மரியாதை



-ஸ்ரீதேவி மோகன்

இருப்பதிலே நல்ல சட்டையாகப் பார்த்து இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். ‘‘என்னம்மா… கல்யாணத்துக்குக் கிளம்பலயா…?’’ வெளியே அப்பாவின் குரல் கேட்டது. வாசலில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த சாந்தியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கட்டாயம் ‘இல்லை’ என்று தலையாட்டி இருப்பாள், என்று யோசிக்கும்போதே அப்பாவின் குரல் சத்தமாக ஒலித்தது.

‘‘ஏன்டா… கூட்டிட்டு போல?’’ ‘‘நா மட்டும்தான் போறேன்...” ‘‘ஏன்? அது எங்க போவுது வருது. இந்த கிராமத்திலே பிறந்து இங்கேயே வாக்கப்பட்டு கிடக்கு. அதுக்கும் ஆசை இருக்காதா? புள்ளைகளுக்கும் பராக்கா இருக்கும்...’’ ‘‘வேணாம்ப்பா. வெயில் ஜாஸ்தியா இருக்கு. ஞாயிற்றுக்கிழமை வேற… பஸ்ஸெல்லாம் கூட்டமா இருக்கும்...’’ பேசிக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டேன். பாத்திரங்களை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சாந்தி என்னை ஏக்கமாய் பார்த்தாள்.

‘‘சரிப்பா, கிளம்புறேன். வரேன் சாந்தி...’’ எங்கிருந்தோ வந்து கால்களைக் கட்டிக்கொண்டாள் தர்ஷினி. ‘‘அப்பா நானும் வரேன்பா...’’  ‘‘இல்ல பாப்பா… அப்பா ரொம்ப தூரம் போறேன். வரும் போது உனக்கு சாக்லெட் வாங்கியாறேன்... என்ன? நீ போய் விளையாடு. ம்ம்…?’’ ‘‘ம்ம்…’’ என்றபடி ஓடினாள் மூத்தமகள். சின்னது தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.

‘‘மொய் கவர் எடுத்துக்கிட்டீங்களா?’’ செருப்பு போடும்போது சாந்தியின் குரல் கேட்டு நிமிர்ந்தேன். ‘‘ம்ம்… எடுத்துக்கிட்டேன்...’’ அவள் கன்னத்தில் மெல்ல தட்டி ‘‘வரேன்’’ என்று சிரித்தேன். அவளும் மெல்ல புன்னகைத்தாள். மேனேஜர் மச்சானுக்குத் திருமணம். லேட்டா போனா என்ன நினைப்பாங்களோ… மதுராந்தகத்திலிருந்து அண்ணாநகர் போயாகவேண்டும். பஸ் கிடைக்க தாமதமாகுமோ என்ற எண்ணத்தில் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிவிட்டேன் போல… 5.30 மணிக்கெல்லாம் மண்டபத்துக்கு வந்துவிட்டேன்.

வரவேற்கக் கூட ஆளில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ‘‘வாடா குமரேசா…’’ என மேனேஜர் குரல் கேட்கும் போதே ‘‘என்னங்க…’’ என பின்னாடியே வந்தார் அவரது தர்மபத்தினி. “வாப்பா…” என்று என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டு மேனேஜர் பக்கம் திரும்பினாள்.

‘‘மாப்பிள்ளையோட கோட் எங்க வச்சிருக்கீங்க? வாங்க வந்து எடுத்துக்கொடுங்க...’’ இந்தப் பக்கம் ஒரு வண்டி சத்தம் கேட்டது. ‘‘சார், தேங்காய் மூட்டை எங்க இறக்கணும்?’’ ‘‘இதோப் இப்படி இறக்குங்க. குமரேசா… பார்த்துக்க. எல்லாத்தையும் மேல மாப்பிள்ளை ரூமுக்கு கொண்டு வந்து வச்சிடு...’’ ‘‘என்னங்க…’’ மீண்டும் மனைவியின் குரல் சத்தமாக எழ ‘‘இதோ வரேன் இரு…’’ என்றபடி மேலே போனார்.

கொஞ்சம் கொஞ்சமாக தூக்கிக் கொண்டு போய் மேலே வைத்தேன். வேர்த்து வழிய கீழே ஒரு சேரில் அமர்ந்தேன். ‘‘தம்பி இத ஒரு கை பிடிக்கிறீங்களா..?’’ காபி டின்னை கூட தூக்கிக்கொண்டு போய் வெளியே வைத்தேன். ஜனம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் துவங்கியது. காபிக்கு பக்கத்தில் ஜூஸும் வைக்கப்பட்டிருந்தது. தலைவலிப்பது போல் இருந்தது. கொஞ்சம் காபி குடிக்க ஆரம்பித்தேன்.

