விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 14

‘‘இருங்க...’’ குரல் கொடுத்து தடுத்தவனை மற்ற இருவரும் பார்த்தார்கள். ‘‘என்ன விஷயம்?’’ வலப்பக்கம் இருந்தவன் கேட்டான். ‘‘உள்ள நுழையாம இங்கேந்தே பார்ப்போம்...’’ நிதானமாகச் சொன்னான் அவர்கள் இருவரையும் தடுத்தவன். ‘‘ஏன்?’’ இடப்பக்கத்தில் நின்றவனின் முகம் சலிப்பைக் காட்டியது. ‘‘அனுமதியில்ல...’’ ‘‘அப்புறம் ஏன் இங்க வந்தோம்..?’’ ‘‘ஜஸ்ட் பார்வையிட...’’ ‘‘அதுக்கு அப்புறம்..?’’ வலப்பக்கத்தில் நின்றவன் சட்டென்று கேட்டான்.

‘‘நாம அலசியதைப் பத்தி சம்பந்தப்பட்டவர்கிட்ட டிஸ்கஸ் செய்யணும்...’’ ‘‘யார் அவரு..?’’ சலிப்பை உதறினான் இடப்பக்கத்தில் நின்றவன். ‘‘தெரியாது...’’ சொன்னவன் தன் இரு பக்கங்களையும் மாறி மாறிப் பார்த்தான். ‘‘இங்க பாருங்க... ஸ்பேஸ் ஷிப்புலேந்து எங்க இறங்கறோமோ அந்த இடத்து மொழி நமக்கு வசப்படும். அப்படித்தான் நாம உருவாக்கப்பட்டிருக்கோம். அதனாலதான் ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசறோம்...’’ ‘‘நாங்க கேட்டது இதை இல்ல...’’ கோரசாக இருவரும் முறைத்தார்கள்.

‘‘தெரியும். முழுமையா சொல்ல விடுங்க. ஸ்ரீரங்கம் ஸ்ரீராமானுஜர் சந்நிதிக்குள்ள நம்மை நுழையச் சொல்லலை. அதுக்கான நேரம் இன்னும் வரலையாம். வெளியேந்தே இன்ச் பை இன்ச்சா அலசச் சொன்னாங்க. இதை வைச்சு நாம மூணு பேரும் தனித்தனியா ஒரு க்ராஃப் போடணும்...’’ ‘‘ப்ளூ ப்ரிண்ட் மாதிரியா..?’’ ‘‘ஆமா. வரைபடம் வரைஞ்சு முடிச்சதும் இங்கயே இருக்கணும். யார் கண்ணுக்கும் நாம தெரிய மாட்டோம். அதனால பிரச்னையில்ல. நம்ம தேடி ஒருத்தர் வருவாரு. அவர்கிட்ட அதை கொடுக்கணும்.

அப்புறம் அவர் என்ன சொல்றாரோ... அதையெல்லாம் நாம செய்யணும். அவரா நம்மை போகச் சொன்ன பிறகுதான் ஸ்பேஸ் ஷிப்புல ஏறி நம்ம இடத்துக்கு போகணும்...’’ சொன்னவன் தன் தோள் பையிலிருந்து மூன்று துணியை எடுத்தான். பார்க்க தார்ப்பாய் போலவே அது இருந்தது. ‘‘இந்தாங்க...’’ மற்ற இருவரிடமும் அதை கொடுத்துவிட்டு தனக்கென ஒன்றை வைத்துக் கொண்டான். மூவரும் பிரிந்து வேறு வேறு திசைகளுக்கு நகர்ந்தார்கள். தங்களிடம் கொடுக்கப்பட்ட தார்ப்பாய் போன்ற வஸ்துவை பிரித்தார்கள். அந்தந்த இடத்தில் நின்றபடியே ஸ்ரீராமானுஜரின் சந்நிதியை தங்கள் பார்வையில் வரைய ஆரம்பித்தார்கள்.

மூன்று தார்ப்பாயுமே கரு நீல நிறத்தில் இருந்தது! திருச்சி பை பாஸை ஆதி அடைந்தபோது மாலை வெயில் இதமாக முகத்தில் அறைந்தது. ஹெல்மெட்டை எடுத்துவிட்டு ஆழ்ந்து அதை அனுபவித்தான். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்க் இருப்பதாக செல்போனின் ஆப் சுட்டிக் காட்டியது. எரிபொருளின் இருப்பை பார்வையிட்டான். இன்னும் ஐந்து கி.மீ.வரை செல்லலாம்.

