விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 9

‘‘மாஸ்டர்...’’ பதட்டத்துடன் செல்போனில் அழைத்த ஆதியின் கண்கள் நிலைகுத்தி நின்றன. இருப்புக் கொள்ளவில்லை. இது எப்படி சாத்தியம் என்றும் புரியவில்லை. ஆனாலும் சூரிய ஒளியில் பளபளத்த ‘அந்த’ வாசகத்தின் மீதே அவன் பார்வை பதிந்திருந்தது. ‘‘சொல்லு ஆதி...’’ பன்னிரெண்டு ரிங்குக்கு பிறகு மாஸ்டரின் குரல் மறுமுனையில் அதே வாஞ்சையும் அன்புமாக எதிரொலித்தது. ‘‘இங்க அது இருக்கு...’’ ‘‘எது?’’ ‘‘அவிச்ச முட்டை. அது மேல...’’ மென்று விழுங்கினான்.

‘‘தயங்காம சொல்லு...’’ ‘‘ஒரு வார்த்தை எழுதப்பட்டிருக்கு...’’ ‘‘எந்த word?’’ ‘‘‘KVQJUFS’’’ மறுமுனையில் பதிலில்லை. மாஸ்டர் அதிர்ந்திருக்க வேண்டும். சாத்தியம்தான். நேரில் பார்த்த, தானே உறைந்து நிற்கும்போது கேட்டவர் மட்டும் எப்படி கொந்தளிக்காமல் இருப்பார்? செல்போனை இறுகப் பற்றியபடி அடுத்து அவர் பேசுவதற்காக காத்திருந்தான். இமைக்கவுமில்லை. கண்களை வேறு பக்கம் திருப்பவுமில்லை.

விநாடிகள் கடந்ததும், ‘‘நல்லா பார்த்தியா?’’ வாஞ்சையும் அன்பும் அற்ற மாஸ்டரின் குரல் அவன் செவியை அறைந்தது. ‘‘பார்த்துகிட்டே இருக்கேன்...’’ மென்று விழுங்கினான். ‘‘கையால எடுத்துப் பார்த்தியா?’’ ‘‘இல்ல...’’ ‘‘தொடாத...’’ வேகத்துடன் வந்த சொற்கள் குனிந்தவனை தடுத்து நிறுத்தியது. ‘‘அஞ்சு அடி பின்னால போ...’’ கட்டளைக்கு அடிபணிந்தான்.

‘‘முட்டைக்கு எதிர்பக்கம் திரும்பி நில்லு...’’ நின்றான். ‘‘இப்ப என்ன தெரியுது?’’ ‘‘ரோடு. நாற்கர சாலை...’’ அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக பறந்து கொண்டிருந்த வாகனங்களை பார்த்தபடி ஆதி பதில் சொன்னான். ‘‘அப்ப ரோட்டோரமாதான் இந்த அவிச்ச முட்டைய பார்த்தியா?’’ ‘‘ஆமா மாஸ்டர்...’’ ‘‘எந்த இடத்துல?’’ ‘‘தாராவையும் அந்த கண்ணாடி போட்ட இளைஞனையும் காரோட நான் எரிச்ச இடத்துல...’’  ‘‘நல்லா தெரியுமா?’’ ‘‘நூறு சதவிகிதம்...’’

‘‘அவிச்ச முட்டை அங்க இருக்கறது உனக்கு எப்படி தெரிஞ்சது?’’ ‘‘புனுகு வாசனை வந்தது...’’ ‘‘என்னது..?’’ ‘‘ஆமா மாஸ்டர். கார்க்கோடகரோட அஸ்தியை மயானத்துலேந்து நான் வாங்கினப்ப வந்த அதே புனுகு வாசனை...’’ ‘‘...’’ ‘‘இந்த இடத்துல... அதுவும் பட்டப்பகல்ல இந்த நறுமணம் எப்படி வரும்னு ஆச்சர்யமா இருந்தது...’’ ‘‘ம்...’’ ‘‘பைக்கை ஓரம் கட்டினேன். சரியா இதே இடத்துலதான் தாரா போன காரை அடிச்சு தூக்கினேன்னு புரிஞ்சுது...’’