சார் வந்தார். ‘‘காபி குடிக்கிறீங்களா?” ‘‘ஆ… இருக்கட்டும். நீ… காபி குடிச்சிட்டு வர்றவங்களுக்கு காபியோ, ஜூஸோ தேவையானதை குடுப்பா…’’ ‘‘சரி சார்…’’ வெளியே ஆர்டர் கொடுத்திருந்த வெஜ் பிரியாணி வந்திறிங்கியது. அதைப் பார்த்தபடி அங்கு வந்தார் மேனேஜரின் அப்பா. ‘‘தம்பி, இந்த பிரியாணி பாத்திரத்தைக் கொண்டு போய் உள்ளே வைப்பா...’’ பதிலுக்குக் காத்திராமல் என் தலையில் தூக்கி வைத்தார்.

தலையில் இறங்கிய சூட்டில் முடி தீய்ந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. உள்ளே கொண்டு போய் இறக்கும்போது அங்கு நின்றிருந்த சமையல்காரர் சிநேகமாய் சிரித்தார். ‘‘நீங்க தம்பி?’’ ‘‘நான் சிவநேசன். சார் ஆபீஸில் வேலை பார்க்குறேன்...’’ என்றேன். ‘‘கல்யாணத்துக்கு வந்தீங்களா?’’ ‘‘ம்…’’ ‘‘ஆனா… வந்ததில் இருந்து ஓடிட்டே இருக்கீங்க..?’’ கேட்டுவிட்டு நகர்ந்தார்.

அக்கவுண்டன்ட் சேகரும், மற்ற சக ஊழியர்களும் மெதுவாக ஏழு மணிக்கு மேல் உள்ளே நுழைந்தனர். வந்தவுடன் சாருக்கு வணக்கம் வைத்த கையோடு சேகர் சார் டைனிங் ஹாலுக்கு சென்றார். பரிமாற ஆட்கள் இருந்தனர். கொஞ்ச நேரம் சார் கண்ணில் படும்படி சாப்பிட வருகிறவர்களை வணக்கம் வைத்து உள்ளே போகுமாறு சொல்லிக் கொண்டிருந்தார்.

பிறகு சாப்பிட்டுவிட்டு நைஸாக நழுவி விட்டார். ஆபீஸ் ஸ்டாப்ஸ் இருக்கும் போதே எல்லோரும் மேடை ஏறி மொய் கவரைக் கொடுத்து விட்டோம். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பிறகு பஸ் கிடைப்பது கடினம். சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன். யாரோ தோளைத் தொட்டார்கள். திரும்பியவன் புன்னகைத்தேன்.

‘‘ஆ… அண்ணே… கிளம்புறேன்...’’ ‘‘இந்தாங்க...’’ என்று சமையல்காரர் என் கையில் ஒரு பொட்டலத்தைத் திணித்தார். கொஞ்சம் ஸ்வீட்ஸ். சிரித்து கைகுலுக்கி கிளம்பினேன். சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று சார் அருகில் சென்றேன். அசிஸ்டெண்ட் மேனேஜர் கண்ணன் சாரிடம் போன் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய வீட்டிலும் ஒரு ஃபங்ஷன் என்பதால் அவர் வரவில்லை.

‘‘ஆ… அதெல்லாம் ஒன்றும் பிரச்னை இல்லை. நல்லபடியா போய்க்கிட்டு இருக்கு. பரவாயில்லை. நீங்க காலைல வாங்க. இங்க சேகர் இருக்கார். அவர் பார்த்துக்கிறார். ம். ஓ.கே. ஓ.கே...’’ ‘‘கிளம்புறேன் சார்...’’ ‘‘ம் சரிப்பா... சாப்பிட்டியா?’’ ‘‘ஆச்சு சார். வரேன்...’’ பஸ்ஸில் கூட்டம் அதிகமில்லை.

வேலையின் களைப்பில் கண் அசத்திக்கொண்டு வந்தது. ஆபீஸிலும் பெரும்பாலும் உடம்பை அசத்தும் வேலைதான். நூறு, இருநூறு கிலோ எடை கொண்ட க்ரஷ்ஷரின் ஸ்பேர் பார்ட்ஸை இறக்க வேண்டும். அசிஸ்டெண்ட் ஸ்டோர் கீப்பர் வேலை. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை. 

லீவு, அதுவும் தெரிந்தவர் வீட்டுக் கல்யாணம், கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்கலாம் என்று வந்தால்... நல்ல வேளை… ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வரும் ‘ராகவன் இன்ஸ்டிங்க்ட்’ மாதிரி எனக்கும் மனதில் ஏதோ ஒன்று வீட்டில் இருப்பவர்களை கூட்டிட்டு வர வேண்டாம் என்று தோன்றியதால் விட்டுவிட்டு வந்தேன்.

