இது முயல் தீவு பொங்கல்!



-க.முத்துகிருஷ்ணன்

தூத்துக்குடி கடலோரத்தில் ஆள் அரவமற்று நிசப்தமாகக் கிடக்கிறது அந்தத் தீவு. அலைகள் கரையைத் தொட்டு தாலாட்டும் அழகான நிலப்பரப்பு. சிறிது தூரத்தில் கலங்கரை விளக்கம். தூத்துக்குடி துறைமுகம், அனல் மின் நிலையம் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புக்கு நடுவே அமைதியின் பிறப்பிடமாக இருக்கிறது முயல் தீவு. இதற்கு பாண்டியன் தீவு, கோபுரத் தீவு என்ற பெயர்களும் உண்டு. ஆண்டுக்கு ஒரு நாள் பொங்கலை ஒட்டி வரும் காணும் பொங்கல் அன்று முயல் தீவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். அன்று மட்டுமே இங்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

இந்தத் தீவில் ஒருகாலத்தில் மனிதர்கள் வசித்ததற்கான ஆதாரம் உள்ளது. இன்றும் கலங்கரை விளக்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள், இங்கிருக்கும் குடியிருப்பில்தான் வசித்து வருகின்றனர். ஒரு காலத்தில் கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையிலான கடலோரங்கள் அனைத்தும் ‘கார்மனத்துறை’ என அழைக்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி மக்களுக்கு முத்துக்குளித்தலும், மீன்பிடி தொழிலும்தான் பிரதானமாக இருந்தது. மீன்பிடி தொழிலுக்கு சென்றவர்கள் ஓய்வு நேரத்தில் வேட்டைக்கும் சென்றனர்.

அப்போது முயல்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதிக்கு வேட்டைக்குச் சென்றதால் இது ‘முயல் தீவு’ என்று அழைக்கப்பட்டது. தூத்துக்குடிக்கு முத்து வாங்க வந்த டச்சுப் படைகள் தூத்துக்குடியைப் பிடித்தபோது பரதவர்ம பாண்டியன் தன் படைகளுடன் சென்று முயல் தீவில் தங்கினார். அங்கிருந்து டச்சுப் படைகளை எதிர்த்துப் போரிட்டார். பாண்டிய மன்னன் இந்தத் தீவில் தங்கியதால் பாண்டியன் தீவு எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள கலங்கரை விளக்க கல்வெட்டுகளில் இன்றும் பாண்டியன் தீவு என்றே பொறிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கு அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம், பெரிய கோபுரத்தைக் கொண்டிருந்தது. இதனால் இங்கு வாழ்ந்த மீனவர்கள் இதை ‘கோபுரத் தீவு’ என்றும் அழைத்துள்ளனர். பாண்டியர்கள் ஆட்சிக் காலத்திற்குப் பின்னரும் இந்தத் தீவில் தொடர்ந்து மீன்பிடி தொழில் நடந்து வந்தது.

இதற்கு, முத்தரையர்கள் வழிபடும் இங்குள்ள கோபுரத்து முனியசாமி கோயிலும், கிறிஸ்தவ சிலுவையும் ஆதாரமாக உள்ளன. தூத்துக்குடியில் மீனவர்கள் இன்றும் புதிய படகு செய்தால், இந்தக் கோயில்களுக்கு வந்து பூஜை செய்த பின்னர்தான் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளது. 14ம் நூற்றாண்டில் பாண்டியன் தீவில் வசித்த மக்களுக்கு முத்துக்குளித்தலும்,  மீன்பிடித்தலும்தான் தொழில்கள். இவர்கள் தங்கள் தெய்வங்களாக  முத்தாரம்மன், சந்தன மாரியம்மனை வழிபட்டனர்.

முத்துக்குளித்தலின்போது  கிடைக்கும் முத்துக்களை ஆரமாக அம்மனுக்கு அணிவித்துள்ளனர். அதனால்தான் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டு குலசேகரன் பட்டினத்தில் வழிபாடு  நடத்தியுள்ளனர். இன்று இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்தான் தசரா திருவிழா வெகு  விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

