மாட்சிமைமிகு ஜனநாயக சோசலிசக் குடியரசு..!



மாமன்னரின் அறிவுரைகளை உண்டு
காலை பசியாறினோம்.
மாண்புமிகு அமைச்சர்களின் போதனைகளை
மதிய உணவாக்கிப் புசித்தானந்தித்தோம்
மகாகனம் பொருந்திய கனவான்களுக்கு
ஒரு பணிவான விண்ணப்பம்
கடும் பொய்களைத் தாங்கிக் கொள்ளாத
இலகு வயிறுடைய எம் குழந்தைகள்
வயிற்றுப் போக்கால் பேரவதி கொள்கிறார்கள்
இன்றிரவாவது ஆளுக்கொரு
தோசை வழங்கி ஆசீர்வதிக்கக் கூடாதா ?

பெருநகரப் பெருவாழ்வு..!

ஒவ்வொரு வீடுகளும்
வானளாவிய கோட்டைகளால் பிரிக்கப் பட்டிருக்கின்றன
அவற்றிடையே வெட்டப்பட்டிருக்கும் அகழிகளில்
பசித்த முதலைகள் கூர்பற்கள் மினுங்க வாய்பிளந்திருக்கின்றன
கண்காணிப்பு கேமராக்களில் ஒளிரும் கண்டிப்பு மிகு கண்கள்
சிப்பாய்களின் மிடுக்குடன் திகிலேற்றுகின்றன
உறைக்குத் தயிர்வாங்க பக்கத்துவீட்டுக் கதவைத் தட்டிய
கிராமத்துப் பாட்டியின் கைகளில் திணிக்கப்படுகிறது,
ஆலகால விஷம் கக்கும் வெறுப்புப் பார்வையும் ஒரு தயிர் டப்பாவும்.

-நிஷா மன்சூர்