விருச்சிகம் லக்னம் - செவ்வாய், சனி சேர்க்கை
கிரகங்கள் தரும் யோகங்கள் - 78
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த சேர்க்கைதான் மிகவும் கடினமானதும், சவால்மிக்கதும், ஆபத்தானதுமாகும். ஏனெனில், இவை இரண்டும் சேருவதென்பது முரண்பாடுகளின் முழுத் தொகுப்பாகும். நந்தி வாக்கியம், பிருஹத் ஜாதகம், உத்தரகாலாமிர்தம் போன்ற ஜோதிட நூல்கள் இவ்விரு கிரகங்கள் எங்கு சேர்ந்திருப்பினும் ஆபத்தானது என்றுரைக்கின்றன. மண வாழ்க்கையில் சந்தேக சூறாவளியைக் கிளப்பி, பிடிவாதத்தை, ஈகோ பிரச்னையை உண்டாக்கி கணவன் - மனைவியை காவல் நிலையத்தை நோக்கி திருப்பும்.
மனதில் மட்டுமல்லாமல் உடம்பிலும் இந்த இருகிரக சேர்க்கையும் பாதிப்பை உண்டுபண்ணும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாய் சனி சேர்ந்திருந்தாலும் சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலிலிருந்து பிரச்னை தொடங்கும். மாதவிடாய் கோளாறு, தைராய்டு பிரச்னை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, கன்னப் பகுதியில் கருநீலத் திட்டுகள் உருவாகும்.
ஆனால், சகல விஷயங்களையும் ஆழமாக யோசிக்க வைப்பவரே சனி. இந்த இரு கிரக அமைப்புகளும் ஒன்று சேரும்போது சுரங்கம் போன்ற இடங்களிலும், கிரானைட், கல்குவாரிகளிலும் வேலை செய்வார்கள். மேலே சொன்னவை யாவும் விருச்சிக லக்னத்தின் பொதுவான பலன்களாகும். இப்போது லக்னாதிபதியான செவ்வாயும், சனியும் ஒவ்வொரு ராசியிலும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா.
விருச்சிக லக்னமான ஒன்றாம் இடத்தில் செவ்வாயும் சனியும் அமர்ந்திருந்தால் எந்த விஷயத்திலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.. எல்லா வேலையையும் இழுத்தடித்துத்தான் செய்வார்கள். எதற்குமே பொறுப்பேற்காமல் வாழ்வது எப்படி என்று கேட்டால் அதற்கு புத்தகமே எழுதுவார்கள்.
மேலும், மனச்சிதைவு, முடிவெடுப்பதில் தடுமாற்றம், ஒரே விஷயத்தில் தீவிரமாக இருத்தல், அவ்வப்போது தலைதூக்கும் சேடிஸம், சமூகத்தோடு இயைந்து போகாத மனோநிலை, தான் தான் மேலானவன் எனும் எண்ணம், சகோதரங்களால் ஏமாற்றப்படுதல் போன்ற விஷயங்களால் அலைக்கழிக்கப்படுவார்கள். தன் பெயரில் வீட்டை வாங்காமல் இருப்பது நல்லது. அதேபோல முன்கோபத்தை அவசியம் தவிர்க்க வேண்டும். தேவையற்று வெறும் மண்ணில் முதலீடு செய்து நஷ்டப்படக் கூடாது.
தனுசு ராசியான இரண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்திருந்தால் கிரிமினல் லாயர்ஸ் அதிகமாக இந்த சேர்க்கையில் பிறந்தவர்களில் இருப்பார்கள். சிறுவயதிலேயே ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சேர்த்து வைத்து சொத்துக்களை வாங்கலாம் என்று எண்ணி எண்ணி சேர்த்து வைப்பார்கள். பிறகு, ஏதோவொன்றிற்காக எல்லாவற்றையும் செலவு செய்ய வேண்டியிருக்கும். கண்களில் அழுத்தம் உருவாகும். எச்சரிக்கை தேவை.
பல மொழிகளைக் கற்றுத் தேர்வார்கள். ஆரம்பக் கல்வியை சுமாராகப் படித்தும், உயர் கல்வியில் சிறந்தும் விளங்குவார்கள். மகர ராசியான மூன்றாம் இடத்தில் இவர்கள் இருவரும் அமர்ந்தால் காற்றுள்ளபோது தூற்றிக் கொள்ளாமல் காற்றடிக்கும் காலத்தில் மாவு விற்கச் செல்வார்கள். கையில் பத்து பைசா இல்லாமல் துணிவையே துணையாகக் கொண்டு தொழில் தொடங்குவார்கள். ஒரு முயற்சியை ஒரே நேரத்தில் செய்து முடிக்காமல் துண்டு துண்டாக செய்து முடிப்பார்கள்.
