தமிழ் எழுத்தாளரின் உலக சாதனை!



-கே.என். சிவராமன்

துரியோதனன் சபையில் வைத்து பாஞ்சாலியை துகில் உரிகிறான் துச்சாதனன். பாண்டவர்கள் கைகட்டி நிற்கிறார்கள். துரியோதனன் சிரிக்கிறான். அவள் கைதூக்கி ‘கிருஷ்ணா’ என்று கத்துகிறாள். கிருஷ்ணன் அருளிய புடவை முடிவில்லாமல் வந்து கொண்டே இருக்கிறது. இது நாமெல்லாம் அறிந்த புராணக்கதை.

கதை கேட்கும் நம் சின்னக்குட்டிப் பெண், ‘பாஞ்சாலிக்கு புடவையை வானிலிருந்து கொடுத்த கிருஷ்ணன் அந்தச் சம்பவம் நடக்காமலேயே தடுத்திருக்கலாமே...’ என்று கேட்டால் என்ன சொல்வோம்? போலவே, ‘கிருஷ்ணன் கடவுளாக இருந்தால் பாண்டவர்களுக்கு ஐந்து வீடுகளாவது கொடுத்திருக்கலாமே... ஏன் போய் கௌரவர்களிடம் கெஞ்சினான்? ஏன் அவனால் பாரதப் போரை தடுக்க முடியவில்லை?’ ‘அதெல்லாம் கிருஷ்ணனின் லீலை’ என்று பாட்டிகள் சொல்வார்கள்.

அதை இன்றைய குழந்தைகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மகாபாரதத்தின் மூலத்தில் கிருஷ்ணன் கடவுளாக வரவில்லை. அவர் யாதவர்களின் அரசனாகவும் ராஜதந்திரியாகவும்தான் வருகிறார். பாகவதத்தில்தான் கிருஷ்ணர் கடவுளானார். அதன்பின் கிருஷ்ணனை கடவுளாக்கிய கதைகள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மகாபாரதத்தின் மூலம் பூனா பண்டார்க்கர் ஆய்வு நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு இன்று மகாபாரதத்தை திரும்ப எழுதினால்தான் இளைய தலைமுறையினர் அதை நெருங்கி வரமுடியும். மகாபாரதம் வெறும் நல்லுபதேசங்கள் அல்ல. இந்தியாவின் பண்பாடு முழுக்கவே அதில் உள்ளது. மனித மனங்களைப்பற்றிய நுட்பமான பல கருத்துக்கள் அதில் உள்ளன. எனவேதான் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிவரும் ‘வெண்முரசு’ என்னும் தொடர் நாவல் முக்கியம் பெறுகிறது. மொத்த மகாபாரதத்தையும் அத்தனை துணைக்கதைகளுடன் நவீன இலக்கியமாக திருப்பி எழுதுகிறார்.

அவருடைய இணையதளத்தில் அது தினம் ஓர் அத்தியாயம் வீதம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவரை 13 நாவல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் 12, புத்தகங்களாக அச்சாகியுள்ளன. முழுமையாக மகாபாரதத்தை அவர் எழுதி முடிக்கும்போது 20 நாவல்களாக அவை வந்திருக்கும். 20 ஆயிரம் பக்கங்களைத் தொட்டிருக்கும். உலகிலேயே நீளமான நாவல் இதுதான். தினம் ஐம்பதாயிரம் பேர் இதை வாசிக்கிறார்கள். இச்சாதனை தமிழில் நடக்கிறது.

ஜெயமோகன் வெறுமே கதைகளைத் திரும்பச் சொல்லாமல் அவற்றை கண்முன் நிகழ்வதுபோல நடத்திக் காட்டுகிறார். கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை நுட்பமாக விவரிக்கிறார். மகாபாரதத்தில் பாண்டு, அம்பை போன்ற பல கதாபாத்திரங்கள் மிகச்சிறியவை. அவற்றை எல்லாம் உணர்ச்சிபூர்வமாக விரிவாக்குகிறார். மகாபாரதக் காலகட்டத்தின் வாழ்க்கைச் சூழல், அன்றைய அரசியல் சூழல், அன்றிருந்த சிந்தனை மோதல்கள் எல்லாமே விரிவாக இந்நாவல்களில் பேசப்படுகின்றன.

என்றாலும் கதையையோ கதாபாத்திரங்களையோ ஜெயமோகன் மாற்றி அமைக்கவில்லை. அவற்றை மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நம்பகமான கதையாக மாற்றுகிறார். காந்தாரி ஒரு பெரிய சதைத்துண்டை பெற்றாள். அதை வியாசர் நூறு துண்டுகளாக்கி நூறு குடத்தில் போட்டு வைத்தார். அவை வளர்ந்து கௌரவர்களாக ஆனார்கள். இதுதானே நாம் அறிந்த கதை? ஆனால், மகாபாரதத்திலேயே உண்மையான கதையும் உள்ளது.

திருதராஷ்டிரர் காந்தாரியை திருமணம் செய்து கொண்டபோது காந்தாரியின் 10 சகோதரிகளையும் சேர்த்தே அவருக்கு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் பெற்ற மகன்கள்தான் கௌரவர். ஜெயமோகன் அதைத்தான் தன் நாவலில் எடுத்துக் கொண்டிருக்கிறார் சரி, பாஞ்சாலி துகிலுரியப்படும் காட்சியை எப்படிக் காட்டியிருக்கிறார்? துரியோதனனின் மகள் பெயர் கிருஷ்ணை.

பாஞ்சாலியின் இன்னொரு பெயர் கிருஷ்ணை. அவள் பாஞ்சாலிமேல் அன்பு கொண்டவள். கிருஷ்ணையும் கௌரவர்களின் மனைவிகளும் அந்த சபையில் உப்பரிகைகளில் இருக்கிறார்கள். துச்சாதனன் துகில் உரியும்போது அவர்கள் கொதித்து எழுந்து தங்கள் மேலாடைகளை எடுத்து வீசுகிறார்கள். அவள்மேல் அவை மழைபோல விழுகின்றன. இதுதான் ‘வெண்முரசு’ காட்டும் காட்சி. இது மகாபாரதத்திற்கும் பொருத்தமானதுதான். இந்திய அளவில் ‘வெண்முரசு’ முக்கிய இடத்தைப் பிடிப்பது இதனால்தான்.