‘ம்...’’ ‘‘பயம் வந்தது...’’ ‘‘ம்...’’ ‘‘படபடப்பை வெளில காட்டாம இறங்கினேன். ரோட்டோர சரிவுல அவிச்ச முட்டை கண்ணுல பட்டது. அது மேல...’’ எச்சிலை விழுங்கிய ஆதி, மவுனமானான். ‘‘‘KVQJUFS’னு எழுதியிருக்கறதை பார்த்த. அப்படித்தானே?’’ ‘‘ஆமா மாஸ்டர்...’’ ‘‘இதுலேந்து என்ன தெரியுது?’’ கேட்ட மாஸ்டரின் குரல் இயல்புக்கு வந்திருந்தது. அடையாளமாக வாஞ்சையும் அன்பும் மீண்டும் வழிந்தது. பதில் சொல்ல முற்பட்டவன், உடனே உதட்டைக் கடித்தான். தொண்டையில் சிக்கியதை எப்படி வெளிப்படுத்துவது?

‘‘தைரியமா சொல்லு ஆதி...’’ ‘‘நான்... நான்... தோத்துட்டேன் மாஸ்டர்...’’ சாலையில் மண்டியிட்டவன் அழ ஆரம்பித்தான். ‘‘முதல்ல அழுகையை நிறுத்து. இப்ப நீ வெறும் ஆதி இல்ல... அடுத்த மாஸ்டரா பதவி ஏற்கப் போறவன். கண்ணை துடைச்சுட்டு எப்பவும் எனக்குப் பிடிச்சா மாதிரி நிமிர்ந்து நில்லு...’’ கேவலை அடக்கியபடி எழுந்தவன் கால்களை அகற்றி நின்றான். கண்ணீர் மட்டும் கன்னத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.

‘‘நீ தோற்கலை ஆதி... முதல்ல அதை புரிஞ்சுக்க...’’ ‘‘என்னை சமாதானப்படுத்த அப்படி சொல்றீங்க மாஸ்டர்...’’ ‘‘அது மாதிரி சொல்லக் கூடியவனா நான்..?’’ ‘‘நிச்சயமா இல்ல... ஆனா...’’ ‘‘தாரா தப்பிச்சுட்டாளேனு சொல்றியா..?’’ செவியோரம் பதிந்திருந்த செல்போனை ஆதி இறுக்கினான். ‘‘ஆமா மாஸ்டர். இத்தனைக்கும் கார் எரியறதை ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன். சாம்பல்தான் மிஞ்சியிருக்கணும்...’’ ‘‘இதையும் மீறி எப்படி அவ உயிர்த்தெழுந்தான்னு யோசிக்கறதுதானே புத்திசாலித்தனம்?’’

‘‘ஆமா மாஸ்டர்...’’ ‘‘அப்புறம் ஏன் ‘நான் தோத்துப் போயிட்டேன்’னு சொல்ற?’’ ‘‘...’’ ‘‘உண்மைல நீ ஜெயிச்சிருக்க. இல்லைனா வலுவான சக்தி அவளுக்கு துணையா வந்திருக்குமா? மிகைப்படுத்தலை ஆதி. என் வாழ்க்கைல கூட இப்படியொரு சம்பவம் நடந்ததில்ல. இந்த அரிய வாய்ப்பு உனக்கு மட்டும்தான் கிடைச்சிருக்கு. எதை குறிப்பிடறேன்னு புரியுதா?’’ ‘‘...’’ ‘‘தாராவுக்கு ஆதரவா களம் இறங்கியிருக்கிற சக்தியைத்தான் சொல்றேன். அந்த சக்தி எதுன்னு நமக்கு தெரியாது. கூடிய சீக்கிரத்துல அதை கண்டுபிடிச்சிடலாம்.

