இந்து சமய அறநிலைய வாரியத்தின் முதல் தலைவர்!



தமிழ்நாட்டு நீதி மான்கள் - 26

கோமல் அன்பரசன்

டி.சதாசிவ அய்யர் பால் மணம் கூட மாறி இருக்காது. ஆறேழு வயதில் திருமணத்தை முடித்து வைத்துவிடுவார்கள். சுற்றி என்ன நடக்கிறது என்பது புரிய ஆரம்பிப்பதற்குள்ளேயே அவர்களில் கணிசமான பேரின் வாழ்க்கை முடிந்து போய் ஏழெட்டு வயதுகளிலேயே விதவைக்கோலம் போட்டிடுவார்கள். அதற்குப்பிறகு மொத்தமும் நரகம்தான்!

அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் மகிழ்வான நிகழ்வுகள் எதிலும் பங்கு கொள்ள முடியாது. அவ்வளவு ஏன்? வாய்விட்டுச் சிரிப்பதற்கும் உரிமை கிடையாது. அதிலும் பிராமண சமூகத்தில் விதவைகளுக்கு மொட்டை அடித்துவிடும் கொடூரமும் இருந்தது. விதவை மறுமணம் என்ற வார்த்தையே பிழையாக பார்க்கப்பட்ட 19ம் நூற்றாண்டுச் சூழலில், துணிச்சலாக அதற்கு ஆதரவளித்தவர் டி.சதாசிவ அய்யர். விதவை ஒருவர் மறுமணம் செய்துகொண்டபோது அந்த தம்பதிக்கு விருந்து வைக்க வீட்டிற்கு அழைத்தார்.

உறவினர்கள் கொதித்துப்போனார்கள். ‘சாதியைவிட்டு விலக்கிவிடுவோம்’ என்று பயமுறுத்தினார்கள். அய்யர் எதற்கும் மசியவில்லை. நினைத்தபடியே புரட்சித் திருமணம் புரிந்த தம்பதிக்கு விருந்து வைத்தார். சதாசிவ அய்யரின் மனைவி மங்களம் சிரித்த முகத்தோடு அவர்களை வரவேற்று உபசரித்தார்.

ஆமாம்… கணவரின் சீர்திருத்த எண்ணங்களுக்கு பக்கபலமாக செயல்பட்டவர் மங்களம்மாள். விதவைகளின் மறுவாழ்வுக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்த சதாசிவ அய்யர் விரும்பிய போது 1920களில் அதற்கான பணிகளை முன்னெடுத்தவர் அவரது நெருங்கிய நண்பரான ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. அன்றைக்கு தமது சமூகத்தில் நிலவி வந்த இன்னொரு வழக்கத்தையும் அய்யர் உடைத்தெறிந்தார்.

குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சம்பந்தம் செய்ய வேண்டும் என்பதை மீறி தன் பிள்ளைகளுக்கு வெவ்வேறு பிரிவுகளில் திருமணம் செய்து வைத்தார். தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தார். சமூக சீர்திருத்த சிந்தனைகள் கொண்ட கட்டுரைகளை அப்போது வாரப் பத்திரிகையாக வந்து கொண்டிருந்த ‘ஹிந்து’ போன்ற இதழ்களில் கிருஷ்ணதாசர் என்ற பெயரில் எழுதி வந்தார். ‘ஹிந்து ரிஃபார்மர் & பாலிடீஷியன்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காக திவான் பகதூர் ரகுநாதராவ் உருவாக்கிய ‘ஆரிய மத சபா’வின் முக்கிய உறுப்பினரானார். இப்படி கண்மூடித்தனமான சில வழக்கங்கள் காலத்திற்கேற்ப மாறவேண்டுமென்று செயல்பட்ட சதாசிவ அய்யர், தெய்வ நம்பிக்கைகளிலும் கலாசாரத்தைக் காப்பாற்றுவதிலும் உறுதியாக இருந்தார்.

