எழுந்து நில்லுங்க...



-ப்ரியா

கம்பீரமாக அறிவிக்கிறார் Multiple Sclerosis நோயினால் பாதிக்கப்பட்டவர்!

ஓடி திரிந்த கால்களும், மகனைத் தழுவிய கைகளும், கணவனுக்கு காதலுடன் பணிவிடை செய்த கரங்களும் திடீரென்று செயலிழந்து போனால்..? நினைக்கவே அதிர்ச்சியாக இருக்கும் இந்தக் ‘கற்பனை’ - 34 வயதாகும் ஸ்வர்ணலதாவின் வாழ்வில் நிஜமாகி இருக்கிறது. என்றாலும் விழுந்தவர் எழுந்து நிற்கிறாரே... தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ஸ்வர்கா ஃபவுண்டேஷனை’ ஆரம்பித்து உதவி வருகிறாரே... அந்த இடத்தில் சுடராக ஜொலிக்கிறார் ஸ்வர்ணலதா.

‘‘பெங்களூர்வாசி. நானும் என் கணவரும் அங்கதான் வேலை பார்த்தோம். தனியார் கார் நிறுவனத்துல நான் எக்ஸிகியூட்டிவ். எப்பவும் பரபரப்பா இருப்பேன். வேலை விஷயமா வெளிநாடுகளுக்கு பறந்துகிட்டே இருப்பேன். அங்குள்ள அரசியல்வாதிகள், பிசினஸ்மேன்... எல்லாரையும் சந்திச்சு பேசறது என் வேலையோட ஓர் அங்கம்.

இப்படி நான் அலைஞ்சு திரிஞ்சது கடவுளுக்கே பிடிக்கலைனு நினைக்கறேன். அதான் இப்படி ஆகிடுச்சு...’’ இயல்பாகப் புன்னகைக்கிறார் ஸ்வர்ணலதா. கண்களில் மட்டும் வலி மின்னுகிறது. ‘‘2009ம் வருஷம் நல்லபடியா பிறந்தது. ஆனா, அந்த ஆண்டுதான் என் தலைல இடி இறங்கப் போகுதுனு அப்ப எனக்குத் தெரியலை. காரணமே இல்லாம திடீர்னு ஒருநாள் என் கைகள் வலுவிழந்தது.

சாதாரணமான சின்னப் பாத்திரத்தைக் கூட என்னால தூக்க முடியலை. உடல் சோர்வால இப்படி இருக்கு போலனு நினைச்சேன். அப்புறம் சரியான மாதிரி ஒரு ஃபீல். எப்போதும் போல இருந்தேன். சட்டுனு ஒரு காய்ச்சல். உடம்பு அனலா கொதிச்சது. அப்படியொரு ஃபீவரை என் வாழ்நாள்ல நான் பார்த்ததில்லை. மாத்திரையை போட்டுட்டு படுத்துட்டேன். காய்ச்சல் குறையலை. உடம்புலயும் தெம்பில்லை. உடம்பே உரியறா மாதிரி ஓர் உணர்வு.

கணவருக்கு போன் செய்யலாம்னு பார்த்தா கால், கைகளை அசைக்க முடியலை. எழுந்து நிற்க முயற்சி செஞ்சேன். கீழதான் விழுந்தேன். எனக்குள்ள என்ன நடக்குதுனே புரியலை... தட்டுத் தடுமாறி என் கணவர் குருபிரசாத்தை தொடர்பு கொண்டேன். பதறிப் போய் வந்தவர் உடனடியா ஆஸ்பிடல்ல சேர்த்தாரு. முதல்ல என் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்தாங்க. குறையவேயில்ல. நாலு நாட்கள்ல கால்களே மரத்துப் போன மாதிரி ஃபீலிங். அசைக்க முடியலை.

டாக்டர்களுக்கும் எதனால இப்படினு தெரியலை. பல டெஸ்ட் எடுத்தாங்க. கடைசியா மல்டிப்பிள் ஸ்க்லெரோசிஸ் (Multiple Sclerosis) பிரச்னை எனக்கு வந்திருக்குனு கண்டுபிடிச்சாங்க...’’ தனது கறுப்பு தினங்களை அசைபோட்ட ஸ்வர்ணலதா, இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய் இது என்கிறார். ‘‘மூளை, முதுகுத்தண்டு-இந்த இரண்டையும் சுத்தி இருக்கிற மையிலின்ல (myelin) ஏற்படுகிற நோய் இது.

