விளம்பரம் செய்திருந்தா இன்னும் சிறப்பா கவனிக்கப்பட்டிருக்கும்!



தமிழ் சினிமாவில் புது ரத்தம்

பாம்புசட்டை - ஆடம்தாசன்

‘‘சமீபத்துல இயக்குநர் சங்கத்துல ‘பாம்பு சட்டை’ ஸ்கிரீன் பண்ணியிருந்தாங்க. பார்த்த அத்தனை பேரும் படம் முடிஞ்சதும் எழுந்து நின்னு கைதட்டினாங்க. நல்ல படத்துக்கான அங்கீகாரம் அது...’’ திருப்தியாகப் பேசுகிறார் ஆடம் தாசன். ஷங்கரின் பட்டறையில் கூர் தீட்டப்பட்டவர் இவர்.

‘‘திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர்தான் நான் பொறந்து வளர்ந்த ஊர். அம்மா நிறைய சினிமா பார்ப்பாங்க. அதுவும் எம்ஜிஆர் படம்னா கண்டிப்பா என்னையும் கூட்டிட்டு போவாங்க. இப்படி படம் பாத்து பாத்து வளர்ந்த எனக்கும் சினிமா ஆசை வந்தது. நிறைய கனவுகளோட சென்னை வந்து சேரன் சார்கிட்ட சேர முயற்சி பண்ணினேன். அப்ப அவர் பீக்ல இருந்தார். சந்திக்கவே முடியல. அப்புறம் பாலுமகேந்திரா சார்கிட்ட சேர டிரை பண்ணினேன்.

அவர் டிவி சீரியல் பண்ணிட்டிருந்தார். இதுக்குப் பிறகுதான் ஷங்கர் சார்கிட்ட சேர்ந்தேன். ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்கள்ல வேலை பார்த்தேன். மிகப்பெரிய இயக்குநர்கிட்ட இருந்து வந்ததால ‘பாம்பு சட்டை’ கதை ரெடியானதும் தயாரிப்பாளர் பிடிக்க அதிகம் சிரமப்படலை. எளிதா படம் பண்ணிட்டேன். சில காரணங்களால பட வெளியீடு தள்ளிப் போச்சு.

கடைசியா, படம் ரிலீஸானப்ப போதுமான பப்ளிசிட்டி செய்யலை. அதுல ரொம்ப வருத்தம் இருக்கு. ஒரு படத்தோட வெற்றிக்கு முதல் மூணு நாட்களுக்கு விளம்பரம் அவசியம். ‘பாம்புசட்டை’க்கு அந்த கொடுப்பினை கிடைக்கல. சரியான விளம்பரம் கிடைச்சிருந்தா, என்னோட படம் இன்னும் சிறப்பா கவனிக்கப்பட்டிருக்கும்...’’ என்கிறார் வருத்தம் தோய்ந்த குரலில்!