தீவிர கிருஷ்ண பக்தராக இருந்தார். மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் தொடர்ந்து சனிக்கிழமை தோறும் பகவத் கீதை பற்றி சொற்பொழிவு ஆற்றினார். ‘இளைஞர்கள் கண்டிப்பாக பகவத் கீதையைப் படிக்க வேண்டும்’ என்று அடிக்கடி வலியுறுத்துவார். அதற்கு முன்னுதாரணமாக அவரது குழந்தைகள் கீதையைக் கரைத்துக் குடித்தவர்களாகத் திகழ்ந்தனர்.

அந்தளவுக்கு கிருஷ்ண பக்தராக விளங்கிய சதாசிவ அய்யரின் நெற்றியில் எப்பொழுதும் விபூதி பளிச்சென இருக்கும். கழுத்தில் ருத்திராட்சம் மின்னும். கும்பகோணத்திற்குப் பக்கத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் வசதி படைத்த மிராசுதார் தியாகராஜ அய்யரின் மகனாக 1861, ஜூன் 23ல் சதாசிவம் பிறந்தார். பிரபல விஞ்ஞானி சர்.சி.வி.ராமன், தியாகராஜ அய்யரின் பங்காளி முறை உறவுக்காரர். வறுமை தெரியாமல் வளர்ந்த சதாசிவம், படிப்பில் கெட்டியாக இருந்தார்.

‘தி கேம்ப்ரிட்ஜ் ஆஃப் ஈஸ்ட்’ என்று புகழப்பட்ட கும்பகோணம் அரசுக்கல்லூரியில் படித்தார். அங்கே பிரபல பேராசிரியர்களான போர்டர், கோபால் ராவ் போன்றவர்களின் அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்த மாணவராகத் திகழ்ந்தார். 16 வயதில் பி.ஏ.பட்டம் பெற்றவர், பின்னர் சென்னை வந்து 1879ல் பி.எல் பட்டமும் பெற்றார்.

அந்த வகையில் 19 வயதிற்குள் வக்கீலுக்குப் படித்து முடித்து சாதனை புரிந்தார். முன்னணி வழக்கறிஞராக இருந்த ராஜா டி.ராமாராவிடம் தொழில் பழகுநராகச் சேர்ந்தார். பிறகு பி.குருமூர்த்தி அய்யரிடம் ஜூனியராக இருந்தார். 1882ல் தனியாக தொழில் தொடங்கினார். வழக்கறிஞராக சம்பாதிக்க வேண்டிய குடும்ப சூழல் இல்லாததால், சமூகப்பணிகளில் ஈடுபட்ட படியே ‘எம்.எல்’, ‘ஹிண்டு லா’ படித்தார்.

இதையடுத்து ஆங்கிலேய அரசு வைத்திருந்த விதிப்படி சட்டத்தில் முதுநிலை படிப்பு முடித்த சதாசிவ அய்யருக்கு மாவட்ட முன்சீப் பதவி தேடி வந்தது. முதலில் அரியலூரிலும், பின்னர் மதுரையிலும் பணியாற்றினார். 1904ல் பதவி உயர்வு பெற்று ‘சப் - ஜட்ஜ்’ ஆனார். திருவிதாங்கூர் சமஸ்தான உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

6 ஆண்டுகள் திருவனந்தபுரத்தில் பணியாற்றிய பிறகு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த கஞ்சம் மாவட்ட நீதிபதியாக ( ஜில்லா ஜட்ஜ்) பணி ஏற்றார் ( கஞ்சம்  பகுதி இப்போது ஒடிசா மாநிலத்தில் இருக்கிறது). திருநெல்வேலியிலும் மாவட்ட நீதிபதி பொறுப்பு வகித்தார். 1912ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியானார்.

அதுவரை ஓரளவு அறிமுகமாகி இருந்த சதாசிவ அய்யரின் பெயர் மெட்ராஸ் மாகாணம் முழுக்க பரவத் தொடங்கியது. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் இந்து மதச் சட்டங்களாக நடைமுறையில் இருந்த, கால மாற்றத்திற்குப் பொருந்தாத பலவற்றை அவர் உடைத்துப் போட்டதே இதற்கு முக்கிய காரணம்.