ஹெல்மெட்டை பெட்ரோல் டாங்க் மீது வைத்தபடி நிதானமாக வண்டியை செலுத்தினான். பதினைந்து நிமிடங்களில் பங்க் வந்தது. கார்டை தேய்க்கும் மிஷின் ரிப்பேர் என்பதால் கேஷாக கேட்டார்கள். சிரிப்பை அடக்கியபடி புத்தம்புது ஐநூறு ரூபாய் தாளை நீட்டினான். ‘‘டேங்க்கை ஃபுல் பண்ணிடுங்க...’’ நூற்று எண்பது நொடிகளுக்குப் பின் வந்த வழியே திரும்பி பை பாஸை அடைந்தான்.

ஹெல்மெட்டை தலையில் மாட்டினான். ஜெர்கினின் ஜிப்பை கழுத்து வரை இழுத்தான். ஆக்ஸிலரேட்டரை முறுக்கினான். மதுரையை நோக்கி பறந்தான். ‘‘டேய்... ஸ்ரீரங்கம் வந்தாச்சு...’’ மாருதியின் வேகத்தை ஐஸ்வர்யா குறைத்தாள். ‘‘குட்...’’ கண்களைக் கசக்கியபடி கிருஷ்ணன் எழுந்தான். ‘‘ராஜகோபுரம் பக்கமா போ...’’ ‘‘முட்டாள்...’’ ஓரம்கட்டி பிரேக்கை அழுத்தினாள்.

‘‘நான் ரெஸ்ட் ரூம் போகணும்டா...’’ ‘‘நானும்தான் ஐஸ்...’’ ‘‘அப்புறம் கோயிலுக்குள்ள போகச் சொல்ற?’’ ‘‘இல்ல. ராஜகோபுரம் பக்கமா போகச் சொல்றேன்...’’ அவனை உற்றுப் பார்த்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்தாள். தெற்கு நோக்கி கம்பீரமாக ராஜகோபுரம் எழுந்திருந்தது. ‘‘ரைட்ல இண்டிகேட்டர் போட்டு திருப்பு ஐஸ்...’’ திருப்பினாள்.

‘‘இப்ப லெஃப்ட்...’’ அப்படியே செய்தாள். ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தின் வெளியே வண்டிகள் நின்றிருந்தன. ‘‘இந்த ரோட்லயே போ... டெட் எண்டுல ரைட்ல திரும்பு...’’ ‘‘இங்க ஏதுடா ஹோட்டல்?’’ ‘‘நிறைய இருக்கு ஐஸ். காண்பிக்கறேன்...’’ என்ற க்ருஷ், குனிந்து அவள் பக்கமாக கண்களை சுழலவிட்டான். ‘‘ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மொத்தம் ஏழு பிரகாரங்கள். அதுல கடைசி மூணுல வீடுகளும், கடைகளும் இருக்கு.

முதல் நாலு கோயிலுக்கு சொந்தம். கோயில் பயன்பாட்டுக்கு மட்டும்தான் அதை பயன்படுத்தறாங்க...’’ ‘‘இதுக்கு முன்ன இங்க வந்திருக்கியா..?’’ டெட் எண்டில் காரை வலப்பக்கம் திருப்பியபடியே கேட்டாள். ‘‘இல்ல. ஆனா, ஃப்ளைட் ஏறுவதற்கு முன்னாடி எல்லாத்தையும் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்... ஐஸ்... ஐஸ்... ஸ்லோ... ஸ்லோ... ரைட்ல திரும்பு...’’ அவன் சொன்னபடி திருப்பி கோபுர வாயிலினுள் நுழைந்தாள். சாலை முடிந்த இடத்தில் கோயில் மதில் சுவர் பிரம்மாண்டமாக எழுந்திருந்தது.

‘‘லெஃப்டுல திருப்பு. கார்லயே கோயிலை ஒரு சுத்து சுத்தலாம்...’’ கட்டுப்பட்டாள். நான்கு திசையிலும் ஒரே அளவில் கோயில் வாயில்கள் காணப்பட்டன. மேற்கு மாட வீதி, வடக்கு மாட வீதி, கிழக்கு மாட வீதியை கடந்து தெற்கு மாட வீதிக்கு வந்தார்கள். கோயில் மதிலை ஒட்டி கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. எதிரே வெவ்வேறு சமூகத்தினரின் சத்திரங்கள். ‘‘அந்த கேப்புல நீயும் காரை நிறுத்திடு ஐஸ்...’’ என்றபடி தன் பையுடன் இறங்கிய க்ருஷ், தள்ளி நின்று சிகரெட்டை பற்ற வைத்தான்.

காரை பார்க் செய்துவிட்டு ஐஸ்வர்யா வந்தாள். சிகரெட்டை தரையில் போட்டு மிதித்தான். இருவரும் தெற்கு மாட வீதியின் முனையில் இருந்த சத்திரத்துக்கு வந்தார்கள். ரிசப்ஷனில் தன் பாஸ்போர்ட்டை காட்டினான். மூக்குக் கண்ணாடி வழியே ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்தவர், டேபிள் பக்கம் தன் கைகளைக்  கொண்டு சென்றார். மணியடிக்கும் ஓசை துல்லியமாகக் கேட்டது.

