Speed Script
-மை.பாரதிராஜா
தனது மேக்கிங் ஸ்டைலை விவரிக்கிறார் இயக்குநர் ஹரி
‘‘ஏதோ ஓர் இடத்துல ஸ்பீடா எடுத்துட்டோம். அது ஆடியன்ஸுக்கு பிடிச்சுப் போச்சு. ஷூட்டிங் போறப்ப எல்லாம், ‘உங்க படம் ஸ்பீடா இருந்துச்சு...’னு பாராட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இது கரெக்ட்டா..? இதுக்கு மேல ஸ்பீடா போனால் சரிப்பட்டு வருமா..? யோசிச்சிருக்கேன். ஆனா, ஆடியன்ஸ் ஸ்பீடை ரசிக்க ஆரம்பிச்ச பிறகு இன்னும் வேகத்தை கூட்டணும்னு ரெடியாகிட்டேன்...’’
உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் ஹரி. ‘சி3’ எனப்படும் ‘சிங்கம் 3’ படத்தின் பரபர மேக்கிங்தான் இன்றைய டாக் ஆஃப் த இண்டஸ்ட்ரி. தமிழில் மட்டுமல்ல... இந்திய அளவிலும் இப்படியொரு மேக்கிங் சாத்தியமா என ரசிகர்கள் மிரண்டு வாயைப் பிளக்கிறார்கள். ‘‘கமர்ஷியல் படம்னு இஷ்டத்துக்கு எடுக்க முடியாது. கூடாது. சென்ஸிபிளா, லாஜிக்கோட சொல்லணும்.
ஆக்சுவலா ஸ்பீடுனா என்ன? எடிட்டிங் ஃபாஸ்ட்டா இருக்கறது. இதுக்கு அதிக ஃபுட்டேஜ் கொடுக்கணும். அதையும் கன்னாபின்னானு தரக் கூடாது. கதைக்கும் காட்சிக்கும் தேவையான அளவுக்கு தரணும். அப்படித்தான் நான் ஷூட் பண்றேன். எடுத்ததை எடிட்டர் கிட்ட கொடுக்கறேன். வி.டி.விஜயன் சார் ரூம்ல ராத்திரியும் பகலுமா டேரா போடறதுதான் என் வேலை. ஒரு மணி நேரம் கேப் கிடைச்சா ஓரமா பெஞ்சுல தூங்குவேன். திரும்ப எழுந்து வேலை.
‘ஆடியன்ஸை யோசிக்க விடாம படத்தை கொண்டு போகணும். அவங்க யோசிக்க ஆரம்பிச்சா குறையைக் கண்டுபிடிப்பாங்க’னு விஜயன் சார் அடிக்கடி சொல்லுவார். அது நூத்துக்கு நூறு நிஜம். ‘நாலு சீன் நச்சுனு இருந்தா... மீதியை பேலன்ஸ் செஞ்சுடலாம்’பார். உண்மையை சொல்லணும்னா நிறைய ஷாட்ஸ் எடுக்க நான் கத்துகிட்டதே அவர்கிட்டதான்.
ஹீரோவும் வில்லனும் மீட் பண்றதுதான் சீன்னு வைச்சுப்போம். அடிப்படைல இதுல சுவாரஸ்யம் இல்ல. ஆனா, இந்த மீட்டிங் வரை சின்னச் சின்ன டிராவல், டுவிஸ்டுனு வைச்சா... பரபரப்பாகிடும். இன்வெஸ்டிகேஷன் எடுக்கிறப்ப ஆடியன்ஸ் கன்வின்ஸ் ஆகறா மாதிரி ஷூட் பண்ணணும். இப்படி வேகம்... வேகம்னு யோசிச்சாலும்... ஷூட் செய்தாலும்... எடிட் பண்ணினாலும்... ஆடியன்ஸுக்கு புரியாமப் போயிடக் கூடாது என்பதில் கவனமா இருப்பேன்...’’ என்று சொல்லும் ஹரி, முன்பை விட ரசிகர்கள் இப்போது புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்கிறார்.
‘‘இன்னிக்கி செல்போன்ல நெட் வந்தாச்சு. எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. யாரையும் ஏமாத்த முடியாது. எல்லாத்தையும் விட முக்கியம்... ப்ளானிங். டிஸ்கஷன் முதலே அலசி அலசி இதுதான்... இப்படித்தான்னு சீன் பிடிப்போம். டிஸ்கஷன் முடிஞ்சதும் லொகேஷன் தேடுவோம். ஓகே ஆகற இடத்துல நாலஞ்சு நாள் தங்குவேன். சந்து பொந்து விடாம நடந்தே போவேன்.