நான் சொல்ல வர்றது வேற. எப்ப உன்னை சாதாரணமா எதிர்க்க முடியாதுன்னு புரிஞ்சுகிட்டு, தானே அந்த சக்தி களத்துல இறங்கியிருக்கோ... அப்பவே நீ ஜெயிச்சுட்டன்னு அர்த்தம். ஆமா ஆதி. வெல்ல முடியாதவன் நீ. இதைத்தான் இப்ப நடக்கிற நிகழ்ச்சிகள் எல்லாமே உணர்த்துது...’’ ‘‘...’’ ‘‘இல்லைனா அவிச்ச முட்டைல ‘KVQJUFS’னு எழுதியிருக்குமா? இது என்ன word? நம்ம ‘Intelligent Design’ அமைப்போட ரகசிய மந்திரம்.

இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட செப்புத் தகட்டை வைச்சுதான் இதுவரை நாலு கொலைகளை செய்திருக்க. எல்லாமே நம்ம அமைப்போட நன்மைக்காக. அந்த தகட்டோட எடை ஒரு கிலோ. தலைமுறை தலைமுறையா நாம பாதுகாத்துட்டு வர்ற அந்த ஆயுதத்துல இருக்கிற மந்திரச் சொல்... இப்ப அவிச்ச முட்டை மேல எழுதப்பட்டிருக்கு...’’ ‘‘...’’ ‘‘‘உங்க ரகசியம் எல்லாம் எனக்குத் தெரியும்’னு தாராவை பாதுகாக்கிற சக்தி நமக்கு சவால் விட்டிருக்கு. அந்த ஆணவம்தான் பகிரங்கமா ‘KVQJUFS’னு எழுத வைச்சிருக்கு. பயப்படாத.

கவலையும்படாத. பெயர் தெரியாம மறைஞ்சு இருக்கிற அந்த சக்தியை உன்னால அழிக்க முடியும். உன்னால மட்டும்தான் அதை வேரோட சாய்க்க முடியும். என்ன தெனாவெட்டா உன்னை ஒண்டிக்கு ஒண்டி அழைக்குது? இந்த சவாலை ஏத்துக்க. ஜெயிச்சுக் காட்டு...’’ ‘‘உங்க ஆசிர்வாதம் மாஸ்டர்...’’ ‘‘அது எப்பவும் இருக்கு...’’ ‘‘நன்றி மாஸ்டர். ஒரேயொரு சந்தேகம்...’’ ஆதி இழுத்தான். ‘‘கேளு...’’ ‘‘எரியற கார்லேந்து எப்படி ஒரு மனுஷனால தப்பிக்க முடியும்?’’

‘‘அது உதவற சக்தியை பொறுத்தது...’’ ‘‘புரியலை மாஸ்டர்?’’ ‘‘புரிய என்ன இருக்கு? ஷங்கர் டைரக்ட் செஞ்ச ‘ஜீன்ஸ்’ படம் பார்த்திருப்ப. அதுல ‘கண்ணோடு காண்பதெல்லாம்...’னு ஒரு பாட்டு வரும். டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் டெக்னாலஜி உதவியோட ஒரே ஐஸ்வர்யா ராயை இரண்டு பேரா... டுவின்ஸ் மாதிரி காட்டுவாரு.

அது மாதிரி தொழில்நுட்பம் ஒருவேளை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்...’’ ‘‘அப்ப தாராவுக்கு உதவற சக்தி தொழில்நுட்பம்னு சொல்றீங்களா?’’ ‘‘டெக்னாலஜிக்கு எப்படி ஆதி ‘KVQJUFS’ தெரியும்?’’ ‘‘மாஸ்டர்...’’ ‘‘மெல்ல மெல்ல உனக்குள்ள வெளிச்சம் வருது இல்லையா..? அதுதான் விஷயம். மகாபாரதத்துல பாண்டவர்கள் அரக்கு மாளிகைலேந்து தப்பிப்பாங்க. அது மாதிரிதான் தாரா விஷயத்துல நடந்திருக்கணும். அப்ப விதுரர் க்ளு கொடுத்தார்.

