எமோஷனல் சுந்தரம்!



-நா. கதிர்வேலன்

‘‘இந்தப் படம் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் சொல்லும். உணவுதான் மருந்து... ‘நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுவாகவே மாறுவாய்’ங்கிற செய்தியும் இதில் வருது. சமையல் என்றால் என்னவென்றே தெரியாதவர் உலகத்தின் பெரிய சமையல் நிபுணராக மாறுகிற கதை. சார்லி சாப்ளினும், இங்கே நாகேஷும் எனக்குப் பிடித்த கலைஞர்கள். அன்பு, காதல், வறுமை, கொடுமைன்னு அத்தனை விஷயங்களையும் காமெடியோடு பிசைந்து கொடுத்த மகா கலைஞர்கள்.

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நகைச்சுவையோடு பார்க்க ஆரம்பிச்சிட்டா நாம் எல்ேலாரும் தப்பிச்சிடலாம். கொஞ்சம் வாழ்க்கையை அதன் போக்குல ரசிச்சுக்கிட்டு பார்த்தால், உலகமே அழகா இருக்கும். அப்படி ஒரு படம்தான் ‘சர்வர் சுந்தரம்’’’ ஆத்மார்த்தமாகப் பேசுகிறார் புதுமுக இயக்குநர் ஆனந்த் பால்கி.

எப்படி இந்த ‘டைட்டில்’... ரொம்ப முக்கியமான படமாச்சே..!
கதைக்கு எப்படிப் பார்த்தாலும் இந்த தலைப்புதான் கச்சிதமாக இருந்தது. சொன்னதுமே ‘சார் பெரிய டைட்டில் ஆச்சே! நியாயம் செய்யணுமே’னு சின்னதாக யோசிச்சார் சந்தானம். ‘என்னால் செய்ய முடியும்னு நம்புகிறீர்களா பிரதர்’னு ஒரு கேள்வி கேட்டதோடு கதைக்குள் வந்துவிட்டார். ஏவிஎம் ஸ்டூடியோவிடம் தலைப்பைக் கேட்டால் அவங்க ஒன்லைன் வரைக்கும் கேட்டுட்டு சந்ேதாஷப்பட்டு கொடுத்தாங்க. ஒரு சாதாரண ஆளாக இருக்கிறவர் ஹீரோவாக மாறுகிற கதைதான்.

அவர் வாழ்க்கையில் இப்ப அந்த ஸ்டேஜ்தான் நடந்துகிட்டு இருக்கு. அவரை சர்வசாதாரணமாக நினைச்சுக்கிட்டு இருக்கிறவர்களுக்கு பேரனுபவம் காத்திருக்கிறது. 100% ஹீரோ அவர்னு சந்தேகம் இல்லாமல் தெரியவரும். நிறையப் பேர் ‘சர்வர் சுந்தரம்’ காமெடிப் படம்னு மட்டும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அதில் சில சீன்களின் அவர் நடிச்சிருக்கிறதைப் பார்த்தால் கண்டிப்பாக அழுதிடுவாங்க. அந்த அளவுக்கு அவர் செய்திருக்கார். நுணுக்கமான காட்சிகளையும் ஒரே டேக்கில் பின்னியெடுப்பார். செட்டில் இருந்தவங்க தன்னை மறந்து கை தட்டின நேரங்கள், இடங்கள் இதில் நிறைய அமைந்தது. மிக உன்னதமான இடங்கள், அவரால் மேலும் அழகடைந்திருக்கிறது.

நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் எப்படி செய்திருக்கிறார்..?
ஆரம்பத்திலிருந்தே நாகேஷ் ஃபேமிலியோடு பழக்கம் உண்டு. அந்த மகா கலைஞனோடு இருந்த சந்தர்ப்பங்கள்அதிகம். வாழ்க்கையின் முக்கியமான சந்தோஷங்களா அதை ஞாபகத்தில் வைச்சிருக்கேன். எனக்கு எப்பவும் நாகேஷ், அவரோடு குரு ஜெர்ரி லூயிஸ்தான் ஃபேவரிட்ஸ். இந்தப் படத்தில் சந்தானத்திற்கு பக்க பலமாக ஒரு கேரக்டர் இருக்கு. மிக முக்கியமான ரோல். எத்தனையோ பேரை பார்த்தும் மனதில் டிக் விழலை.

அப்புறம் ஆனந்த்பாபு பையனை பார்க்கலாம்னு நினைச்சு கிளம்பினேன். அவர்கிட்ட சொன்னப்போ ‘டேய், இரண்டாவது பயல நீ பார்த்து ரொம்ப நாளாச்சே, பாரு’னு சொல்லிக் கூப்பிட்டார். நான் ஒரு சின்ன டெஸ்ட் ஷூட் எடுத்திடலாம்னு ஒரு கேமராவோடு போயிருந்தேன். தலைப்பைச் சொன்னதும் ‘தாத்தா தலைப்பு... நான் ெரடி’ன்னு அப்படியே நாகேஷ் உருவத்தோடு, அதே ஜெர்க்கோடு உட்கார்ந்தார். அப்படியே நாகேஷின் ஜெராக்ஸ். அதே பார்வை, தோற்றம், பேச்சு, ஸ்டைல் எல்லாம்.. எனக்கென்னவோ நாகேஷ் அவர்களையே டெஸ்ட் ஷூட் எடுக்க வந்த மாதிரி இருந்தது. ‘நீங்க செலக்ட் ஆகிட்டிங்க’ன்னு சொல்லிட்டு அப்படியே கேமராவை எடுத்துக்கிட்டு திரும்பிட்டேன்.