மக்களோட பேசுவேன். எப்படி வீட்டுக்குள்ளயே புழங்கறப்ப அந்த இடம் நமக்குள்ள ஒட்டிக்குமோ அப்படி லொகேஷனும் மனசுல பதிஞ்சுடும். ஆர்டிஸ்ட் வந்தபிறகு ஏழெட்டு கேமராக்களை வைச்சுகிட்டு ஸ்பாட்ல யோசிக்கிற வழக்கமே என்கிட்ட கிடையாது. எப்ப லொகேஷன் எனக்குள்ள ஊடுருவிச்சோ அப்பவே சீனும் ஷாட்ஸும் மடமடனு வந்துடும்.
எப்பவும் மனசுக்குள்ள ஸ்பேரா நாலஞ்சு லொகேஷன்ஸ் வைச்சிருப்பேன். ஒண்ணு சொதப்பினாலும் அடுத்ததுக்கு உடனடியா போயிடுவேன்...’’ என்ற ஹரி, ஷூட்டிங் ஸ்பாட் என்பதே போர்க்களம்தான்... War Fieldதான் என்கிறார். ‘‘ரயில் வரப்போகுதுனா உடனே அதை எடுத்தாகணும். அந்த சீன் கோப்ரால வரலைன்னா உடனே 5Dல ட்ரை பண்ணுனு சொல்லிடுவேன். அதுவுமே சரிவரலைன்னா... மொபைல் கேமரால ஷூட் பண்ணி வைங்கப்பான்னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துடுவேன்.
‘ஷேக் இல்லாம எடுத்தா மொபைல் கேமரால ஷூட் செஞ்சதை இணைக்கலாம்’னு ப்ரியன் சார் பச்சைக்கொடி காட்டுவார். இதுதான் ஸ்பீடு. இப்படித்தான் எடுப்பேன்னு அங்கயே முக்கிக்கிட்டு சேர்ல உட்காருவது பிடிக்காது. சொல்லப்போனா ஸ்பாட்ல சேர் போட்டாலே எரிஞ்சு விழுவேன். தூக்கி வீசிடுவேன். ஸ்டூல்தான் பயன்படுத்துவேன். ஹீரோஸ் கூட பிரேக் எடுக்கிறப்ப ஸ்டூல்லதான் உட்காருவாங்க.
சூர்யா சார் அப்படி உட்கார்ந்து பழகிட்டார்! டைமுக்குள்ள நிறைய ஷாட்ஸ் எடுக்கணும். அதுதான் லட்சியம். இல்லைனா சண்டை போடுவேன். ஒவ்வொரு சீனும் நல்லா வரணும்னு மெனக்கெட்டு போடற ஃபைட் அது! ஈவினிங் பேக்கப் சொன்னதுமே ரிலாக்ஸாகிடுவேன். காலைல பரபரப்பா இருந்தாதான் ஈவினிங் ரிலாக்ஸா இருக்க முடியும். இல்லைனா மாலைல பிபி எகிறும்.
இன்னிக்கி எடுத்த சீனை மறுநாளும் கன்டினியூ செய்ய பிடிக்கவே பிடிக்காது. டிஸ்கஷன் லெவல்லயே டயலாக்கையும் ஓகே பண்ணிடுவேன். ஸோ, ஸ்பாட்டுல டைரக்ஷன் என்கிற மேஸ்திரி வேலைதான்! அதுக்காக ஸ்பாட்டுல டயலாக்கை மாத்த மாட்டேன்னு இல்லை. அதுக்கான ஸ்பேஸை அதுவா கேட்கும்போது கொடுப்பேனே தவிர ஸ்பாட்டுல போய் பார்த்துக்கலாம்னு அலட்சியமா இருக்க மாட்டேன்.
சீன்ஸ் யோசிக்கிறப்ப, டிஸ்கஸ் பண்றப்ப, ரியல் லைஃப் இன்ஸிடென்ஸோட பொருத்தவே முயற்சி செய்வேன். எப்படி ஹீரோவுக்கும் இயக்குநருக்கும் இடையிலான உறவு, புரிதல் முக்கியமோ அப்படி ஒளிப்பதிவாளருக்கும் டைரக்டருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரியும் முக்கியம். ப்ரியன் சாரோட இதுவரை 14 படங்கள் ஒர்க் பண்ணியிருக்கேன். ரெண்டு பேரோட அலைவரிசையும் ஒண்ணா இருக்கறதாலதான் இது சாத்தியமாச்சு.
ஒவ்வொரு சீனுக்கும் கோப்ரா, 5D, சோனின்னு மினிமம் அஞ்சு கேமராவை கன்ஃபார்ம் பண்ணுவோம். சிலசமயம் இதுக்கு மேலயும் தேவைப்படும். எத்தனை கேமரா இருந்தாலும் குவாலிட்டி முக்கியம். இல்லைனா நம்ம உழைப்பு வீணாகிடும். என்னுடைய வேகம் ப்ரியன் சார்கிட்ட இருக்கு. என்னை திருப்திப்படுத்த அவராலதான் முடியும். ஃபிலிம் இருந்த காலத்துல பார்த்துப் பார்த்து எடுத்தோம். இப்ப அந்த பிரச்னை இல்ல. டிஜிட்டல் வந்தாச்சு. அதனால ஃபுட்டேஜ் பத்தி யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்படலை.
