கால்
-கவின் மலர்
பிரம்மாண்டத்தை சுமந்து செல்லும் லாரியொன்றில் படுத்திருக்கிறார் சாந்தா கிளாஸ். செந்நிறக் குன்று ஒன்றை சுமந்துசெல்லும் அவ்வாகனத்தை பின்தொடர்கிறேன்
 ஏதோவொரு ரிசார்ட்டிலோ பொருட்காட்சியிலோ வாயிலில் நடனமாடி பிள்ளைகளுக்குப் பரிசளிக்கப் போகும் வானளாவிய பொம்மைதான் அது எனினும் அதன் கால் வெளியே நீட்டிக்கொண்டிருக்க அவ்வப்போது மேடுபள்ளங்களை அவ்வாகனம் கடக்கையில் மனம் பதறவே செய்கிறது. மகாகுழியொன்றின் பலனாக சாந்தாகிளாஸின் ஒரு கால் மட்டும் கழன்று விழுவதையறியா லாரி ஓட்டுனர் வெகுதொலைவு சென்றுவிட்டார் நான் அங்கேயே விக்கித்து நிற்கிறேன் அந்த ஒற்றைக் கால் மட்டும் என் கழுத்தளவு உயரம். இரவெல்லாம் என் கனவில் மைதானமொன்றில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழ்ந்துநிற்க பரிசுப் பொருட்களை எடுத்துத் தருகிறார்கள் பல நூறு சாந்தா கிளாஸ்கள் தவிரவும் ஒற்றைக்காலோடு தடுமாறியவாறே ரகசியமாய் கண்ணீர் உகுக்கிறார்கள்.
|