COFFEE TABLE
-குங்குமம் டீம்
ரஹ்மானுக்கு கவுரவம்
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சினிமாவில் இது 25வது ஆண்டு. மைக்கேல் ஜாக்சன் பற்றிய ‘திஸ் இஸ் இட்’ என்ற மியூசிக்கல் ஃப்லிம் நினைவிருக்கிறதா? இப்போது, ரஹ்மானின் இசை சுற்றுப்பயணமும் அவரது சில்வர் ஜூப்ளி ஸ்பெஷலாக ‘ஒன் ஹார்ட்’ என்ற இசை திரைப்படமாக வெளியாகப் போகிறது. அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையிலான இசை சுற்றுப்பயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இந்த திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. கடந்த 5ம் தேதி கனடா, டொரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் திரையிடப்பட்ட இப்படம், வருகிற ஏப்ரலில் உலகெங்கும் வெளியாகிறதாம்!
ரீடிங் கார்னர்
பட்ஜ் - பட்ஜ் படுகொலைகள் சோஹன் சிங் கோஷ் தமிழில்: எஸ். அர்ஷியா
[புலம், 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. விலை ரூ.180. தொடர்புக்கு : 9840603499). சுதந்திரத்திற்கு முன்பு வெளிநாட்டுக்குச் சென்றவர்களின் நோக்கம் சுற்றுலாவோ, நாட்டைப் பார்த்து திரும்பும் அறிவுப்பசியோ அல்ல. பஞ்சம் பிழைக்கப் புறப்பட்டவர்களே அவர்கள். சோமகட்ட மாரு கப்பலில் சென்ற பயணிகள் கனடாவிற்குப் பிழைக்கப் போனவர்கள். அவர்கள் பட்ட அவதியை, கொடூரத்தை, சுமையை ரத்தமும் சதையுமாக இந்த நூல் சொல்லிச் செல்கிறது. இன்றைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தப் பயணிகளுக்காக வருத்தம் தெரிவித்ததுகூட இப்போது நடந்திருக்கிறது.
இந்தியா திரும்பியவர்கள் இந்திய காலனி அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் இதில் இருக்கிறது. கதைக் களன் இல்லை. பெரும் உரையாடல்கள் கிடையாது. ஆனால், மனம் உடையக்கூடிய சூழல்கள் இருக்கிறது. எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அர்ஷியாவின் மொழி பெயர்ப்பு தங்கு தடையில்லாமல் நம்மை புத்தகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. உண்மை எப்போதும் ஒளிரும். இந்தப் புத்தகமும் அவ்விதமே.
ஹிருத்திக் சிலாகிக்கும் வித்யா!
சென்னையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் வித்யா வாக்ஸ்தான் யூ ட்யூப்பில் வைரல் ஹிட் குயில். ‘Vidya Vox, wherever you are, what an amazing voice you have. Listening (to the) mashups nonstop. Bravo...’ என ஹிருத்திக் ரோஷனே பாலிவுட்டில் சிலாகிக்கிறார். ‘mashup’ கலெக்ஷன்ஸ் தவிர கேரள, பஞ்சாபி folks என வித்யாவின் பாடல்கள் அத்தனையும் லைக்ஸ் அள்ளுகிறது. சமீபத்திய வெளியீடான cool girl jiyare பாடலை மட்டும் 13 லட்சம் பேர் இதுவரை பார்த்து ரசித்துள்ளனர்.
சைலன்ட் கார்னர்
மல்லி சரசுவதி [பரிசல் புத்தக நிலையம், பழைய எண்.41, புதிய எண். 71-ஏ, ஆர்.கே. மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. விலை ரூ.250. தொடர்புக்கு: 9382853646). கதைகளால் மட்டுமே நிரம்பியிருக்கிறது இந்த உலகு. ‘ஒரு ஊர்ல’ என்ற இரண்டு வார்த்தைகளிலே கதை துவங்கிவிடுகிறது. இங்கே இந்திய மரபில் ஆரம்பத்தில் பெண்கள் என்றாலே அடிமைகள்தான். அவர்கள் கதை எழுதினால்கூட ஆண்களைப் பற்றியே எழுதினார்கள். ஆண்களின் மகத்துவம் பற்றியே எழுதுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
இப்போது சரித்திரம் மாறிவிட்டது. அவர்கள் இழந்த சுதந்திரத்தை திரும்பித் தரச்சொல்லி கேட்டும், எடுத்துக் கொண்டும் வருகிறார்கள். இத்தகைய சூழலில் சரசுவதியின் ‘மல்லி’ வந்திருக்கிறது. பெண்ணியம் சார்ந்து, தீண்டாமையை, வர்க்க வேறுபாடுகளை அகற்றப் போரிடும் கதாபாத்திரங்களை ‘மல்லி’ முன் வைக்கிறது. ஆவணமாக ஆகிவிடாமல், மிகவும் தெளிந்த பூரணத்துவத்துடன் பரந்து செல்கிறது.
சரசுவதியின் ‘மல்லி’ தரும் கேள்விகள் மிருதுவானவை. அதே சமயம் கனம் பொருந்தியவை. எப்போதுமே ஒருசுயசரிதம்போல தோற்றம் கொண்டவைகளுக்கு நம்மோடு மெல்லிய சிநேகம் இருக்கும். அது ‘மல்லி’ நாமாகவும் இருக்கலாம் என்ற உண்ைம. வேடங்கள் தரிக்காத இந்த ‘மல்லி’யை யாருக்கும் பிடிக்கும். ஏனெனில் சரசுவதியின் கலை நுட்பமானது.
இது ஃபுட்பால் அல்ல!
சிறுவர்கள் இந்த ஸ்பீக்கரை பார்த்தால் தூக்கிப் போட்டு கால்பந்து விளையாடத் தொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு கன கச்சிதமாக கால்பந்தைப் போன்றே இருக்கிறது இந்த மாடர்ன் புளூடூத் ஸ்பீக்கர். பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டைம்ஸ் டீவியாலெட் பேன்டம் அதிநவீன முறையில் இதை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்பீக்கரிலிருந்து வரும் சத்தம் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் எல்லாருக்குமே கேட்கும்! அந்த அளவுக்கு திறன் வாய்ந்த ஸ்பீக்கர் இது. தண்ணீர் உள்ளே புகமுடியாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதன் விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம் மட்டுமே!
இதுதான் இந்தியப் பெண்களின் நிலை!
இந்தியாவில் பெண்களின் நிலையைப் பற்றிய சமீபத்திய ஆய்வு ஒன்று பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. வெறும் 5% பெண்களே தங்களுக்கு உரிய கணவரை தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்கள் பெற்றோர்கள், சகோதரர்கள் சொல்கின்ற மாப்பிள்ளைக்குத்தான் கழுத்தை நீட்டியிருக்கிறார்கள்.
மட்டுமல்ல, சுமார் 80% பெண்கள் மருத்துவமனை போக வேண்டுமானால் கூட குடும்பத்தாரிடமோ அல்லது கணவனிடமோ அனுமதி கேட்கும் நிலைதான் நிலவுகிறது. 50% பெண்களுக்கு, ‘வீட்டில் என்ன சமைக்கவேண்டும்’, ‘மளிகைக் கடைக்குப் போக வேண்டும்’ என்பதற்குக் கூட கணவனின் அனுமதியைப் பெறவேண்டிய நிலையாம். 65% பெண்கள் தங்கள் கணவரை திருமணத்தின்போதே முதல்முறையாக சந்தித்திருக்கிறார்கள்!
|