மகிழ்வான பழைய இன்ப நினைவுகளை மறந்துவிட்டு எதிர்காலத்தில் ஏதேனும் சோகமான விஷயங்கள் நடந்துவிடுமோ என்று பயந்துகொண்டேயிருப்பார்கள். பழம் நறுக்குவதற்குக் கத்தியை உபயோகப்படுத்தும்போது கூட பிளேடு, கத்தி போன்றவற்றை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கும்ப ராசியான நான்காம் இடத்தில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்தால் இந்த சேர்க்கையில் பிறந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்கள் புகழ் பெற்றிருப்பதை பார்க்கலாம்.
தாய் வழிச் சொந்தங்களால் நிறைய தொந்தரவுகளை அனுபவிப்பார்கள். நிறைய தலைமுடி, தாடி வளர்த்துக் கொண்டிருப்பார்கள். கல்வித் தடை இருக்கும். மெரைன் இன்ஜினியராகவும், அல்லது குறைந்தபட்சம் படகோட்டுபவர்களாகவும் இருப்பார்கள். தாயாருடன் ஏதேனும் பிரச்னை வந்துகொண்டேயிருக்கும். அல்லது தாயாரின் உடல்நிலை பாதித்தபடி இருக்கும். குறிப்பாக தாயாருக்கு கர்ப்பப்பை கோளாறு இருந்தால் சரிசெய்து கொள்ள வேண்டும்.
மீனம் ராசியான ஐந்தாம் இடத்தில் செவ்வாயும் சனியும் இருந்தால் முதலில் கருச்சிதைவை ஏற்படுத்தி பின்னரே மழலை பாக்கியத்தை கிட்டச் செய்யும். மூர்க்கன், கோபக்காரன், தந்தையை நிந்திப்பவன், சட்டங்களின் ஓட்டைகளைக் கொண்டு தப்பிப்பவன் என்றெல்லாம் பழைய நூல்கள் சொல்கின்றன. லக்னாதிபதியோடு சனி சேரும்போது எதிலுமே மிகையுணர்ச்சி கொள்ள வைக்கும். பொறுமையே இருக்காது. பூர்வீகச் சொத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். பூர்வீகச் சொத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கக் கூடாது.
தாய் மாமன் உறவில் ஏதேனும் பகை உணர்வு இருந்து கொண்டேயிருக்கும். உறவினர்களோடு அடிக்கடி பகை மூளும். அவர்களால் ஏமாற்றப்படுவீர்கள். மேஷம் ராசியான ஆறாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். பாதகாதிபதியான சனியானவர் ஆறில் மறைவது நல்லது. திடீர் பணவரவு, வழக்கில் வெற்றி, ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு. பெட்ரோல் பங்க், தோல் தொழிற்சாலை, மதுபான தொழிற்கூடங்களில் வேலை பார்ப்பவர்களுமுண்டு. கொஞ்சம் கால்தாங்கி நடப்பார்கள்.
ஆறு விரல், யானைக் காது உண்டு. விபத்தில் தாடை எலும்பு, பல் விழும் அபாயமுண்டு. எச்சரிக்கை. பழைய காலத்திய உணவுக் கலங்கள், மரச்சாமான்கள் போன்றவற்றை சேர்த்து வைத்திருப்பார்கள். நீர் நிலைகளுக்குச் செல்லும்போது எச்சரிக்கை தேவை. முக்கியமாக கடல். ஏனெனில், சனியே கடலை ஆள்கிறார். ரிஷபம் ராசியான ஏழாம் இடத்தில் இவர்களிருவரும் அமர்ந்தால் ஒரேவயதுள்ள அல்லது தன்னைவிட மூத்த பெண் மனைவியாக அமையும் வாய்ப்புண்டு.
வசதி வாய்ப்புகளோடு பிறந்திருந்தும் சிறு வயதில் தாயையோ அல்லது தந்தையையோ இழந்திருக்கும் பெண் மனைவியாதலும் நடக்கும். எப்போதும் எங்கேனும் பிரயாணம் செய்தபடி இருப்பார்கள். அதிக வட்டிக்கு கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று கடன் வாங்காமல் இருப்பது நல்லது. வட்டி கட்டியே வீணாக பணத்தை இழப்பார்கள். உள்ளுணர்வு மிகச் சரியாக இருக்கும்.
மிதுனம் ராசியான எட்டில் சனி மறைவது நல்லதேயாகும். இது நீண்ட ஆயுளைத் தரும். நிறைய பேர் ஹோட்டல், போர்டிங் லாட்ஜிங் வைத்து நடத்துபவர்கள் உண்டு. பாதயாத்திரை செல்லும் பக்தகோடிகளுக்கு கைங்கரியம் செய்வார்கள். இதில் ஒருசிலர் நல்ல ஓவியர்களாக மிளிர்வார்கள். தத்துவ ஞானம் பேசுபவர்களும் அதிகமுண்டு. பேசி முடிக்க வேண்டிய விஷயத்திற்கெல்லாம் வழக்கு தொடுத்தல் என்று பிரச்னைகளும் வந்து நீங்கும். அதிக வட்டிக்கு கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று கடன் வாங்காமல் இருப்பது நல்லது.
