மனிதனின் நீதிபதி!
-த.சக்திவேல்
இரவு 12 மணி. மனித நடமாட்டமே இல்லை; நாய்கள் மட்டும்தான். ‘இங்கே குப்பையைக் கொட்டிவிட்டால் யாருக்குத் தெரியப்போகிறது’ என்றுதான் பலரும் அந்த நள்ளிரவில் குப்பையை வீசுகின்றனர். ஆனால், ‘யாருக்கும் தெரியாது’ என்று நாம் செய்யும் காரியங்களைக் கண்டறியும் திறன் நாய்களிடம் இருப்பதாக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘‘யாராவது சமூக விரோத செயல்களில் ஈடுபடும்போது ஆக்ரோஷமான உணர்வுகளை, பதற்றங்களைத் தங்களின் முகங்களில் வெளிப்படுத்துவார்கள்.
மனிதன் கூடவே எப்பொழுதும் நாய்கள் இருப்பதால் அவனது அங்க அசைவுகளுக்கான அர்த்தங்களை அவற்றால் துல்லியமாக கணிக்க முடியும். எனவே நாய்கள் முன்பு நல்லபடியாக நடந்துகொள்வதே சிறந்தது!’’ என்கிறார் பேராசிரியர் ஆண்டர்சன். தனக்குக் கிடைக்கப்போகும் நற்பெயரைச் சார்ந்தே பெரும்பாலும் மனிதன் அனைத்துக் காரியங்களையும் செய்கிறான். யாரும் நம் செயல்களைக் கண்டுகொள்வதில்லை என்றால், ‘எதற்கு இதைச் செய்ய வேண்டும்?’ என்றே யோசிப்பான். இனி அப்படி சிந்திக்கத் தேவையில்லை. மனிதனின் அனைத்து செயல்களையும் நாய்கள் கவனிக்கின்றன!
|