ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 12

இளவயது முதலே தெருக்கூத்திலும் மேடைப் பேச்சிலும் ஆர்வம் கொண்டிருந்த அண்ணன் தம்பி ராமையா ‘மைனா’ மூலமே தன் மொத்தத் திறனையும் உலகுக்குத் தெரிவிக்க காத்திருந்தார். தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் உளி அவருக்குக் கிடைத்தது. ஆனாலும், கடந்துவந்த காலங்களில் அவர் கல்லாயிருக்கவில்லை. வெவ்வேறு வகைகளில் தன்னை செதுக்கிக் கொண்டிருந்தார். எதுவாக என்பதில் அவருக்கு குழப்பம் இருந்திருக்கலாம். தாமதப்பட்டாலும் இலக்கை அடைந்திருக்கிறார்.

‘மைனா’வின் ஆகச்சிறந்த பெருமைகளில் ஒன்று தம்பி ராமையா. அவர் ஏற்று நடித்த பாத்திர வடிவமைப்பு விசேஷமானது. கிளைச்சிறை காவலர்களின் மனக்கொதிப்பையும் கொந்தளிப்பையும் அதற்கு முன் வெளிவந்த எந்த படங்களும் இத்தனை நேர்த்தியுடன் சொல்லவில்லை. அப்பாத்திரத்தில் அவரைத் தவிர வேறுயாருமே பொருந்தியிருக்கமாட்டார்கள் என்று இப்போது நம்பலாம்.

உண்மையில், செந்தாமரை என்ற கதாபாத்திரம் திரையில் காட்டப்படவே இல்லை. ஆனாலும், அண்ணன் தம்பி ராமையா உதிர்க்கும் சொற்களின் வாயிலாக, அப்படி ஒருவரை நம்மால் உருவகிக்க முடிந்தது. வாழ்வின் அனுபவங்களிலிருந்து உரம்பெற்ற ஒருவர் வெளிப்படுத்தும் அற்புதமான உணர்வுகளை வெகு இயல்பாக அவர் காட்டியிருந்தார். அண்ணன் தம்பி ராமையா எப்போதும் கதைகளோடு இருப்பவர். சொல்வதற்கு அவரிடம் ஏராளமான செய்திகளிருக்கும்.

‘ஒருமுறை இப்படித்தான் தம்பி...’ என்று அவர் ஆரம்பித்தால் அதை வைத்து நாலைந்து திரைப்படங்கள் எடுக்கத்தக்க சம்பவங்களை பெற்றுக்கொள்ளலாம். அவர் ஓர் இடத்தில் அமர்ந்திருந்தால் அந்த இடமே கதைகளால் நிரம்ப வழியும். அவருக்கே உரிய கலகலப்புடன் ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்து, நவரசங்களையும் கொட்டிவிடுவார். அவர் உரையாடலில் மிகுதியும் வாழ்வு குறித்த கேள்வியிருக்கும். கொஞ்ச காலம் சிறையிலும் இருந்த அனுபவம் அவருக்குண்டு.

அதுகுறித்தும், அதிலிருந்து அவர் மீண்டது குறித்தும் எந்தத் தயக்கமும் இல்லாமல் எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவர் வாழ்வை மிகப் பூரணமாக உணர்ந்த தருணங்களாக அவற்றைக் கருதுவார். மாட்சிமை தங்கிய நீதித்துறையைத் தாண்டி ஒருவர் வெளியே வர, நிறைய உண்மையும் மனோதிடமும் தேவையென்பதை சொல்லியிருக்கிறார்.

நடிப்பார்வத்தோடு ஒருவர் சென்னைக்கு வருவதும் வாய்ப்புப் பெற்று நட்சத்திரமாவதும் பெரிய விஷயமில்லை. வெவ்வேறு வேலை செய்து, வாழ்வொன்றும் கனவொன்றுமாக இருந்து வெளிச்சம் பெறுவதுதான் அரிது. ஒருகாலம் வரை அவர் பரபரப்பான மேடைப் பேச்சாளர். எவ்வளவு பேருக்கு தெரியுமோ தெரியவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மேடையில் அவர் சிறப்புரையாளராக தமிழகத்தின் பல ஊர்களுக்குப் பயணித்திருக்கிறார்.