அவர்கள் வந்திருந்தால்…யோசித்துக் கொண்டிருக்கும் போதே தூக்கம் கண்ணைச் சுழற்றியது. பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீடு வந்து சேரும் போது மணி பன்னிரெண்டு. அப்பா தாழ்வாரத்தில் படுத்திருந்தார். கதவைத் தட்டும்போது, “வந்துட்டியாப்பா...” என்ற படி கிரில் கேட்டைத் திறந்து விட்டார். உள்ளே வந்து லைட் போடும்போது சாந்தி கண்ணைத் துடைத்துக்கொண்டு வந்தாள்.

‘‘இந்தா…’’ ஸ்வீட் பொட்டலத்தை அவள் கையில் திணித்தேன். ‘‘மேடம் கொடுத்தாங்களா?’’ ‘‘ஆமா…’’ லுங்கிக்கு மாறினேன். என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘‘பால் சாப்டுறீங்களா?’’ ‘வேண்டாம்’ என்று தலையாட்டும்போது உறைத்தது. ‘‘அவங்க உன்னைய கேட்டாங்க சாந்தி... ஏன் உன்னை, குழந்தைகளை எல்லாம் கூட்டிட்டு வரலைன்னு... சாருக்கும், மேடத்துக்கும் செம கோபம்...’’  அவள் முகம் மலர்ந்தது.

‘‘ஸ்வீட் எடுத்து பேக் பண்ணி குழந்தைகளுக்கு எடுத்துட்டு போன்னு வற்புறுத்தினாங்க. தாம்பூலப் பை கூட ரெண்டு மூணு எடுத்துக் கொடுத்தாங்க. நான்தான் ஒண்ணு போதும்னு வந்துட்டேன். பேசாம உங்களை எல்லாம் கூட்டிட்டுப் போயிருக்கலாம். தனியா உட்கார்ந்து போரடிச்சது...’’ ‘‘பரவால்லைங்க… எல்லாரும் போனா பஸ் சார்ஜ் கூட ஆகும். ஏற்கனவே மொய் செலவு வேற...’’ வெள்ளந்தியாய்ச் சிரித்த அவளை மார்போடு அணைத்துக்கொண்டேன்.               

டாய்லெட்டில் சிக்கிய கை!
டெக்ஸாஸின் நியூ கனே பகுதியில் வசிக்கும் ஹெண்டர்சனுக்கு அன்று நாளே சரியில்லை. கார் சேற்றில் சிக்க,  தண்ணீர் பைப் உடைந்து லீக் ஆக, டாய்லெட்டும் அடைத்துக்கொண்டது. டாய்லெட் அடைப்பை நீக்க கை விட்டவரை பின் ஃபயர்சர்வீஸ் ஆட்கள்தான் வந்து மீட்க வேண்டியிருந்தது. காரணம்? கை மாட்டிக்கிச்சு அமைச்சரே!

இனவெறி பேனர்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலுள்ள மில்க் பார்லர் ஒன்றில் தொடர்ந்து நடக்கும் திருட்டுக்கு கருப்பின மக்கள்தான் பொறுப்பு என்ற முடிவில் கடை முதலாளி வைத்த கடுப்பு பேனர் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதில் காணப்பட்ட வாசகம் இதுதான்: ‘நாய்களும் கருப்பர்களும் உள்ளே வராதீர்கள்!’ இது இனவெறிச் செயல் என சமூக தளங்களில் விவாதங்கள் சூடு பறக்கின்றன.

நான்ஸ்டாப் டாக்டர்!
சீனாவின் அன்ஹியூவிலுள்ள டிங்யுவான் மருத்துவமனையில் பணிபுரிகிறார் டாக்டர் லீ ஹெங். இவர் ஒரு மக்கள் சூப்பர்ஸ்டார் என்றால் நம்புவீர்களா? 5 ஆபரேஷன்களை 28 மணி நேரத்தில் முடித்திருக்கிறார். அதுவும் கேப்பே விடாமல். இந்தியா உட்பட வளரும் நாடுகளில் 36 மணிநேரம் டூட்டி டாக்டர்களும் உண்டு என்பது கொசுறு செய்தி.

ரோலர்கோஸ்டரில் ஹேப்பி பர்த்டே!
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாக் ரினால்ட், யார்க்‌ஷையர் தீம் பார்க்கில் ரோலர் கோஸ்டரில் ஜாலி ரைடு போனது நியூஸ் அல்ல. தன் 105 வயதில் ரோலர் கோஸ்டரில் சென்றதோடு தன் பிறந்தநாளையும் அங்கேயே கொண்டாடி இருக்கிறார் பாருங்கள்... அதுதான் செய்தி. இதற்கு கிடைத்த பரிசு... கின்னஸ் ரிக்கார்ட்!

அந்தரத்தில் குவா குவா!
துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் புதிய பயணி கிடைத்தது சுவாரசிய கதை. 12 ஆயிரத்து 800 மீட்டர் உயரத்தில் விமானம் பறக்கும்போது நஃபி தியாபை என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடன் பயணித்த டாக்டர், பணிப்பெண்கள் உதவியோடு பிரசவம் பார்க்க... க்யூட் இளவரசி வானில் பிறந்தார்!