குறிப்பா இளவயது பெண்களைத்தான் இது தாக்குது. எதனால இந்த நோய் ஏற்படுதுனு இன்னும் திட்டவட்டமா கண்டுபிடிக்கலை. தொற்று ேநாய், நரம்பு மண்டலத்துல பாதிப்புனு பல காரணங்களை டாக்டர்ஸ் அடுக்குறாங்க. மூளைக்கும் முதுக்குத் தண்டுக்கும் இருக்கிற நரம்புத் தொடர்பை முற்றிலுமா பாதிக்கும், துண்டிக்கும். கை, கால்களை அசைக்கணும், உயர்த்தணும்னு தோணும். ஆனா, முடியாது. ஏன்னா, மூளைக்கு செய்தி போகாது.

இதுதான் எண்ட் ரிசல்ட். எனக்கு ஏற்பட்டதும் இதேதான். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவ முதல்ல வாக்கிங் ஸ்டிக் வைச்சு நடந்தேன். ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு அதுவும் முடியல. சக்கர நாற்காலியே கதினு வாழ்க்கை மாறிப் போச்சு...’’ ‘ஆமா... கிழக்குலதான் சூரியன் உதிக்குது...’ என்பதுபோல் சாதாரணமாக இப்போது இதை விவரிக்கிறார் ஸ்வர்ணலதா. ஆனால், தனக்கு ஏற்பட்டதை ஏற்றுக் கொள்ளவே ரொம்பவும் சிரமப்பட்டாராம்.

‘‘வாழ்க்கையே இருண்டு போன மாதிரி இருந்தது. இனிமே நடக்கவே முடியாது. என் வேலைகளை நானே செய்துக்க முடியாது... நம்ப முடியலை. ரொம்ப நாள் ஆஸ்பிடல்ல இருக்க வேண்டி வந்ததால வேலையை ராஜினாமா செய்ய வேண்டியதாப் போச்சு. சொந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வதுனு தெரியாம தத்தளிச்சேன். இந்த பாதிப்பு எனக்கு ஏற்பட்டபோது என் பையனுக்கு வயசு இரண்டுதான். அவனைத் தூக்கி என்னால கொஞ்சக் கூட முடியலை.

‘எனக்கு ஏன் இப்படி ஆச்சு... என்ன பாவம் செஞ்சேன்’னு எனக்குள்ளயே கேட்டுக் கேட்டு குமுறினேன். பதில் மட்டும் கிடைக்கலை. ஆனா, இந்த துயரமான காலத்துலதான் காதலோட மகத்துவத்தையே நான் உணர்ந்தேன். என்னையும் என் குழந்தையையும் அப்படி உள்ளங்கைல வைச்சு என் கணவர் தாங்க ஆரம்பிச்சார். வீட்டை கவனிச்சுக்கிட்டதும் அவர்தான். எனக்கு மன தைரியத்தை கொஞ்சம் கொஞ்சமா ஊட்டினதும் அவரேதான்.

மெல்ல மெல்ல தைரியம் அடைய ஆரம்பிச்சேன். அதுக்குக் காரணம் என் மகள். ஆமா, 2011ல எனக்கு பொண்ணு பிறந்தா...’’ சட்டென்று ஸ்வர்ணலதாவின் முகத்தில் நாண ரேகை படர்கிறது. ‘‘இந்த நிலைலயும் என்னால குழந்தையை பெத்துக்க முடியுதுனா... பல வேலைகளை செய்ய முடியும்னுதானே அர்த்தம்? மிகப்பெரிய தன்னம்பிக்கையை இந்தக் கேள்வி விதைச்சது. வேலைக்கு போறது மட்டுமே வாழ்க்கை இல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் செய்யலாம். செய்ய முடியும்.

