சிங்கம் 3 விமர்சனம்
-குங்குமம் விமர்சனக்குழு
ஆப்ரிக்கா போன ‘சிங்க’த்தை ஆர்ப்பாட்டமாக ஆந்திராவிற்கு அனுப்பி வைத்தால் எப்படியிருக்கும்..? அதுதான் ‘சி3’. ஆந்திர போலீஸால் எதுவும் செய்ய முடியாத ரெட்டியை கண்ணி வைத்து பிடிக்க துரைசிங்கம் அனுப்பப்படுகிறார். அங்கே போய் இறங்கும் சூர்யா, தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி ரெட்டியை கட்டுப்படுத்தும் கெட்டி ஆபீஸர் ஆகிறார். அடிதடி, துடிக்கும் துப்பாக்கியோடு சுற்றுச்சூழலையும் சேர்த்து பாதுகாத்து மீண்டும் அமைதியைக் கொண்டுவருகிறார்.
காரசார மசாலாவை சரிவிகிதத்தில் கலக்கும் காக்கி கதையை மணமணக்க பரிமாற டைரக்டர் ஹரியை விட்டால் வேறு ஆளே இல்லை. அடிதடி ரணகளங்கள், பறக்கும் டாடா சுமோக்கள், ஆக்ஷன் சரவெடிகள், சவால், சவடால், காதல், குடும்ப சென்டிமென்ட் என ஹரியின் அத்தனை அமர்க்களங்களும் இதில் உண்டு. புகைபிடித்தலின் எச்சரிக்கைக்குப் பிறகு காது கொள்ளாத சத்தமும், நிற்கவே நேரம் இல்லாத வேகமும் உண்டு.
மாற்றுக் குறையாமல் துரைசிங்கமாக இப்பவும் செம ஸ்கெட்ச் அடித்திருக்கிறார் சூர்யா. அந்த கோபமும், வேகமும் வீரமும், அடிக்கிற அடியும், எதிரிகளைத் துவைத்தெடுக்கிற அழகும் கச்சிதம். துரைசிங்கம் அவதாரத்திற்கு இஞ்ச் பை இஞ்ச் உழைத்திருக்கிறார். அவரின் உடல்மொழியின் அதிரடி ‘சிங்கம் 3’ வரைக்கும் வந்திருப்பதுதான் அதிசய ஆச்சர்யம்!
இந்தத் தடவை ஹன்சிகாவிற்கு பதில் ஸ்ருதிஹாசன்! சூர்யாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். தமிழ் உச்சரிக்கும்போது கொஞ்சம் சுத்தபத்தமாக இருந்தாலே போதும், மற்றபடி கவர்ச்சியின் பக்கங்களை சும்மா அள்ளி நிரப்புகிறார். மறுபடியும் அனுஷ்கா. அந்த பாந்த முகமும், அழகுமாய் வெயிட் போட்டாலும் கவர்கிறார். ஆனாலும் இந்தத் தடவையாவது அனுஷ்காவுக்கு சூர்யாவோடு கல்யாணமும், ஹனிமூனும் முடிந்தது சந்தோஷமே.
சரத் சக்சேனாவை சூர்யா களையெடுக்கும் ஆபரேஷன் பரபரப்புக் காட்சிகள் சுறுசுறு, விறுவிறு. ஒட்டு மொத்த கோபத்தையும் ஒன்று திரட்டி திருப்பித் தாக்குமிடத்தில் இரண்டு பேருமே மிரள வைக்கிறார்கள். பயங்கர உயரத்தில் அனுப் தாக்கூர் சிங் சூர்யாவுக்கு டார்ச்சர் கொடுப்பதில் முன்னணியில் நிற்கிறார். அந்த இரும்பு உடம்போடு சூர்யாவுடன் மோதும் ஆக்ஷனில் பொறி பறக்கிறது.
உடம்பை முறுக்கித்திரிகிற அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிற ஸ்மார்ட் வில்லன். சூரி, ரோபோ சங்கர், ஷாம்ஸ் மூவரும் சிரிப்பு மூட்டுகிறார்கள். வழக்கம்போல வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்கிற டைப்தான் சூரிக்கு. ராதிகா இரண்டு சீனில் வந்துவிட்டு போகிறார். நாசரும், ராதாரவியும் இரண்டு நிமிட காட்சிகளோடு விடை பெறுகிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையா இது! பாடல்களில் இளைப்பாறிக் கொள்ளலாம். பின்னணி இசை சரியான பரபரப்பு! ப்ரியனின் கேமரா எல்லா கோணங்களிலும் பரபரப்பூட்டுகிறது. வெளிநாட்டு லொகேஷன்கள் கலர்ஃபுல் ட்ரீட். வி.டி. விஜயன் - ஜெய் எடிட்டிங் எக்ஸ்பிரஸ் வேகம். சுற்றுச்சூழல் பாதிப்பு, அதன் அரசியல், அதனால் அப்பாவிகள் பலிகடாவாவதை இன்னும் இறுக்கியிருக்கலாம். மூன்றாவது முறையும் முறுக்கேற்றுகிறது,‘சிங்கம்’.
|