350 மாணவர்களுக்கு வாழ்வு தந்த அரசுப்பள்ளி HM!



-திலீபன் புகழ்

‘‘ஆதரவற்றோர் மீது அன்புகாட்டுவது, அவர்களுக்கு உதவி செய்வது என தற்காலிக உதவியை விட அவர்களுக்கான வாழ்க்கைப் பாதையை உருவாக்கித் தருவதுதான் உண்மையான அன்பு...’’ என்கிறார் ஜெயக்குமார்.

காலை 10 மணி. மாணவர்கள் சூழ் இடம். அனைவருமே அமைதியாகப் படித்துக்கொண்டு இருந்தனர். ஆசிரியர் ஜெயக்குமாரைச் சுற்றி 30க்கும் மேற்பட்ட மாணவர்கள். பயம், மரியாதையைத் தாண்டி ‘சார்’ என்ற வார்த்தையில் அத்தனை அன்பு. வளாகத்தில் குழந்தைகளைக் கொண்டே பூங்கா அமைத்திருக்கின்றனர். அங்கு தென்னை, வாழை மரங்களுடன்  மூலிகை மற்றும் பூச்செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

‘‘1990ம் வருசம் மதுரையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 15 வருஷத்துக்கு முன்பு ஆதரவற்ற நான்கு குழந்தைகளின் கல்விக்காக உதவி கேட்டு வந்தாங்க. அப்போ எனக்கு கிடைத்த சம்பளத்தைக் கொண்டு அவங்களுக்கு உதவி செய்தேன். அதுல ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டது. அந்தக் குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்ல, அன்பும், அரவணைப்பும் தேவைப்படுமே என்ற கேள்வியும் எனக்குள்ள எழுந்தது. நாமே குழந்தைகளை தத்தெடுப்போமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

அன்றிலிருந்து ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க ஆரம்பித்தேன். இப்போழுது போடிநாயக்கன்பட்டி அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கேன், மாணவ, மாணவிகள் தங்குவதற்காக எனக்கு சொந்தமான நிலத்தில் விடுதி கட்டித் தந்திருக்கேன். இப்ப 10 பெண் குழந்தைகள் உட்பட 45 பேர் உள்ளனர். படிக்க வைத்துவிட்டு, அப்படியே விட்டுவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

எனவே, மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்ததும், ஐடிஐயில் சேர்த்து அவர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறேன். உயர்கல்வியில் ஆர்வமுள்ள சில மாணவர்களைக் கல்லூரியிலும் சேர்த்துவிடுவேன். அந்த மாணவர்கள் படிக்க வந்த சூழலை புரிஞ்சிகிட்டு, சில கல்லூரி முதல்வர்களே அவர்களுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்கின்றனர். பெண்குழந்தைகளை 5ம் வகுப்பு வரை மட்டுமே நான் வளர்க்கிறேன். அதற்கு மேல் அரசு ஆதரவற்றோர் விடுதிகளில் சேர்த்து விடுவேன்.

என் சம்பளத்தில் இருந்து மாதம் ஒரு பகுதியை மாணவர்களுக்காக ஒதுக்கிடுவேன். யார்கிட்டயும் நிதி தாங்கனு  கேட்பதில்லை. நண்பர்கள் சிலர் அவர்களாவே உதவி செய்வாங்க. முக்கியமானது என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு. என் மனைவி கேத்தரின் லீமா உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். என் தாயார் சரஸ்வதி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்.

இருவரும் மாணவர்களைப் பராமரிப்பதிலும், மாலை நேரத்தில் படிப்பில் ஏற்படும் சந்தேகங்களைச் சரி செய்வதும், எழுத்து, ஓவியம், ஆங்கில வாசிப்பு என இங்கு உள்ள மாணவர்களைக் கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்கறாங்க...’’ என்ற ஆசிரியர் ஜெயக்குமாரின் சேவையைப் பாராட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் விருது தந்துள்ளது. 2010-ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதும் வாங்கியுள்ளார்.

இப்போது அரசு சமச்சீர் கல்வி நூல் கழக குழுவிலும் உள்ளார். விருதுடன் வழங்கப்பட்ட சன்மானத் தொகையையும் இந்த மாணவர்களுக்காகவே செலவழித்திருக்கிறார். ‘‘இதுவரை 350 பேரை படிக்க வைத்துள்ளோம். அனைவரையும் எங்களைப் போலவேதான் உருவாக்கியுள்ளோம். சீக்கிரத்திலேயே இந்த எண்ணிக்கை 3500 ஆக மாறும்!’’ என்று சொல்லும் போதே ஜெயக்குமாரின் முகத்தில் நம்பிக்கை துளிர்விடுகிறது.                

படங்கள்: பாலு