முயல்தீவில் தற்போதுள்ள கடற்பரப்பில் சிறிய கருவேல மரங்கள் மட்டுமே  உள்ளன. ஆனால் தூத்துக்குடி துறைமுகம் இந்த இடத்தை கையகப்படுத்துவதற்கு முன்பாக பெரிய அளவிலான பூவரசு மரங்கள் 5 கி.மீ. சுற்றளவிற்குப் பரவியிருந்தன. ஆனால் துறைமுகம், அனல்மின் நிலையம் என பெருகியதால் மரங்கள்  அழிக்கப்பட்டன. இதனால் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தீவின் அடையாளம் தற்போது ஒரு சிறிய நிலப்பரப்பில் சுருங்கிவிட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு மீன்பிடி தொழில் நடந்து வந்துள்ளது. அப்போது 150 குடும்பங்கள் சிறுசிறு குடிசைகள் போட்டு இங்கு தங்கியிருந்தன. தூத்துக்குடியில் துறைமுகம் அமைத்தபோது இங்குள்ள மீனவர்களை வெளியேற்றி அவர்களுக்கு திரேஸ்புரம் அருகில் உள்ள விவேகானந்தா நகரில் இடம் ஒதுக்கினர். ஆனாலும் மீனவர்கள் சீஸன் காலங்களில் இன்றும் வந்து கரைவலை மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இங்குள்ள கோபுரத்து முனியசாமி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் நடைபெறும். அப்போது வியாழன், வெள்ளி, சனி என மூன்று நாட்கள் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் இங்கு வந்து தங்கி கொடை விழாவைக் கொண்டாடுவர். ஆடு பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவர். இதேபோல கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ், ஜனவரி மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் இங்குள்ள சிலுவையை வணங்கி அசன பண்டிகை கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

‘‘முயல் தீவையொட்டியுள்ள பகுதி கடலும், ஆறும் கலக்கும் இடமாகும். பொதுவாக நல்ல தண்ணீர், கடல்நீருடன் கழிக்கும் பகுதியில் மீன் தொழில் நன்றாக இருக்கும். அது மட்டுமல்லாது அங்கு கிடைக்கும் மீன்களின் ருசியே தனிதான். இந்த கழிமுகப் பகுதியில் மீன்பிடி தொழில் அப்போது நடந்து வந்ததாக எனது பெற்றோர்கள் கூறியுள்ளனர். அன்று முதல் இன்று வரை கரை வலை மீன்பிடி தொழில் செய்துவருகிறோம். இதை நம்பி 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன’’ என்கிறார், தூத்துக்குடி மாவட்ட இந்து மீனவர் கூட்டமைப்புத் தலைவர் செந்தில்குமார்.

‘‘முயல் தீவு ஒரு பாதுகாக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷம். சுற்றிலும் இயந்திரமயமாக இருந்தாலும் இந்தத் தீவின் கொண்டாட்டமே தனிதான். ஆண்டுக்கு ஒரு நாள் காணும் பொங்கல் கொண்டாட்டம் நடந்தாலும், அந்த நாளில் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் மீனவர்களின் தங்கு கடல் மீன்பிடி தொழிலுக்கும், மீனவர்கள் கரைகளில் வலை விரிக்கவும் பயன்பட்டுள்ளன. இந்தத் தீவுகளில் முதல் தீவுதான் முயல் தீவு.

பாண்டிய மன்னன் இங்கு தங்கியதால் ராஜ தீவு என்றும் இந்தத் தீவுக்கு மற்றொரு பெயர் உண்டு’’ என்கிறார், தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சேர்ந்த பீட்டர் பிரான்சிஸ். காணும் பொங்கலன்று முயல் தீவில் கொண்டாட்டங்களுக்கும், மகிழ்ச்சிக்கும் எல்லை இருக்காது. அனைவருடனும் சோறு கட்டிக் கொண்டுவந்து குடும்பத்துடன் கடற்கரை மணலில் அமர்ந்து உண்பர். மணல் சிற்பங்கள் செய்தும், கபடி, கோகோ போன்ற விளையாட்டுகள் விளையாடியும் சிறுவர், சிறுமிகள் பொழுதைக் கழிப்பர்.

அன்று முயல்தீவில் சிறு கடைகள் முளைக்கும். நடமாடும் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடிவிடுவர். கையில் கிடைத்ததை வாங்கி மென்று விட்டு ஒரு நாள் அனைத்துக் கவலை களையும் மறந்து அவர்கள் அடையும் ஆனந்தமே தனிதான். காலையில் வருபவர்கள் மாலை வரை முயல் தீவில் பொழுதைக் கழித்துவிட்டுதான் வீடு திரும்புவர். இந்த வருடம் காணும் பொங்கலைக் கொண்டாட முயல் தீவுக்கு நாமும் ஒரு விசிட் அடிப்போம்!

தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து தூத்துக்குடி பழைய துறைமுகம், மீன்பிடி துறைமுகம், கடற்கரை சாலை வழியாகப் பயணித்து, தூத்துக்குடி துறைமுக சாலையில் திரும்பி, துறைமுகத்தின் பச்சை வாயிலை (கிரீன் கேட்) அடையலாம். அங்கிருந்து இடதுபுறம் வழியாகச் செல்லும் சாலையில் பயணித்தால் தூத்துக்குடி வடக்கு தீயணைப்பு நிலையம் வழியாக கலங்கரை விளக்கம் அருகில் உள்ள முயல் தீவை அடையலாம். தூத்துக்குடி துறைமுக சபையின் கட்டுப்பாட்டில் முயல் தீவு இருந்தாலும் அங்கு செல்ல எந்தத் தடையும் இல்லை. புதிய துறைமுகத்தின் பச்சை வாயில் வரை அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் முயல்
தீவு உள்ளது.              

படங்கள்: க.ராஜா சிதம்பரம்