SUN கண்டெடுத்த சிங்கர்ஸ்!



-மை.பாரதிராஜா

சன் சிங்கர்ஸ் மாபெரும் இறுதிச்சுற்றில் வெற்றிக்கோப்பையைத் தட்டிச்சென்ற செல்லக் குயில்களின் அணிவகுப்பு.

தேங்க்யூ சன் சிங்கர் winner ரிஹானா

‘‘என்ன சொல்றதுனு தெரியலை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ், பிரின்சிபல் எல்லாருமே அவ ஜெயிப்பான்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க...’’ நெகிழ்கிறார் ரிஹானாவின் அம்மா சப்னா. ‘‘லைவ்ல ஃபைனல் வந்ததால ரொம்ப டென்ஷன் ஆகிட்டா. பயப்படாம அவ பாடினா போதும்னு நினைச்சோம். எல்லாரோட அன்பாலயும் ஆதரவாலயும் டைட்டிலை வின் பண்ணியிருக்கா.

முதல் பரிசா கிடைச்ச ரூ.5 லட்சத்தை அப்படியே அவளோட எதிர்காலத்துக்குனு எடுத்து வைச்சிருக்கோம். அவ என்ன படிக்கணும்னு விரும்பறாளோ அதுக்கு நாங்க உறுதுணையா இருப்போம்...’’ என்கிறார் ரிஹானாவின் அப்பா, ரஃபீக். கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் ரிஹானா, படிப்பிலும் சுட்டி. ‘‘எனக்கு சப்போர்ட் பண்ணின எல்லாருக்கும் தேங்க்ஸ்...’’ புன்னகைக்கிறார் ரிஹானா.

எதிர்பார்க்காத சந்தோஷம்! 1st runner up லக்‌ஷணா

‘‘முருகரோட அருளும் அவ அப்பாவோட ஆசீர்வாதமும் லக்‌ஷணாவுக்கு பரிபூரணமா இருக்கு...’’ மகிழ்ச்சியுடன் சொல்கிறார் புஷ்பலதா. லக்‌ஷணாவின் அம்மா. ‘‘சொந்த ஊர் திருப்பூர் பக்கம் அம்மாபாளையம். இப்ப 8ம் வகுப்பு படிக்கறேன். ஒரேயொரு அக்காதான். பேரு ஸ்ரீநிதி. தங்களோட சொந்த மக மாதிரி சன் சிங்கர்ல பார்த்துகிட்டாங்க. ஃபைனல் அப்ப ராகவா லாரன்ஸ் அங்கிள், என் படிப்பு செலவை ஏத்துக்கறதா சொன்னது ப்ளசன்ட் சர்ப்ரைஸ்.

எப்பவும் அப்பா போட்டோவை கைல வைச்சிருப்பேன். ‘நம்ம வாழ்க்கைல இதெல்லாம் எதிர்பார்க்காத ஒண்ணு’னு அம்மா சொன்னாங்க. நாங்க இன்னும் வாடகை வீட்டுலதான் இருக்கோம். மூணு லட்சம், டிவி, மொபைல்னு கிடைச்ச பரிசுகளை விட எல்லாரோட அன்பும் கிடைச்சிருக்கே... அது பெரிய விஷயம்...’’ ஆத்மார்த்தமாக சொல்கிறார் லக்‌ஷணா.

மிஸ் யூ ஆல்! - 2nd runner up அதிதி

‘‘கிராண்ட் ஃபினாலே அன்னிக்கு ரொம்ப த்ரில்லிங்கா இருந்துச்சு. சுந்தர்.சி. அங்கிள் ரன்னர் அப்னு அறிவிச்சதும் எக்ஸைட் ஆகிட்டேன். லவ்வபிள் மொமென்ட்...’’ ஆனந்தத்தில் திளைக்கிறார் அதிதி. ‘‘சொந்த ஊர் கேரளா. இப்ப 7வது படிக்கறேன். அப்பா தினேஷ், அம்மா சுஷ்மிதா. ரெண்டு பேருமே என்னை என்கரேஜ் பண்ணுவாங்க. என் சிஸ்டர் அனன்யாதான் என்னோட முதல் விசிறி. சன் சிங்கர் வழியா நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க.

லக்‌ஷணாவும் நானும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அவ பாடறப்ப நான் கோரஸ் பாடுவேன். நான் பாடறப்ப லக்‌ஷணாவும் கூட வந்து பாடணும்னு விரும்புவா. ஜெயிச்சது சந்தோஷமா இருக்கு. ஆனா, சன் சிங்கர் குரூப்பை மிஸ் பண்றேன்னு நினைக்கிறப்ப கஷ்டமா இருக்கு...’’ சொல்லும்போதே அதிதியின் கண்கள் கலங்குகின்றன.