ரத்தத்துக்கு பயந்தவன் அரசனாக முடியாது!
-மை.பாரதிராஜா
எம் மேல கை வச்சா காலி அறுந்துறுன்டா உன்னோட தாலி மரம் செத்தா நாற்காலி நீ செத்தா இடம் காலி செக்காலி தக்காளி காலி...
- நா.அண்ணாமலையின் வரிகளை உச்சி மண்டையில் சுர்ரென எகிற வைக்கிற வாய்ஸில் ஹேமச்சந்திரன் எனர்ஜியாக பாட... தன் செல்போனில் ஆடியோ வால்யூமை அதிகரித்தபடி புன்னகைக்கிறார் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநர் ஜீவா சங்கர். இசையமைப்பாளராக நான்கு சுவர்களுக்குள் அடங்கியிருந்த விஜய் ஆண்டனியை ‘நான்’ படம் வழியே நடிகராக்கியவர், இப்போது ‘எமன்’ மூலம் அதே விஜய் ஆண்டனிக்கு கமர்ஷியல் கதவை திறந்துவிட்டிருக்கிறார்.
‘‘‘நான்’ கொடுத்த ரெஸ்பான்ஸ்ல ‘நாம மறுபடியும் ஒரு படம் பண்ணலாம் சங்கர்’னு விஜய் ஆண்டனி சொன்னார். இடைல அவர் சில படங்கள்ல நடிச்சார். ‘அமர காவியம்’ படத்தை அதுக்குள்ள நானும் இயக்கி முடிச்சேன். இதோ ரெண்டு பேரும் திரும்ப கைகோர்த்திருக்கோம். இந்தப் படத்தை ‘லைகா’வும் இணைந்து தயாரிக்கறாங்க. அதனால ராஜுமகாலிங்கம் சார்கிட்டேயும் கதையை சொன்னேன். ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டார். இந்தப் படத்தோட டைட்டிலை அவருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன். அப்ப அவர் சிவன் கோயில்ல இருந்திருக்கார்.
அதனால சென்டிமென்ட்டாவும் அவருக்கு தலைப்பு பிடிச்சுப் போச்சு. ஏன்னா, சிவனோட ஓர் அவதாரம்தானே எமதர்ம ராஜா! கடவுளே குறுக்க வந்தாலும் தன் கடமையைத் தவறாதவர் எமன். குற்றம் செய்தவங்க யாரா இருந்தாலும் தண்டிப்பார். அப்படியொரு பெருமைக்குரியவர் எமன். கோடம்பாக்கத்துலதான் ‘ஏன் இப்படி டைட்டில் வச்சிருக்கீங்க’னு கேட்கறாங்க.
டோலிவுட்ல அப்படியில்ல. அங்கே ‘யமலீலா’, ‘எம தொங்கா’னு எமன் பெயர் வச்ச படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கு...’’ என புன்னகைக்கிறார் ஜீவா சங்கர். ‘‘முதல்முறையா விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடிச்சிருக்கார். டீஸர்ல ஒரு டயலாக் வரும். ‘ரத்தத்துக்கு பயந்தவன் அரசன் ஆகமுடியாது. இங்கே ரத்தக் கறை படியாத அரசன் யார் இருக்கா’னு கேட்பார். படத்தோட கான்செப்ட் அதான்.
மக்கள் பார்வைல அரசியலை பேசுற படங்கள் நிறைய வந்திருக்கு. இந்தப் படம் ஓர் அரசியல்வாதியின் பார்வைல நகரும். நீங்க யோசிக்கற மாதிரி எந்த சீனும் இருக்காது. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் கொடுத்திருக்கேன். ‘ரஜினி, சிரஞ்சீவி மாதிரி பிரமாண்ட படங்கள் தயாரிச்சாலே போதும்’னு ‘லைகா’ நினைச்சிருந்த டைம்லதான் இந்தக் கதைய சொல்லப் போனேன். அரை மணி நேரம் கேட்டுட்டு ‘பிடிக்கலை’னு அனுப்பிடலாம்னு ராஜுமகாலிங்கம் சார் நினைச்சிருந்தார்.
ஆனா, கதையை சொல்ல ஆரம்பிச்சதும், நான் ஸ்டாப்பா ஆச்சரியப்பட்டு, ‘உடனே பண்றோம்’னு வாக்கு கொடுத்தார். விஜய் ஆண்டனி தவிர, தியாகராஜன் சார், சங்கிலி முருகன் சார், சுவாமிநாதன், சார்லினு கதைக்கு பொருத்தமான நட்சத்திரங்கள் இருக்காங்க...’’ என்கிறார் ஜீவா சங்கர்.