அடுக்கடுக்காக அவர் பேசும் அரசியல் விஷயங்கள் வேறு எந்த கழகப் பேச்சாளர்களுக்கும் குறைந்ததில்லை. ‘எல்லாமே அனுபவந்தான் தம்பி...’ என்று அவர் வார்த்தைக்கு வார்த்தை சொல்லும்போது ஒரு மூத்த சகோதரனுக்கு உரிய அக்கறையிருக்கும். புகாரில்லாமல் வாழ்வை எதிர்கொள்ளும் ஒருவரால்தான் அனுபவங்களை பெறமுடியும். அந்தவிதத்தில் அண்ணன் தம்பி ராமையா அதிர்ஷ்டசாலி. ஹோட்டல் மேலாளர், உதவி இயக்குநர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என பல அவதாரங்களை அவர் எடுத்திருந்தாலும் இறுதியில் நின்று நிலைபெற்றிருப்பது நடிப்பில்.

முதலிலேயே நடிப்புத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே எனக் கேட்டால், ‘எனக்குக் காலம் கடந்துதானே எல்லாமே கிடைத்தன’ என்பார். ‘மைனா’ திரைப்பட வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்த பொழுது மாதத்தில் ஒருமுறையோ இருமுறையோ அவரை சந்தித்து அளவளாவும் வாய்ப்பிருந்தது. நம்முடைய நாட்டார் கதைகளைப் பற்றி அவருடன் பேசத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது.

அவராகவே சில சிலேடைகளை உருவாக்குவார். அடிப்படை தமிழர் மரபு குறித்த தெளிவோடு எதையும் அணுகக்கூடிய அவரது அரசியல் பகடிகள் அபாரமானவை. உலகமே இன்றைக்கு பகடி செய்து சந்தோசப்படும் பல வசனங்கள், எளிய மனிதர்களிடமிருந்து எப்படி எடுத்தாளப்பட்டன என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் ஒப்புக்கொள்வார். ‘டணால்’ தங்கவேலு, பாலையா, நாகேஷ், சந்திரபாபு என அக்காலத்திய நகைச்சுவை நடிகர்களின் சாராம்சங்களை ஒரு ரசிகராக அவர் வியந்து பேசுவது குறிப்பிடத்தக்கது.

கலைவாணர் என்.எஸ்.கே.யின் கலை பங்களிப்பையும் கருத்துச் செறிவையும் அவர்போல உள்வாங்கிக் கொண்ட இன்னொரு நடிகரைக் காண முடியாது. இன்றைக்கு வெளிவரும் பல படங்களில் கதாநாயகனுக்கோ கதாநாயகிக்கோ தந்தையாக நடிக்கிறார். இயக்குநர்கள் விரும்பித்தரும் எந்த பாத்திரத்தையும் ஏந்திக்கொள்பவராக இருக்கிறார். ஆனால், ‘மைனா’ சமயத்தில் அப்படியில்லை. அதற்கு முன் வெளி உலகுக்கு அவர் அவ்வளவாக அறியப்படவில்லை.

‘மலபார் போலீஸ்’ என்னும் திரைப்படத்தில் முதல்முதலாக சிறிய பாத்திரமேற்று நடித்தபொழுது இத்துறையில் இத்தனை உயரத்திற்கு வருவோமென்று நானே எண்ணவில்லை என்றிருக்கிறார். ‘மைனா’வில் இடம்பெற்ற ‘ஜிங்கி ஜிங்கி...’ என்னும் பாடலை பிரபுசாலமன் தவிர்க்கலாம் என்றபோது படத்தின் வியாபாரத்திற்கு உதவுமென்று ஓங்கிச் சொன்னவர்களில் அண்ணன் தம்பி ராமையாவும் ஒருவர்.

‘மைனா’ திரைப்படத்தில் பேருந்து கவிழும் காட்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்தக் காட்சியில் உயிரை பணயம் வைத்து அவர் நடித்துக் கொடுத்ததை பிரபுசாலமன் பெருமைபட கூறாமல் இருப்பதில்லை. போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள பொருளாதார பலமில்லாத சிறிய படமொன்றில் ஆபத்து நேர்ந்துவிட்டால் அதன்பின் அந்தப் படக்குழுவினர் தலையெடுக்க முடியுமா? எது நடந்தாலும் பரவாயில்லை என துணிந்த அந்த துணிச்சலால்தான் அண்ணன் தம்பி ராமையா இன்று பாராட்டப்படுகிறார்.