அதேசமயம் தேவையில்லாம ஒரு ஷாட் கூட எடுக்க மாட்டேன்...’’ என்று சொல்லும் ஹரி, சூர்யா குறித்து பேசும்போதெல்லாம் நெகிழ்கிறார். ‘‘‘சி3’யோட சேர்த்து நாங்க அஞ்சு படம் ஒண்ணா ஒர்க் பண்ணியிருக்கோம். உண்மைலயே இது பெரிய விஷயம். தப்போ சரியோ ரெண்டு பேருமே அதை வெளிப்படையா பேசிடுவோம். நான் நினைக்கறது அவருக்குப் பிடிக்கும். அவர் யோசிக்கறதை நான் செஞ்சு முடிப்பேன். ஷாட் முடிஞ்சதும் என் முகத்தைப் பார்ப்பார்.
ஷாட் ஓகேவா இல்லையானு என் முகத்தை வைச்சே கணிச்சுடுவார். என் படத்துல எப்பவும் ஏகப்பட்ட ஆர்டிஸ்ட்ஸ் இருப்பாங்க; நடிப்பாங்க. எல்லாரையும் சமாளிச்சு வேலை வாங்குவேன். நேரத்துக்கு எல்லாரும் சாப்பிட்டாங்களானும் பார்ப்பேன். ஜூனியர் ஆர்டிஸ்ட் நல்லா நடிச்சாலும் உடனே யூனிட் ஆட்களை கைதட்ட சொல்வேன். அதே மாதிரி ஸ்பாட்டுல ஒருத்தரை திட்டினா பேக்கப் ஆகறப்ப கூப்பிட்டு சாரி கேட்பேன்.
ஒண்ணு தெரியுமா... லைட்மேன் முதல் எல்லோருமே ஒரு யூனிட்டா வேலை பார்க்கறோம். அதனாலயே எல்லார் பத்தியும் எல்லாருக்கும் தெரியும். ஸ்கிரிப்ட் லெவல்லயே பட்ஜெட் தீர்மானமாகிடும். அதைவிட ஒரு பைசாகூட கூடாம பார்த்துப்பேன். அதே மாதிரி இத்தனை நாட்கள்ல ஷூட்டிங் முடிப்பேன்னு சொன்னா... அதுக்குள்ள முடிச்சுடுவேன். இது சாத்தியமானதுக்கு காரணம் என் யூனிட்தான். ஒரு ஷாட் முடிஞ்சதும், ‘அடுத்து அங்கதான்’னு நான் சொல்லாமயே லைட்மேன்ஸ் ஒயரை சுத்த ஆரம்பிச்சிடுவாங்க. நானும் மைக்ல ‘இன்னும் ரெண்டு ஷாட்ஸ்தான் இருக்கு. தேவையில்லாததை ஏத்த ஆரம்பிச்சிடுங்க’னு வார்னிங் கொடுத்திடுவேன். ‘Shift’னு நான் சொன்னதும் வண்டிங்க ஸ்டார்ட் ஆகணும். இல்லைனா டமால் டுமீல்தான்! அடுத்த ஷாட் தனக்கு இல்லைனு தெரிஞ்சதும் அந்த ஆர்டிஸ்ட் என் கண் முன்னாடி நிற்கக் கூடாது.
வெட்டிப் பேச்சு பேசறது எனக்குப் பிடிக்காது...’’ என்ற ஹரி, மூச்சுக்கு முந்நூறு முறை கதைதான் முக்கியம் என்கிறார். ‘‘கதையும் ஸ்கிரிப்டும் பக்காவா ரெடியாகிட்டா மத்த எதுக்கும் நாம பயப்படத் தேவையில்ல. கதையை நம்பணும். எல்லாமே புரொட்யூஸர்கிட்ட சொல்லப்பட்டதா இருக்கணும். எக்ஸ்ட்ரா செலவு இருந்தா கேட்டுட்டு பண்ணனும். சினிமா யாரையும் நம்பி இல்ல. நாமதான் அதை நம்பி இருக்கோம். நம்ம இழுப்புக்கு சினிமா வராது. அதனோட இழுப்புக்குதான் நாம ஓடணும். நாம நின்னுட்டா அது நம்மை விட்டு விலகி தூரமா போயிடும். இதைத்தான் நான் எல்லாருக்கும் சொல்ல விரும்பறேன்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் இயக்குநர் ஹரி.
|