கவிதை வனம்
நனையும் பூமி
 ‘நான் எப்போதும் உன்னை காதலனாய் நேசித்ததில்லை...’ முதல் முத்தத்திற்கான ஒரு சிறிய இடைவெளியில் உடைக்கிறாய் உண்மையின் பெரும் எரிமலையை இனி இங்கு திரும்பவே திரும்பாத ஒரு தொடர்வண்டியில் ஏறி அமர்கிறேன். உன் பெரும் இரகசியங்களுக்குள் நுழையுமென் பூனைகள் தகவல்கள் ஒன்றுமில்லாமல் திரும்புகின்றன என் தொட்டிகளில் இட்டதும் மரித்துவிடும் ஆரஞ்சு மீன்களைப் பரிசளித்து சுவாரஸ்யமான ஆட்டங்களை விளையாடிப் பார்க்கிறாய் காய்களை சாமர்த்தியமாய் நகர்த்திவிட்டு எனக்கு ஆட்டங்கள் தெரியாதென பொய் சொல்லாதே... பூமி நனையத் துவங்குகிறது பார்.
- தியாகராஜன்
குட்டி டீச்சர்
வரவேற்பறையை வகுப்பறையாக்கி குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி பாடமெடுக்கிறாள் என் குட்டி டீச்சர். பிராய கால வகுப்பறையின் பின் பெஞ்சிலமர்ந்து பணிவாகத்தான் முதலில் பாடம் கேட்டுக்கொண்டிருந்தேன். இடையில் ஏனோ மடியிலள்ளி முத்திட்டு கொஞ்சித் தீர்த்துவிட்டேன் குட்டி டீச்சரை. ஆட்ட விதிகளை மீறியதற்காக இப்போது குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன் நான் குட்டி டீச்சரிடம்.
- கார்த்திக் திலகன்
|