன்படுத்திய முன்னோடி” என்று இசைஞானி இளையராஜாவைப் பற்றி அவர் எழுதியதுகூட அந்தப் புரிதலில் இருந்துதான்.

ஆனால், இளையராஜாவோ அந்த வாசகத்தை மட்டுமல்ல, யார் ஒருவரும் தன்னை தலித் என்று அடையாளப்படுத்துவதை விரும்பாததால் கே.ஏ.குணசேகரன் மீது மான நஷ்ட வழக்குத் தொடுத்தார். அத்துடன் அந்த நூல் வெளிவரவே கூடாதென்றும் நீதிமன்றத்தில் ஆணைபெற்றார். கே.ஏ.குணசேகரனின் நோக்கம் இளையராஜாவை சிறுமைப் படுத்துவதல்ல.

அவர் எழுதிய அந்த நூல் இசையின் ஊடாக இளையராஜாவின் சாதனைகளைப் பேசுவதே. ஆனாலும், இளையராஜா அதை நல்லவிதமாகப் புரிந்துகொள்ளவில்லை என்ற  வருத்தம் அவருக்கு இருந்தது. இளையராஜா இவ்விஷயத்தில் நடந்துகொண்ட விதத்தை தலித் செயல்பாட்டாளர்கள் விமர்சித்தாலும் இளையராஜாவின் உள்ளக் கிடக்கையை அறியும் சந்தர்ப்பம் யாருக்கும் வாய்க்கவில்லை.

தன் பார்வையிலிருந்து இன்னொருவரைப் பார்ப்பதிலுள்ள அரசியலைப் புரிந்துகொள்வது எளிதல்ல. அடையாளத்திலிருந்து விடுபடுவதும், அடையாளத்தைத் தக்கவைப்பதும் அவரவர் உணர்வு சம்பந்தப்பட்டது. மதுரை தலித் ஆதார மையத்தின் உதவியோடு கே.ஏ.குணசேகரனும் தலித் சுப்பையாவும் இணைந்து உருவாக்கிய ஒலிநாடாக்கள் இன்றும் பாராட்டத்தக்க எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நாடகவியலிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவராக அவர் அறியப்படுகிறார். அவருடைய ‘பலி ஆடுகள்’, ‘அறிகுறி’, ‘சத்திய சோதனை’, ‘வெகுமதி’, ‘மாற்றம்’, ‘மழி’, ‘தொடு’, ‘பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு’ முதலான நாடகப் பிரதிகள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கன.

‘பலி ஆடுகள்’ நாடகப் பிரதியில், ‘இந்துக்கள் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக சாமிகளுக்கு ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள். சிங்கங்களை அல்ல’ என்ற அம்பேத்கரின் கூற்றை முன்வைத்திருக்கிறார். தலித்திலும் கீழானவர்களாக நடத்தப்படும் பெண்களையும் அவர்களின் விடுதலையையும் நேர்மையாக வெளிப்படுத்திய நாடகம் அது.

அரசியலின் வேர்க்காலில் இருந்தே அவருடைய படைப்புகள் அரும்பியிருக்கின்றன. ‘புதுத்தடம்’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ள அவருடைய கவிதைகள், வாய்மொழி இலக்கிய வடிவத்தை ஒத்து எழுதப்பட்டுள்ளன. படிமமோ, உருவகமோ அற்ற அக்கவிதைகள் வெடித்துக் கிளம்பும் கோபத்தின் வெளிப்பாடுகள். சொல்லப்போனால் அவருடைய கவிதைகளே தலித் கவிதைகளுக்கான ஊற்றுக் கண்களைத் திறந்தன.

பல கலை, இலக்கிய வடிவங்களில் தலித் குரலை முன்னெடுத்த கே.ஏ.குணசேகரன், சினிமாவிலும் தலைகாட்டினார் என்பது கவனத்துக்குரியது. சினிமா அவரை பேராசிரியராகவோ, கவிஞராகவோ, பாடகராகவோ, நிகழ்த்துக்கலை நிபுணராகவோ நடத்தவில்லை. ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகவே நடத்தியது. தங்கர் பச்சானின் ஒருசில படங்களில் அவர் தலைகாட்டும் போதெல்லாம் தன் உயரம் அறியாமல் இப்படியான காட்சிகளில் எல்லாம் அவர் நடிக்கவேண்டுமா என்றிருக்கும்.

என் போன்றவர்கள் அப்படிக் கருதினாலும் அவர் அதை மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொண்டார். உதிரி பாத்திரங்களில் வந்துபோவதை தகுதிக் குறைவாக எண்ணவில்லை. கரு.பழனியப்பன் இயக்கிய ‘சிவப்பதிகாரம்’ திரைப்படத்தில் கொஞ்சம் கூடுதலான கவனத்தைப் பெற்றார். காரணம், கதாநாயகன் நாட்டுப்புற பாடல்களை சேகரிப்பவன். நாட்டுப்புற பாடல்களில் உள்ள அத்தனை வகைகளையும் அவர் உதவியோடு இசையமைப்பாளர் வித்யாசாகர் மிக நேர்த்தியாக உருவாக்கியிருப்பார். 

பல ஆண்டுகள் கழித்து கே.ஏ.ஜியை சந்தித்தேன். என் வளர்ச்சிகண்டு மெய்சிலிர்த்துப் போன அவர், என்னை ஆரத்தழுவிக்கொண்டு “அப்பாவை, மாமா கேட்டதாகச் சொல்...” என்றார். அவர் அப்படிச் சொன்னதும் உடனிருந்த படக்குழுவினருக்கு ஒரே ஆச்சர்யம். அப்போது வித்யாசாகர் “ஏற்கனவே உங்களுக்கு அய்யாவைத் தெரியுமா?” என்றார். “அவரால்தான் நானே உங்களுக்குத் தெரியும்படி உருவானேன்!” என்றதும் வித்யாசாகரின் கண்கள் பனித்தன.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்