நடுத்தர மனிதர் வருவதற்குள் லெட்ஜரில் கையெழுத்தும், அட்வான்ஸ் தொகையும் வாங்கினார். ‘‘இரண்டாவது மாடிக்கு இவங்களை கூட்டிட்டுப் போ...’’ என்றபடி நடுத்தர மனிதரிடம் சாவியைக் கொடுத்தார். ‘பையனை’ப் பின்தொடர்ந்து இருவரும் படிக்கட்டில் ஏறினார்கள். ‘‘இதுதான் சார்...’’ அறையைத் திறந்து ஏசியை ஓடவிட்டவரிடம் நூறு ரூபாய் தாளை க்ருஷ் நீட்டினான். ‘‘வைச்சுக்க...’’ முகமெல்லாம் பல்லாக அந்த நடுத்தர மனிதர் வெளியேறியதும், கட்டிலில் அமர்ந்து தன் லேப் டாப்பை ஆன் செய்தான்.

‘‘முதல்ல நீ ஃப்ரெஷ் ஆகிடு... ஸ்பேர் டிரஸ்ஸை அப்புறம் வாங்கிக்கலாம்...’’ சொன்னவன் தன் பையிலிருந்து புத்தம் புதிய சோப்பையும் துண்டையும் எடுத்துக் கொடுத்தான். அதைப் பெற்றுக்கொண்டு அறையின் மூலையில் இருந்த ரெஸ்ட் ரூமுக்குள் ஐஸ்வர்யா நுழைந்தாள். அவள் கதவை உட்பக்கமாக லாக் செய்யும் வரை காத்திருந்தவன், சட்டென்று தன் மின்னஞ்சலைத் திறந்தான். எதிர்பார்த்த மெயில் வந்திருந்தது.

அட்டாச்மென்ட்டை திறந்தான். பாரீஸ் நகரத்தில் இருக்கும் பாதாள சாக்கடையின் மூடியும் - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இருக்கும் தாமரைப் பூ வடிவ சிற்பமும் அருகருகில் இணைக்கப்பட்ட புகைப்படம் பளிச்சென்று மானிட்டர் முழுக்க விரிந்தது. 360 டிகிரியில் அதை ஆராய்ந்துவிட்டு அடுத்த புகைப்படத்தை டவுன்லோட் செய்தான். மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தின் நுனியில் இருக்கும் பூதத்தின் சிற்பம் டைட் க்ளோசப்பில் ஸ்கிரீனை நிரப்பியது.

புன்னகையுடன் இவ்விரு புகைப்படங்களையும் தன் ‘D’யில் சேமித்தான். நிம்மதியாக இருந்தது. இருட்டிய பிறகும் ராமானுஜர் சந்நிதியை விட்டு மூவரும் அகலவில்லை. ‘‘நிச்சயம் வருவாரா..?’’ ‘‘வந்தாகணும். நாம காத்திருக்கிற தகவல் அவருக்கு போயிடுச்சு...’’ மவுனமாக தங்களைச் சுற்றி நடப்பதை பார்வையிட்டார்கள். அறுபது நிமிடங்களுக்குப் பிறகு - ராமானுஜர் சந்நிதியை நோக்கி ஒரு வயதானவர் வந்தார்.

‘‘இவர்தானா..?’’ ‘‘ஆமா... நானேதான்...’’ பதில் சொன்ன பெரியவர் அவர்களை நெருங்கி தனித்தனியே கைகுலுக்கினார். யாருக்கும் தெரியாத தங்கள் உருவம் அவருக்கு மட்டும் தெரிகிறது என்றால்... தங்களை பூமியில் வழிநடத்தப் போகும் நபர் அவராகத்தான் இருக்க வேண்டும்...என்றாலும் அடையாளச் சொல் தேவைப்பட்டது. கேட்டார்கள்.

நிதானமாகச் சொன்னார். ‘‘KVQJUFS...’’ உடனே மூவரும் தாங்கள் வரைந்த வரைபடத்தை அவரிடம் கொடுத்தார்கள். பெற்றுக் கொண்டார். பிரித்துப் பார்க்கவில்லை. ‘‘வாங்க போகலாம்...’’ என்றபடி வந்தவழியே வாயிலை நோக்கிச் சென்றார். ‘‘உங்களை எப்படி கூப்பிடறது..?’’ பின்தொடர்ந்தபடி ஒருவன் கேட்டான். ‘‘எல்லாரும் கூப்பிடறா மாதிரி பேர் சொல்லியே...’’ ‘‘பேரு?’’
‘‘கார்க்கோடகன்!’’

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்