செய்துட்டு வரேன்...’’ என்று சொல்லும் ஸ்வர்ணலதா தன்னைப் போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பிறகே உதவ ஆரம்பித்திருக்கிறார். ‘‘பெங்களூரிலிருந்து கோவைக்கு மாற்றலாகி வந்தோம். அழகான இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. மகனுக்கு தேவையானதை செய்ய முடியலை. ஆனா, அவனுக்கு உறுதுணையா இருக்க முடிஞ்சது. குடியிருப்பு வளாகத்துல இருக்கிற நீச்சல் குளத்துல அவன் பயிற்சிக்கு போறப்ப கூடவே போவேன். அப்பதான் பொறி தட்டுச்சு.

இங்க ஏன் சைக்ளோதான் (cyclothon) போட்டி நடத்தக் கூடாது? நடத்தினேன். வெற்றி கிடைச்சது. அப்புறம் பொம்மலாட்டம் பக்கம் கவனம் செலுத்தினேன். இதன் வழியா குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் சில விஷயங்களை புரிய வைக்க முடிஞ்சது. இதையெல்லாம் அமைப்பா செஞ்சா இன்னும் பவர்ஃபுல்லா இருக்கும்னு 2014ல ‘ஸ்வர்கா’ அமைப்பை (Swarga Foundation) தொடங்கினேன்.

என்னை மாதிரி நரம்பு சம்பந்தமான பிரச்னையால பலர் அவதிப்படறாங்க. அவங்களோட வலி என்ன... பிரச்னை என்னனு கூட இருக்கிறவங்களுக்கு புரியறதில்லை. ஏன், என் பையனுக்கே கூட தெரியலை. நான் பாதிக்கப்பட்டப்ப அவனுக்கு வயசு 7. தன் அம்மா பத்தி மத்தவங்க கிட்ட பேசவே மறுத்தான். ‘என் ஃப்ரெண்ட்ஸோட அம்மா எல்லாம் தங்க பசங்களுக்கு வேண்டியதை செய்யறாங்க. உன்னால அது முடியலை. அதான் உன்னப்பத்தி சொல்ல கூச்சமா இருக்கு’னு அவன் சொன்னது இப்பவும் நினைவுல இருக்கு.

அதனாலதான் பாதிக்கப்பட்டவங்களோட யார் யாரெல்லாம் இருக்காங்களோ அவங்க எல்லாருக்கும் இந்த நோயோட வலியை புரிய வைக்கறேன். இன்னிக்கி நான் எந்த மீட்டிங்ல பேசினாலும்... உரை முடிஞ்சதும் எழுந்து நின்னு கை தட்டறாங்க. இதை பெருமையா என் பையன் பாக்கறான். இப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தறதோட மருத்துவ ரீதியான உதவிகளையும் எங்க அமைப்பு வழியா செய்யறோம்...’’ என்று சொல்லும் ஸ்வர்ணலதா, ஆண்டுக் குறிப்பேட்டை அறிமுகம் செய்துள்ளார்.

‘‘நரம்பியல் பிரச்னையால பாதிக்கப்பட்ட பலர் ஜெயிச்சிருக்காங்க. இதை அடிப்படையா வைச்சுதான் ஆண்டுக் குறிப்பேட்டை தயார் செய்திருக்கோம். 5 ஆயிரம் பிரிண்ட் செஞ்சோம். அதே மாதிரி வயதானவங்க மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதியா பயணம் செய்யறதுக்கான வாகனத்தை வடிவமைச்சிருக்கேன். ‘சாரதி’னு பேரு.

இதுக்குள்ள சக்கர நாற்காலியை நேரடியா வண்டில ஏத்தலாம். வண்டிக்குள்ள படுக்கையறை, அமர்வதற்கு மூணு சேர், கழிப்பறை வசதி... எல்லாமே உண்டு. குறைந்த செலவுல அமைப்பு வழியா வாடகைக்கு விடறோம். மனசுக்கு பிடிச்ச இடங்களுக்கு மனசுக்கு விருப்பமானவங்களோட மாற்றுத் திறனாளிகளும் வயதானவர்களும் போய் வரலாம்! திரும்பவும் சொல்றேன். கால்களால் நடப்பது மட்டுமே வாழ்க்கை இல்ல...’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஸ்வர்ணலதா.