இயற்கை விவசாயத்துக்காக போராடும் IIT பட்டதாரி!



-கி.ச.திலீபன்

ஒயிட் காலர் வேலை பிடிக்காமல், வயிற்றுக்குச் சோறு போடும் விவசாயத்துக்கு வந்தவர்களில் மன்னர் மன்னனும் ஒருவர். பெரிய நிறுவனமொன்றில் இந்திய அளவில் தலைமைப் பொறுப்பு வகித்தும் இயற்கை விவசாயத்தின் தேவையை உணர்ந்து மதுரையில் 9 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். ‘‘தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுதான் சொந்த ஊர். எல்லா சமூகத்தவரும், எந்தத் தொழில் செய்பவரும் எங்க பகுதில விவசாயம் செய்வாங்க. இப்பவும் அப்படித்தான். அப்பா அரசு ஊழியர். ஆனாலும் விவசாயம் செய்தாரு.

இப்படியொரு பின்னணில வளர்ந்த எனக்கும் விவசாயம் மேல சின்ன வயசுலயே ஈடுபாடு வந்தது. நல்லா படிப்பேன். மண்ணோட வேதியியல் தன்மை குறித்து படிக்கணும்னு ஆசை. அதனாலேயே மண் வேதியியல் (soil chemistry) படிச்சேன். சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்துக்கும் தொடர்பிருக்கு. ஸோ, IIT தன்பாத்தில் ‘சுற்றுச்சூழல் பொறியியல்’ குறித்து முதுநிலை முடிச்சேன். இதனோட ஒரு பகுதியா இருந்த கழிவுநீர் மேலாண்மை மேல கவனம் குவிஞ்சது. 

படிப்பை முடிச்சதும் இந்தியாவுல இருக்கிற பல நிறுவனங்களுக்கு கழிவுநீர் மேலாண்மை ஆலோசகரா இருந்தேன். அப்புறம் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்துல சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு இந்திய அளவுல தலைமை அலுவலரா பணிபுரிஞ்சேன். ஏழு வருஷங்களுக்குப் பிறகு வேலைல ஒரு சலிப்பு. என்னோட களம் இது  இல்லனு தோணிகிட்டே இருந்தது. ஆந்திர மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துல கழிவு நீர் மேலாண்மை கமிட்டில உறுப்பினராகவும் இருந்திருக்கேன்.

இப்படி என் பணி அனுபவங்கள் வழியா ஏற்பட்ட புரிதல்தான் என்னை முழுநேர விவசாயியா மாத்திச்சு. கழிவுநீரை சுத்திகரிச்சு வெளில விட சில தரக்கட்டுப்பாடு இருக்கு. பூச்சிக்கொல்லி தயாரிக்கிற தொழிற்சாலைலேந்து சுத்திகரிக்கப்பட்டு வெளியேறுகிற கழிவுநீர்ல ppb (parts per billion) அளவு கூட பூச்சிக்கொல்லி இருக்கக் கூடாது. இது அரசோட விதி. இந்த விதி பூச்சிக்கொல்லி தயாரிக்கிற தொழிற்சாலைக்கு மட்டும்தான் பொருந்தும்.

அதைப் பயன்படுத்தற விவசாயிக்கு எந்த விதியும் இல்லை. பூச்சிக்கொல்லி தெளிக்கிறப்ப விவசாயியும் அதை சுவாசிக்கிறாரு. மட்டுமில்ல, கொடிய ரசாயனத்தைத்தான் விளைநிலங்கள்லயும், விளைபொருட்கள்லயும் தெளிக்கிறோம். ரொம்ப சாதாரணமா இதை எல்லாம் செய்யறோம். இதுதான் முகத்துல அறையற நிஜம். இதெல்லாம் என்ன வகையான பாதிப்பை ஏற்படுத்தும்னு யோசிச்சப்பதான், சூழலுக்கு பாதிப்பில்லாம இயற்கையோடு இயைந்து மேற்கொள்கிற விவசாயம்தான் உண்மையான தீர்வுங்கிற முடிவுக்கு வந்தேன்...’’ நிதானமாக அதேநேரம் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் மன்னர் மன்னன்.
 
இந்த புரிதலுக்கு வந்ததுமே ஏசியன் பெயின்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறியிருக்கிறார். 2006ம் ஆண்டு மதுரையில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கியிருக்கிறார். ‘‘நம்ம விவசாயிங்க ரசாயன உரத்துக்கே பழக்கப்பட்டிருக்காங்க. ரசாயன உரத்துக்கும், பூச்சிக்கொல்லிக்குமே கடன் மேல கடன் வாங்கி கடைசில நஷ்டமடைஞ்சிருக்காங்க.

இது ஒரு பக்கம்னா... இன்னொரு பக்கம் விவசாயம் பத்தின எந்த புரிதலும் இல்லாம, ஆனா, விவசாயம் செய்யணும் என்கிற ஆர்வத்தோட பலபேர் வர்றாங்க. இவங்களை வழிநடத்த ஆளில்லை. இவங்களுக்கு எல்லாம் பயிற்சி தரணும்னு முடிவு செஞ்சேன். இதனோட ஓர் அங்கமா என்னோட ஒருங்கிணைந்த பண்ணையையே பயிற்சிக்கான மாதிரியா வடிவமைச்சேன்.