வட்டி கட்டியே வீணாக பணத்தை இழப்பார்கள். நீதிமன்றத்தில் பிறர் மீது வழக்கு போடாமல் இருப்பது நல்லது. கடகம் ராசியான ஒன்பதாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் தவம், யோகம், தர்ம சிந்தனைகள், கல்யாண மண்டபம் கட்டி ஏழைகளுக்கு விடுதல் என்றெல்லாம் நற்செயல்களில் ஈடுபடுவார்கள். தந்தையை மீறிய ஞானத்தோடு விளங்குவார்கள். இவர்களிடம் காசு தங்காது. மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
சிம்ம ராசியான பத்தாம் இடத்தில் இந்த இரு கிரகங்களும் சேர்வதால் இந்த இரண்டு கிரகங்களும் இங்கு இடம் பெற்றிருந்தால் ஐ.எப்.எஸ்., வனவியல் துறை, சுற்றுலாத்துறையில் பெரிய பதவிகள். குழந்தைகள் காப்பகம், அடிபட்ட பசுவிற்கு மருத்துவ சிகிச்சை, அனாதைப் பிண அடக்கம், உளவாளியாக செயல்படுதல், கோழிப்பண்ணை போன்ற முக்கிய துறைகளில் கால்பதித்து வெற்றி பெறுவார்கள். இவர்களிடம் அசாத்திய ஆற்றலும், தொலைநோக்குச் சிந்தனையும் இருக்கும்.
இதில் அதிகமானவர்கள் சுயதொழிலைத்தான் விரும்புவார்கள். தேயிலைத் தோட்டம், மிளகு, ஏலக்காய் வியாபாரம் செய்வார்கள். ஹார்டுவேர்ஸ், பெயின்ட் கடை வைத்து நடத்துவார்கள். கன்னி ராசியான பதினோராம் இடத்தில் சனியும் செவ்வாயும் அமர்ந்தால் திடீரென்று எல்லா விஷயத்திற்கும் கணக்கு பார்க்க ஆரம்பிப்பார்கள். மூத்த சகோதரரோடு இணக்கமாக இருப்பது நல்லது. இல்லையெனில் அவரால் பிரச்னைகள் வரக்கூடும்.
மூத்த சகோதரரை அடக்கி ஆளுவார்கள். திறமையிருந்தும் வெளிப்படாமல் இருப்பார்கள். உடன்பிறந்த சகோதரர்களுக்கு இந்த அமைப்பு கொஞ்சம் ஆகாதுதான். துலாம் ராசியான பன்னிரெண்டாம் இடத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அதிகம் செலவு செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். பேசத் தெரியாமல் பேசி வீண்பழியை கட்டிக் கொள்வார்கள். உள்ளங்காலில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தூக்கமின்மையும் கனவுத் தொல்லையும் அதிகமாக இருக்கும். சிற்றின்ப நாட்டம் மிகுந்திருக்கும். உறவினர்களோடு பகை பாராட்டுவார்கள். இந்த அமைப்பானது பெரும்பாலும் எதிர்மறை கதிர்வீச்சையே வெளிப்படுத்தும் சேர்க்கையாகும். அதனால் உக்கிரமான தெய்வங்களின் வழிபாடு இதற்கு முக்கியமாகும். அவற்றில் சுடலை மாடன் வழிபாடு மிகமுக்கியமானதாகும். அப்படிப்பட்ட ஒரு அபூர்வ தலமே சீவலப்பேரி ஆகும்.
திருநெல்வேலியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது சீவலப்பேரி கிராமம். பாண்டி நாட்டில் சுடலைமாடனுக்கு பல கோயில்கள் இருந்தாலும் குறிப்பிடும்படியாக ஒரு சில கோயில்களே திகழ்கின்றன. அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது இக்கோயில். சுடலைமாடன் மாசானக்கோனாருக்கு நாவில் ஓம் எழுத மண் எடுத்த இடம் மயான பூமியானது. அங்கிருந்துதான் மண் எடுத்து வந்து கோயிலில் திருநீறாக கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை டிராக்டர் கொண்டு மயானக்கரையில் தோண்டி திருநீறு மண் அள்ளப்படுகிறது.
சுமார் 600 ஆண்டுகளாக மண் அள்ளப்பட்டும் அங்கு எந்த பள்ளமும் இன்னும் ஏற்பட வில்லை, மண்ணெடுக்க தோண்டிய சில நாட்களிலேயே அந்த இடம் இயல்பாக சமமாகிவிடுகிறது. எல்லாம் சுடலையின் அற்புதம் என்கிறார்கள் சீவலப்பேரி மக்கள். இந்த திருநீற்று மண்ணைப் பூசினால், தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள் பலன்பெற்றவர்கள். இந்த கோயிலில் மூலவர் சுடலைமாடனின் வலது புறத்தில் தாய் பேச்சியம்மனும், தாய் பிரம்மசக்தியும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அவருக்கு எதிரே புதிய சாமியும், பின்புறம் முண்டன் சாமியும் அருள்பாலிக்கின்றனர்.
(கிரகங்கள் சுழலும்...)
ஓவியம்: மணியம் செல்வன்
|