உதாரணமாக, ‘பார்வையில்லாமல் பிறந்த ஆண் மகனுக்குக் குடும்பச் சொத்தில் பங்கில்லை’ என்று பழைய சாஸ்திரத்தில் எழுதி வைத்திருந்தார்கள். இதுதான் அன்றைக்கு இந்து சட்டமாக இருந்தது. அநியாயமான இச்சட்டத்தை சதாசிவ அய்யர் ஏற்கவில்லை. கண் தெரியாத மகனுக்கும் சொத்தில் பங்குண்டு என ஒரு வழக்கில் தீர்ப்பளித்தார்.

பணகுடி ஆலய வழக்கில் வழிபாடு தொடர்பாக அய்யர் அளித்த தீர்ப்பு பரபரப்பாக பேசப்பட்டது. அதில், “கோவில் பூசாரியினத்தைச் சேர்ந்த பிராமணருக்கு மாத்திரமே கர்ப்பக் கிரகத்துக்குள் நின்று வழிபட உரிமையுண்டு. சாதாரண பிராமணர்களும், பிள்ளைமார்களும், முதலியார்களும் வெளி மண்டபத்தில் நின்றுதான் தொழ உரிமை உடையவர்கள்” என்பது போன்ற கருத்துகளை அவர் தெரிவித்திருந்தார்.

இது இரு தரப்பிலும் எதிர்ப்புகளுக்குள்ளானது. சதாசிவ அய்யர் தீர்ப்பு சொன்ன மற்றொரு முக்கியமான வழக்கு, ‘பூண்டி கொலை வழக்கு’. மருமகளைக் கொன்றதாக பூண்டி வைத்தியநாத பிள்ளை என்ற மிராசுதாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மீதான மேல்முறையீட்டை வெள்ளைக்கார நீதிபதி பேக்வெல் - சதாசிவ அய்யர் ஆகிய இருவரும் சேர்ந்து விசாரித்தனர்.

தீர்ப்பில் வைத்தியநாத பிள்ளை குற்றவாளி என்று பேக்வெல் கூறினார். சதாசிவ அய்யரோ, நிரபராதி என்று சொல்லி அவரை விடுதலை செய்தார். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் வழக்கு மூன்றாவது நீதிபதியான சங்கரன் நாயரிடம் சென்றது. பேக்வெல் எடுத்த முடிவே சரி என அவர் கூறிவிட்டார். வைத்தியநாத பிள்ளை பிரிவி கவுன்சிலுக்குப் போனார்.

அங்கே சதாசிவ அய்யர் அளித்த தீர்ப்பே சரியானது என்று முடிவானது. இப்படியாக பல வழக்குகளில் அய்யரின் தீர்ப்புகள் பேசப்பட்டன. அவற்றில் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த ‘ஹோம்ரூல் பிளாக் வழக்கு’, ‘பி.வரதராஜுலு நாயுடு வழக்கு’ போன்றவை முக்கியமானவை.

1921ல் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிலிருந்து இருந்து ஓய்வு பெற்றவர், அப்போதுதான் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலைய வாரியத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். கோயில்களையும் அவற்றின் சொத்துகளையும் நிர்வகிப்பதற்காக நீதிக்கட்சி அரசு இந்த வாரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு பொருத்தமானவராக சதாசிவ அய்யர் இருப்பார் என்று அன்றைய அரசாங்கம் நம்பியது.

பிற்காலத்தில் அடையாறு பிரம்மஞான சபையுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த அய்யர், அன்னிபெசன்ட் போன்றோருடன் நட்பு பாராட்டினார். பெசன்ட் அம்மையாரின் ‘ஹோம்ரூல் இயக்கத்தின்’ சார்பில் மதனப்பள்ளியில் உருவாக்கப்பட்ட முதல் தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சதாசிவ அய்யர் பொறுப்பு வகித்தார். இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக ரவீந்திரநாத் தாகூர் இருந்தார்.

பெரிய போராட்டங்கள் இல்லாமல் அதே நேரத்தில் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த சதாசிவ அய்யர், தனது தாய் மாமா ஏ.ராமச்சந்திர அய்யரின் மூத்த மகளான மங்களம்மாளை திருமணம் செய்து கொண்டார். மனமொத்த தம்பதிகளான இவர்களுக்கு 5 ஆண் குழந்தைகளும் (விசுவநாதன், கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜன், சுவாமிநாதன், ராமச்சந்திரன்), 3 பெண்களும் (பாலம்மா, சியாமளா, பார்வதி) இருந்தனர்.