இப்ப யார் செய்தியை கசிய விட்டாங்கன்னு கண்டுபிடிக்கணும். ‘ஜீன்ஸ்’ உதாரணத்தை நான் சொன்னது டெக்னாலஜியும் உதவியிருக்கலாம்னு குறிப்பிடத்தான். முதல் வேலையா பக்கத்துல எங்க ஆஸ்பிடல் இருக்குனு பாரு. அங்க எரிஞ்சு கரிக்கட்டையா இரண்டு உடல்கள் அடையாளம் தெரியாம இருந்ததுன்னா உடனே DNA டெஸ்ட் எடுக்கச் சொல்லு. இதுக்கு நம்ம அமைப்பு உறுப்பினர்கள் உதவுவாங்க. உன்னை தொடர்பு கொள்ளச் சொல்றேன்...’’

‘‘சரி மாஸ்டர்...’’ ‘‘ஜோதிடத்துல ‘பஞ்ச பட்சி சாஸ்திரம்’னு ஒண்ணு இருக்கு. நிஜத்துல அது நம்ம முன்னோர்களோட புத்திசாலித்தனத்தோட வெளிப்பாடு. இந்த பிரபஞ்சம் மட்டுமில்ல... நம்ம உடலும் இயங்க பஞ்ச பூதங்கள்தான் காரணம். இந்த பஞ்ச பூதத்தையும் வல்லூறு, ஆந்தை, கோழி, மயில், காகம்னு அஞ்சு பறவைகளா உருவகப்படுத்தி அதை ஒவ்வொரு நாழிகைக்கும் பிரிச்சிருக்காங்க.

நாழிகைங்கிறது அந்தக் கால கடிகாரம். இந்தக் காலத்துக்கு ஏற்ப சொல்லணும்னா இரண்டு மணி 24 நிமிடங்களை ஒரு நாழிகைனு குறிப்பிடலாம். இதுவரைக்கும் நடந்தது பூரா கோழியோட சம்பந்தப்பட்டிருக்கு. அதனாலதான் முட்டை எல்லா இடத்துலயும் தென்படுது...’’ ‘‘அப்ப ‘பஞ்ச பட்சி சாஸ்திரத்’தை தெரிஞ்ச நபர்தான் தாராவுக்கு உதவற சக்தி... இல்லையா?’’

‘‘பாதி கிணறு தாண்டிட்ட ஆதி. ‘பஞ்ச பட்சி சாஸ்திரம்’ ஜோதிடத்தோட ஒரு பிரிவுதான். ஸோ, முக்காலமும் அறிஞ்ச சக்தி அவ பின்னாடி இருக்குனு இப்போதைக்கு முடிவுக்கு வரலாம்...’’ ‘‘ஓகே மாஸ்டர். பக்கத்துல இருக்கிற ஆஸ்பிடலுக்கு உடனே போறேன்...’’ ‘‘சென்று வென்று வா...’’ மாஸ்டர் தொடர்பை துண்டிக்கும் வரை காத்திருந்த ஆதி, அதன் பிறகு மைக்ரோ செகண்ட் கூட தாமதிக்கவில்லை.

ஆக்சிலேட்டரை முறுக்கி காற்றைக் கிழித்தான். மனம் முழுக்க தாராவின் கார் எரிந்த காட்சியே விஸ்வரூபம் எடுத்து நின்றது. அந்த கணத்தில் அப்போது, தான் முக்கியத்துவம் தராத ஒரு விஷயத்தில் அவனது கவனம் குவிந்தது. கார் எரியும்போது - ஒரேயொரு நொடி அந்த ஜ்வாலை ஸ்ரீசக்கரமாக மாறியதே... அது ஏன்?

(தொடரும்)  

ஓவியம்: ஸ்யாம்