‘கும்கி’யிலும்கூட இப்படியான சவால்களை அவர் எதிர்கொள்ள நேர்ந்தன. கோமாளி யானையை கும்கி யானையென்று பொய் சொல்லி ஊருக்குள் தங்கிவிட்ட பிற்பாடு, உண்மை வெளிப்படாதிருக்க அவர் செய்யும் சேஷ்டைகளை ரசிகர்கள் வரவேற்றார்கள். மதங்கொண்ட யானையை அடக்குவதற்கு கும்கி யானை பயன்படுத்தப்படும். கும்கி யானை என்றால் பயிற்சிப்படுத்தப்பட்ட யானை என்ற தெளிவை பலருக்கும் அத்திரைப்படமே ஏற்படுத்தியது.

‘கும்கி’ திரைப்படத்தில் காட்டிய கோமாளி யானைக்கும் படப்பிடிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கையில் மதம் பிடித்தது. பொதுவாக யானைக்கு மதம் பிடிப்பது தவிர்க்க முடியாதது. அது கோயில் யானையாயிருந்தாலும் சரி, காட்டு யானையாயிருந்தாலும் சரி. வருடத்தில் மூன்று மாதங்கள் எல்லா யானைகளுக்கும் மதம் அல்லது மஸ்து ஏற்படும். அந்த நேரத்தில் அது பாகனென்றோ பார்வையாளனென்றோ பார்க்காது. யாராயிருந்தாலும் முட்டித்தள்ளி ஒருவழி பண்ணிவிடும்.

ஏறக்குறைய படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் மாணிக்கம் என்ற பெயருடைய படப்பிடிப்பு யானைக்கும் மஸ்து ஏற்பட்டது. மஸ்து ஏற்பட்டுவிட்டது என்பதால் படப்பிடிப்பை ரத்து செய்யவும் இயலாது. ஓரிரு காட்சிகள் பாக்கியிருப்பதால் படப்பிடிப்பை நடத்தியே ஆகவேண்டிய நிலை. ஒருமுறை படப்பிடிப்புக்கு யானையை அழைத்து வருவதென்றால் மூன்று மாநிலங்களில் அனுமதி பெறவேண்டும். விலங்குகள் நலவாரிய அனுமதியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

யானையை சமாளிப்பதைவிட அவர்களைச் சமாளிப்பதுதான் கஷ்டத்திலும் கஷ்டம். படப்பிடிப்பு தொடர்ந்தது. மாணிக்கம் எப்போது வேண்டுமானாலும் சீறலாம். மஸ்து ஏற்பட்ட யானைக்கு அருகில் போவதே ஆபத்து. அப்படியிருக்கையில், அதில் அமர்ந்து நடிப்பதென்றால் அதுவும் நகைச்சுவையை வரவழைக்க வேண்டுமென்றால் எத்தகைய சவாலென்று யோசித்துக் கொள்ளுங்கள். ஆனால், தம்பி ராமையா அதை அநாயாசமாக செய்துகாட்டினார்.

பிரபுசாலமன் முதல் படத்தில் வாழ்வை கொடுத்துவிட்டு அடுத்த படத்தில் அதைப் பறித்துக் கொள்ள எண்ணுகிறாரா? என ஹாஸ்யமாகப் படப்பிடிப்புத் தளத்தில் அண்ணன் தம்பி ராமையா உதிர்த்த சொற்கள் நகைச்சுவையல்ல. ‘சாட்டை’, ‘கழுகு’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ஆகிய திரைப்படங்களிலும் தனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருப்பார். ‘கும்கி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில், ‘நடிக்க நீங்கள் பட்ட கஷ்டங்களைப் பற்றிக் கூறுங்கள்’ என்றதும் ‘படவேண்டிய கஷ்டத்தையெல்லாம் நான் நடிப்பதற்கு முன்பே பட்டுவிட்டேன்’ என்று அவர் பகிர்ந்துகொண்டது பக்குவத்தின் திரட்சி.