‘காமெடி’க் கதைன்னு நினைச்சோம்...
கொஞ்சம் அடர்த்தியான கதை. கதையில் நிறைய லொகேஷன்ஸ் வருது. ஒரு காலேஜ் பேக்ரவுண்ட், கிராமம், கோவா, துபாய்னு நம்பகத்தன்மையோடு பொருத்தமா வருது. ஒரு நல்ல நடிகனாக உள்ளுக்குள் உருவாகியிருந்தால் தவிர, இந்த கதையைச் சொல்லும்போது புரிந்து கொள்வது கடினம். சந்தானம் உடனே சரி சொன்னார். ஆச்சர்யம் என்னன்னா முதலில் கதை சொன்னதும் ஓகேன்னு சொன்னவரை, மறுபடியும் பிடிக்க முடியலை.

ஏதோ சில சிக்கல்கள்... தொடர்புக்குள் வரலை. அப்புறம் நம்பர் கிடைச்சு அவரோடு பேசினால் ‘எங்க பாஸ் போனீங்க? உங்களை தேடிக்கிட்டே இருக்கேன். நம்பர் மிஸ் ஆகிவிட்டது. உடனே கிளம்பி வாங்க’னு கூப்பிட்டார். போனால் ‘உடனே ஆரம்பிக்கலாம்’னு பச்சைக்கொடி காட்டிட்டார். சில கதைகளுக்குன்னு ஒரு பவர் இருக்கு. எங்கே சுத்தியும் அது சரியானவங்ககிட்டே வந்து சேர்ந்திடும். படத்தில் 14 கேரக்டரும் என் கதைப்படியே அமைஞ்சிருக்காங்க. என் கணக்கிலிருந்து எதுவும் தப்பாமல் என் கைக்குள் வந்தது படம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது காமெடிப் படம்னு நினைக்கிறவங்க வந்து பார்த்தால் இதில் இருக்கிற எமோஷன், சென்டிமென்ட், டிராமா, ஜனரஞ்சகத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு போயிடுவாங்க.

யார் ஹீரோயின்..?
எனக்கு பிடிக்கிற வரைக்கும் தேடல் தொடர்ந்தது. கடைசியில் வைபவி சாண்டில்யா. மராத்தி ஸ்டேஜ் ஆர்டிஸ்ட். தமிழில் வசனங்களை எழுதிக் கொடுத்து நடிக்கச் சொன்னால் ஒரே மூச்சில் பின்னி எடுக்குது. ‘மாரி’யில் அடிதாங்கின்னு ஒரு பையன் வருவாரே, அவர்தான் இதில் ஹீரோவுக்கு பக்கபலமான காமெடியன். பிஜேஷ் நாகேஷின் நடனம் அப்படியே அவங்க தாத்தாவை உரிச்சு வைச்சிருக்கு.

இசைக்கு சந்தோஷ் நாராயணன்... காம்பினேஷன்ஸ் பரபரக்குதே...
‘கபாலி’ நடந்துக்கிட்டு இருக்கும்போதுதான் கதை சொன்னேன். உடனே ஓ.கே. சொல்லிட்டு, விருப்பமாக ட்யூன்கள் போட்டுக் கொடுத்தார். ஐந்து பாடல்கள் சும்மா அள்ளுது. கேமரா பி.கே. வர்மா. களம் தெரிஞ்சு வேலை பார்க்கிறவர். தேர்ந்தெடுக்கிற வண்ணங்களில் அவ்வளவு அழகு. ‘அட்ட கத்தி’, ‘குக்கூ’, ‘அடங்காதே’, ‘கூட்டத்தில ஒருத்தன்’னு அவர் செய்கிற படங்கள் எல்லாமே வேற வேற தினுசு. அவருக்கு சுதந்திரம் கொடுத்திட்டா, படத்தை தூக்கி சுமக்கிறார். நினைவில் நிறுத்தி வைச்சுக்கிற படமாக ‘சர்வம் சுந்தரத்’துக்கு நிச்சயம் இடம் இருக்கு.    
Behind the Scenes

* இயக்குநர் ஆனந்த் பால்கி இதற்கு முன் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. குறும்படமும் எடுத்ததில்லை.
* கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘பாறை’ படத்தில் இரண்டாவது கதாநாயகனாகவும், மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யாவுக்கு நண்பனாகவும் பால்கி நடித்திருக்கிறார்.
* கோவா, துபாய் என பல லொகேஷன்களில் எடுத்திருப்பதால் இப்போதைக்கு சந்தானத்தின் பெரிய பட்ஜெட் படம் இதுதான்.
* ‘கபாலி’க்கு இடையில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த படம் இது மட்டும்தான்.