பொட்டி வந்தாச்சு



-நா. கதிர்வேலன்

பைரவா

மாணவர்களின் பிரச்னை ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு அதை பின்னி பெடலெடுக்கிற கதையே ‘பைரவா’. ‘ரொம்ப நல்லது பண்ணியிருக்கீங்க...’ என பெற்றோர்களும், மாணவர்களும் பாராட்டப்போகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறார் ‘பைரவா’. காட்சிகளின் வடிவமைப்பிற்காக வகைதொகை இல்லாமல் செலவழித்து இருக்கிறார்கள். விஜய் புதுசாக, இன்னும் இளமையாக இருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் முதல் தடவையாக விஜய்க்காக இணைய, இப்போது கூட கேசட்டில் இல்லாத இன்ப அதிர்ச்சியாக படத்தில் இரண்டு பாட்டு இருக்கிறது. முதல் பிரதி பார்த்துவிட்டு ‘பட்டைய கிளப்பிட்டீங்க பரதன்’ என்று ஒற்றை வார்த்தையில் துள்ளலாக விஜய் சொன்னது வைரலாக தமிழ் சினிமாவுக்குள்ளேயே உலவுகிறது.

பொறுமையாக இருந்தா, ஒரு கேக்குக்கு ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு ஒரு பேக்கரியே கிடைக்கலாம். சுமாரான ஃபிகருக்கு ஆசைப்பட்டவருக்கு சொப்பன சுந்தரி கிடைக்கலாம். கதை, பாட்டு, காஸ்ட்யூம் என சகலத்திலும் ஆர்வமாகி விஜய் செய்த படமும் இதுதான். ‘வரலாம் வரலாம், வா’ என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.                                                       

புரியாத புதிர்

‘‘குற்றம் செய்கிறோம் என்பதை உணராமலேயே நாம் சில வகை தப்புகள் செய்வோம். அதை பெரிதாக நினைக்காமல் இயல்பு தானோ.. என்று கூட தோணும். அப்படி ஒரு கதைக்கருவை தேர்ந்தெடுத்திருக்கிறேன்...’’ - விஜய் சேதுபதி, காயத்ரி இணைப்பில் பொங்கலுக்கு ஸ்வீட் எண்டரி ஆகிறார் புதுமுக இயக்குநர் ரஞ்சித் ெஜயக்கொடி. இயக்குநர் ராமின் அத்யந்த சீடர். எமோஷனல், ரொமாண்டிக் த்ரில்லர் என சொல்லிக்கொள்ளவே ஆசைப்படுகிறார்.

சேதுபதி நடித்து இதுவரை 20 படங்கள் என கணக்குக் காட்டிவிட்டாலும் இது புதுசு என்கிறார்கள். பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ளவே விருப்பம். யாருக்கும், எந்தப் படத்திற்கும், போட்டி இல்லை என தெளிவில் இருக்கிறார் ரஞ்சித். ‘மூடுபனி’ என பெயர் வைக்க நினைத்து ‘மெல்லிசை’ என பெயர் சூட்டி, இறுதியில் இன்னும் பொருத்தமாக ‘புரியாத புதிர்’ ஆக்கியிருக்கிறார். வித்தியாசமான திரைக்கதைக்கு உறுதி தருகிறார்.       

கோடிட்ட இடங்களை நிரப்புக

‘‘நிச்சயமா விஜய் படத்திற்குத்தான் முதல் சாய்ஸ். மூன்று நாட்களாக மக்கள் அங்கேதான் வட்டமிடுவார்கள். பிறகு எங்கள் பக்கம் திசை திரும்பிவிடுவார்கள். இந்தப் படத்தை நீங்கள் எதிலும் அதாவது... காதல், த்ரில்லர், பேய்ப்படம், குடும்பம் என எந்த ரகத்திலும் சேர்க்க முடியாது. படம் பார்த்து முடிந்தபிறகும் தணிக்கைக்காரர்கள் கேட்டதும் ‘இது என்ன மாதிரி படம் சார்’ என்றுதான்.

மக்களுக்கும், திரை வர்த்தகர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மக்கள் படம் பார்த்துவிட்டு பரிசளிப்பார்கள். வர்த்தகர்கள் போஸ்டர்கள் பார்த்துவிட்டே சொல்லிவிடுவார்கள். படத்திற்கு முன்பின்னாய் இருக்கிற ஒரே நம்பிக்கை நான்தான். இதில் காதல், நகைச்சுவை, ரொமான்ஸ் (கொஞ்சம் அதிகம்) எல்லாமே இருக்கிறது. கெட்டப், நடிப்பு என இது புத்தம் புது சாந்தனு. எங்க வாத்தியாருக்கு சாந்தனுவை வெற்றியாக்கி திரும்பித் தருகிற பரிசு. போன படம் மாதிரி பரீட்சை செய்து பார்க்காமல், ேநரடியாகவே சுவாரஸ்யத்திற்கு வித்திடுகிறேன்’’ ஒரு மினி டீடெயில் சொல்லுங்க என கேட்டதற்கு பார்த்திபன் தன் நெஞ்சிலிருந்து பேசின வார்த்தைகள் இவை.