ஏன் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் மலையாளத்தைப் போலவோ பெங்காலைப் போலவோ கொண்டாடப்படுவதில்லை? நாயக வழிபாட்டை திரையிலும் அரசியலிலும் விரும்பக்கூடிய நாம், இரண்டாம்கட்ட மூன்றாம்கட்ட பங்கேற்பாளர்களை அவ்வளவாக ஆராதிக்க விரும்புவதில்லை. ஒருவர் தன்னிடமுள்ள திறமையை, ஆற்றலைத் தயக்கமில்லாமல் வெளிப்படுத்தினாலும் அதை உரியவிதத்தில் கெளரவிக்கவோ மதிப்பளிக்கவோ தயங்குகிறோம்.

ஒரு திரைப்படத்தில் குணச்சித்திர நடிகர் தனித்து தெரிந்தாலும், அந்தப்படம் அதில் பிரதான வேடமேற்ற நடிகனுடைய படமாகவே பார்க்கப்படுகிறது. பாலையாவையும் நாகேஷையும் விட்டுவிட்டால் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் இல்லை. ஆனால், அத்திரைப்படத்தை நாம் ரவிச்சந்திரன் நடித்த படமாகவோ ஸ்ரீதர் இயக்கிய படமாகவோ பார்க்கிறோமே தவிர, நாகேஷின் படமாகப் பார்ப்பதில்லை. நம்முடைய பார்வைப் பிழையினால் நாம் தவறவிட்ட இன்னொரு முக்கியமான நடிகை மனோரமா.

ஆயிரம் படங்களுக்குமேல் அவர் நடித்திருக்கிறார். சினிமாவின் ஆரம்ப சகாப்தத்திலிருந்து அவருடைய பங்களிப்பு இருந்துவந்திருக்கிறது. என்றாலும், அவர் பெற்றிருக்கும் பெருமையும் அடையாளமும் குறைவுதான். அந்தப் பாத்திரத்திற்கு அவர் பொருந்துவாரா? என ‘மைனா’ சமயத்தில் யோசிக்க வைத்த அதே அண்ணன் தம்பி ராமையா, எந்தப் பாத்திரத்திற்கும் பொருந்தக் கூடியவராக தன்னை நிரூபித்திருக்கிறார். இன்றைக்கு வெளிவரும் பல படங்களில் அவர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுவருகிறார்.

பிரதான நடிகர்களும் இயக்குநர்களும் விரும்பக்கூடிய ஒருவராக மாறியிருக்கிறார். இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததல்ல. காலமும் வயதும் கடந்து கொண்டிருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் இயங்கியதால் விளைந்தது. தேசிய விருது பட்டியலில் இன்னும் சிலமுறையாவது அவர் பெயர் இடம்பெறும் வாய்ப்பிருப்பதாகவே எனக்குப் படுகிறது. மலையாள நடிகர்களான திலகனையும் நெடுமுடு வேணுவையும் நினைவூட்டக்கூடிய அண்ணன் தம்பி ராமையாவை இப்போதைய தமிழ் சினிமாவும் இயக்குநர்களும் கூடுதல் கவனத்தோடு கையாள வேண்டும்.

தன்னிடமுள்ள திறனையெல்லாம் அவர் காட்டிவிட்டார். ஆனாலும்கூட, அவரை இன்னும் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசும் நகைச்சுவை நடிகராகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த அண்ணனும் தனக்கு பெருமை சேர்க்காத பாத்திரங்களைத் தவிர்க்கலாம். அவரே ஒருமுறை சொன்னதுதான், ஒரு கலைஞன் வேண்டும் என்பதைவிட வேண்டாம் என்பதில் குறியாயிருக்க வேண்டும்.

பொருந்துகின்றன என்பதால் எல்லா பாத்திரங்களையும் ஒருவர் ஏற்கத் துணிந்தால், தான் யார் என்னும் அடையாளம் அடிபட்டுவிடும். ‘தம்பிக்கு முரட்டு வணக்கம்’ என்று உரையாடலை ஆரம்பிக்கும் அண்ணனுக்கு, எளிய இப்பதிவை பதில் வணக்கமாக செலுத்துவதும் அன்புதான். பாகனின் வருடலில்தான் யானையின் பலமிருக்கிறது. நான் பாகன்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்