சுயமாக சம்பாதித்த பிறகு பூர்வீக சொத்தில் உள்ள தனது பங்கு முழுவதையும் சொந்த ஊரான மாங்குடியில் தாழ்த்தப்பட்டோர் பள்ளிக்கூடத்திற்கும், புருசக்குடியிலுள்ள பரம்பரை கோயிலுக்கும் எழுதி வைத்துவிட்டார். 1927, டிசம்பர் 1 ம் தேதி சென்னையில் காலமான டி.சதாசிவ அய்யரின் முற்போக்குச் செயல்பாடுகள் எப்போதும் நமக்கு வழிகாட்டும்!

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

அன்பு மனைவி !

சதாசிவ அய்யரின் மனைவி மங்களம் அறிவாற்றல் நிறைந்தவர். அய்யரின் மீது அளவு கடந்த அன்பும் பக்தியும் வைத்திருந்தார். ‘ஆதர்ச தம்பதி’ என்பதற்கு அர்த்தமாக இருவரும் வாழ்ந்தார்கள். பெரிய குடும்பத்தின் தலைவியாக மட்டுமின்றி, கணவரின் சீர்திருத்த செயல்களுக்கும், பெண்ணுரிமை குரலுக்கும் உற்ற துணையாக விளங்கினார்.

விதவைகள் மறுவாழ்வுக்கான அமைப்புகளில் திரு.வி.கவுடன் இணைந்து மங்களம்மாள் தீவிரமாகச் செயல்பட்டார். 1927ம் ஆண்டு புனே நகரில் நடந்த அனைத்திந்திய மகளிர் மாநாட்டில் பங்கேற்ற அவர், பெண்களின் திருமண வயதை 18 ஆகவும் ஆண்களுக்கு 25 எனவும் உறுதி செய்ய சட்டம் கொண்டுவர வலியுறுத்தினார்.

தமிழில் பேசினாலும் வேதங்களில் இருந்தும் பழைய நூல்களில் இருந்தும் அவர் எடுத்து வைத்த மேற்கோள்கள் அழுத்தம் திருத்தமாக அமைந்தன. மங்களம்மாளின் பணிகளைப் பாராட்டி அவருக்கு ‘கௌரவ மாஜிஸ்திரேட்’ என்ற சிறப்பு அளிக்கப்பட்டது.

அது வேறு; இது வேறு!

மயிலாப்பூர் கிளப்பின் தலைவராக சதாசிவ அய்யர் சில காலம் இருந்தார். அப்போது நாள்தோறும் அங்கே அய்யர் வருவார். மற்றவர்களோடு சேர்ந்து இயல்பாக, உற்சாகமாக இருப்பார். ஆனால், மயிலாப்பூர் கிளப்பில் இருக்கும் சதாசிவ அய்யருக்கும், நீதிபதி சதாசிவ அய்யருக்கும் தொடர்பு ஏதும் இருக்காது. அங்கே அரட்டையடித்த உரிமையுடன் வக்கீல்கள் யாராவது நீதிமன்றத்தில் நடந்து கொள்ள முயன்றால் அவ்வளவுதான், தொலைந்தார்கள். அந்தளவுக்கு தமது வாழ்க்கை முறையை வகைப்படுத்தி வைத்திருந்தார்!

பெருமைமிக்க தம்பி!

சதாசிவ அய்யரின் தம்பி டி.பரமசிவ அய்யர் மைசூர் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர். வேதங்களில் நிபுணராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். இவர் எழுதிய ‘ராமாயணா & லங்கா’ என்ற அரிய ஆராய்ச்சி நூலை, தான் பெரிதும் மதிக்கும் அண்ணன் டி. சதாசிவ அய்யருக்கு காணிக்கையாக்கி உள்ளார். அந்த ஆங்கில நூல் 1940ல் பெங்களூருவிலிருந்து வெளிவந்திருக்கிறது. புகழ் பெற்ற கன்னட எழுத்தாளரும் நாடகாசிரியருமான டி.பி.கைலாசம், பரமசிவ அய்யரின் மகனாவார்.