விஜய் ஆண்டனி புது லுக்ல அசத்துறாரே..? ஆமா. முறுக்கு மீசை, வித்தியாசமான தாடினு அசத்தலான லுக்ல மாத்தியிருக்கோம். ‘நான்’ல மியூசிக் டைரக்டராக இருந்து நடிக்க வந்ததால, ரொம்பவே கூச்சப்படுவார். இப்ப பிச்சு உதறுறார். சென்னை கடல்ல நடக்கற ஒரு சீன். அதை பாண்டிச்சேரி கடல்ல ஷூட் பண்ண போனோம். காலைல ஏழு மணிக்கே கடலுக்குள்ள போயிட்டோம். உச்சி வெயில் தாண்டியும் ஷூட் போச்சு. ஒரு கட்டத்துல கடல் ஒத்துக்காம வாமிட்டிங் பண்ணி, டயர்ட் ஆனார். ஆனாலும், அதை கொஞ்சமும் வெளிக்காட்டாம சீனை முடிச்சுக் கொடுத்தார்.
‘கடவுள் எழுதும் கவிதை’ பாடலுக்காக ஜார்ஜியா போனோம். ‘ஹீரோயின் மியாவே ஆடட்டும்... நான் அப்படியே சைடுல நடந்து வர்றேன் சங்கர்’னு சொன்னார். ‘கண்டிப்பா நீங்க டான்ஸ் பண்றீங்க. கமர்ஷியல் ஹீரோனா பிரமாதமா டான்ஸ் ஆடித்தான் ஆகணும்’னு சொன்னேன். செரீஃப் மாஸ்டர்கிட்ட உடனே ரிகர்சல் எடுத்து பிச்சு உதறியிருக்கார்.
மியா ஜார்ஜ் உங்க அறிமுகம் ஆச்சே? ‘அமரகாவியம்’ல அவங்க அழகான முகம் பேசப்பட்டுச்சு. அதன்பிறகு அவங்களுக்கு அமைஞ்ச சரியான கதை இதுதான்னு கண்டிப்பா சொல்ல முடியும். இதுல நடிகையாகவே வர்றாங்க. ‘மக்காயலா...’ பாடல் மாதிரி இதுலேயும் ஒரு பாடல் இருக்கு. ‘டமாலோ டுமீலோ’னு. மும்பையில எடுத்திருக்கோம். அதுல மியா ஃபாஸ்ட் டான்ஸ்ல அசத்தியிருக்காங்க. பேஸிக்காவே நான் ஒரு ஒளிப்பதிவாளர். ஜீவா சாரோட அசிஸ்டென்ட். அதனால ரெண்டு வேலைகளை ஒரே நேரத்துல பண்றதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். படத்துக்கு நானே ஒளிப்பதிவும் பண்ணியிருக்கேன்.
என்ன சொல்றார் தியாகராஜன்? ரொம்ப முக்கியமான ரோல் பண்ணியிருக்கார். இந்தப் படத்துக்காக அவரை நடிக்க வைக்கலாம்னு நினைச்சப்போ, ‘அவர் பிஸினஸ்ல இப்போ கவனம் செலுத்துறார். மறுபடியும் நடிக்க வரமாட்டார்’னு சொன்னாங்க. ‘நான்’ படத்தோட இந்தி ரைட்ஸ் அவர்கிட்ட இருந்ததால, அவரை ஈஸியா பிடிச்சிட்டேன். கதையை கேட்டதும் உடனே நடிக்க சம்மதிச்சார்.
ரெண்டாவது நாள் ஷூட்டிங் அப்போ, ‘சங்கர் இந்தப் படம் பத்தி எனக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷன் தோணுது’னு கூப்பிட்டு பாராட்டினார். அறிமுக நடிகர் மாதிரி ரொம்பவே ஆர்வமா உழைச்சிருக்கார். டப்பிங் அன்னிக்கு அவருக்கு ஜலதோஷம். நேர்ல வந்து ‘கோல்டா இருக்கு சங்கர்... இதை நேர்ல உங்ககிட்ட சொல்லிடணும்னு கிளம்பி வந்துட்டேன்’னு சொன்னார். அந்தளவுக்கு டெடிகேடட் பர்சன்.
Bhind The Scenes
* ஸ்கிரிப்ட்டில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குநர். கிட்டத்தட்ட 14 மாதங்கள் இதற்காக உழைத்திருக்கிறாராம். * 75 நாட்கள் திட்டமிட்டு 72 நாளில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். * பாண்டிச்சேரியில் ஜெயில் செட் அமைத்து, சென்னையில் நடப்பது போல எடுத்துள்ளார்கள். * விஜய்ஆண்டனி - மியா ஜார்ஜின் டூயட்டை ஜார்ஜியாவில் ஷூட் செய்திருக்கிறார்கள். * பின்னணி இசைக்காக மட்டும் 12 நாட்களுக்கு மேல் கவனம் செலுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
|