அந்தவகைல 2007 - 2013 காலகட்டத்துல 1500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தேன். 2013ல தண்ணீர் பிரச்னை வந்ததால தற்காலிகமா பயிற்சியை நிறுத்தும்படி ஆகிடுச்சு. இப்ப 2016 முதல் திரும்பவும் தொடங்கியிருக்கேன். இந்த முறை பள்ளி மாணவர்களை டார்கெட் பண்றோம். தாங்கள் சாப்பிடுகிற உணவு எப்படி உற்பத்தியாகுதுனு அவங்களுக்கு தெரியணும்.

அப்பதான் மாணவர்களுக்கு விவசாயம் மேல பிடிப்பு வரும்...’’ என்ற மன்னர்மன்னன், தனது ஒருங்கிணைந்த பண்ணை குறித்து விவரித்தார். ‘‘இந்த 9 ஏக்கர் நிலத்துலயும் பன்மய விவசாயம்தான். 8 மாடுகளை வளர்க்கறேன். மாடு மற்றும் ஆடுகளோட தீவனத்துக்கு நேப்பியர் புல், கோழிக்கான தீவனமா புரதம் நிறைஞ்ச வேலி மசால்... வளர்க்கறேன். ஆடி மாச சீசன்ல கம்பு, இருங்கு சோளம், வெள்ளை சோளம் எல்லாம் பயிரிடறேன்.

கம்பு, சோளத்தை எடுத்த பிறகு கிடைக்கிற கம்புத்தட்டையும், சோளத்தட்டையும் மாட்டுக்கு உணவாகிடும். முன்னாடி மல்லிகை, கனகாம்பரம் பயிரிட்டேன். அது தினசரி வருமானத்தைக் கொடுத்தது. காய்கறிகள்ல கத்திரிக்காய், தக்காளி இந்த மண்ணுக்கு உகந்ததல்ல. வெண்டை, கொத்தவரங்காய், பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய்தான் இந்த மண்ணுக்கானது. அதனால இதை பயிரிடறேன். நபார்டு வங்கி உதவியோட மேற்கொண்ட பயிர் ஆராய்ச்சியின் விளைவா இந்த மண்ணுல இயற்கை விவசாயம் வழியா இவை எல்லாமே நல்லா வளர்ந்தது...’’ என்கிற மன்னர் மன்னன் மரச்செக்கையும் அமைத்திருக்கிறார்.

‘‘எல்லா பொருட்கள்லயும் இருக்கிற மாதிரி எண்ணெய்லயும் கலப்படம் பெருகியிருக்கு. அதனால தூய்மையான எண்ணெய்யை உற்பத்தி செய்யணும்னு மாட்டை வைச்சு இயக்குற மரச்செக்கை அமைச்சிருக்கேன். இப்ப கடலை எண்ணெய்யை எடுக்கறோம். யார் வேண்டுமானாலும் தங்ககிட்ட இருக்கிற கடலையை கொண்டு வந்து எங்க செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கலாம். கிடைக்கிற புண்ணாக்கை நானே விலைக்கு வாங்கிக்கறேன்.

இந்த சுத்தமான எண்ணெய்யை நல்ல விலைக்கு வாங்க நிறைய பேர் இருக்காங்க. எல்லாத்தையும் வணிகமா மாத்தணும்னு நான் நினைக்கலை. அது என் பணிகளை சிதைச்சுடும். இப்போதைக்கு இயற்கை விவசாயம் வழியா குறைந்த செலவுல தேசிய அளவுல அதிக விளைச்சலை எடுத்து காண்பிக்கணும். இந்த குறிக்கோளோட உழைக்கறேன். பயிர்களுக்குத் தண்ணீர் கட்டறப்ப பசுஞ்சாணத்தையும், கோமியத்தையும் கலந்து விடுவேன்.

இல்லைனா கோமியத்தோடு நொச்சி - எருக்கு கரைசல், மீன் கரைசல், மீனோட கழிவுகளை தேவைக்கு ஏற்ப தொட்டில கலப்பேன். ஒரு சங்கிலி மாதிரி ஒண்ணுலேந்து இன்னொண்ணுக்கு பயன்பாடு என்கிற அடிப்படைல மேற்கொள்ளும் இயற்கை விவசாயத்தால பெரும் செலவே இல்லாம நல்ல விளைச்சலை எட்டலாம். ஒரு ஏக்கர் நிலத்துல சின்ன வெங்காயத்தை பெரும் விளைச்சல் எடுத்தேன்.

இப்ப பீர்க்கங்காய் போட்டிருக்கேன். இந்தியாவோட உச்சபட்ச விளைச்சலை விட அதிகமா இதை எடுக்கணும்னு முயற்சி செய்யறேன்...’’ என்று சொல்லும் மன்னர் மன்னனின் மனைவி தேவிக்கும் சமூகம் குறித்த ஆழமான பார்வை இருக்கிறது. கணவரின் முயற்சிக்கு எல்லா வகையிலும் உதவி வருகிறார்.

‘‘என் மனைவி தேவி, Master of social work படிச்சவங்க. என்னுடைய முயற்சிக்கு எல்லாம் அவங்கதான் துணையா இருக்காங்க. எங்க பண்ணைல நம்மாழ்வாரை அழைச்சுட்டு வந்து விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்திருக்கோம். இதை என் மனைவிதான் ஒருங்கிணைச்சாங்க...’’ பெருமையுடன் சொல்கிறார் மன்னர் மன்னன்.

படங்கள்: பாலா