COFFEE TABLE



-குங்குமம் டீம்

சைலண்ட் கார்னர்

எதிரி உங்கள் நண்பன்
பால்தசார் கிராசியன் / தமிழில்: சந்தியா நடராஜன்
(சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை - 600 083. விலை ரூ.80/- தொடர்புக்கு: 044 - 2489 6979) ஸ்பெயின் தேசத்து சாணக்கியன் பால்தசார் எழுதிய புத்தகம் இது. எப்பொழுதும் நிலைக்கக்கூடிய கருத்துக்களை உருவாக்குகிற கலைஞர்கள் ஒருசிலரே பிறக்கிறார்கள். அவர்கள் கண்ட தரிசனங்களை வெளியில் வைக்கிறார்கள். இந்த வாழ்க்கை நம் முன் வைக்கும் மாய விளையாட்டைச் சுலபமாகக் கையாள பால்தசார் சொல்லித் தருகிறார்.

வாழ்க்கையின் அத்தனை புரிதல்களுக்கும் அவ்வளவு சுலபமாக விடை தருகிறார். இது சுய முன்னேற்ற நூலல்ல. உங்களின் ஆளுமையை, இருத்தலை உங்களுக்கே உணர வைக்கும் நூல். உலகமெங்கும் பேசப்பட்ட புத்தகம். தினசரி வாழ்வில் எதிர்படும் மனிதர்களைச் சுலபமாகப் புரிந்து கொள்ள, அவர்களை சாமர்த்தியமாகக் கையாள எளிய வழிகளைச் சொல்லித் தருகிறது இந்த நூல். நாம் எதிர்கொள்ளும் நீண்ட நெடிய வாழ்க்கைக்கான மிகச் சிறிய கையேடு இது.

பால்தசாரின் வாழ்க்கையே அதிக திருப்பங்கள் கொண்டது. கிறிஸ்துவ மத போதகராகத் தெரியவந்து, சொற்பொழிவாளராகி, வாழ்வியல் ஞானம் பற்றி புத்தகமெல்லாம் எழுதும் நிலைக்கு உயர்ந்தார். தத்துவவாதி நீட்சேவிற்கு பிடித்த புத்தகம்கூட இதுதான். தமிழ் மொழிபெயர்ப்பில் இடைஞ்சல் செய்யாமல் உதவுகிறார் சந்தியா நடராஜன். 

யூ டியூப் லைட்

வெளிநாட்டு பூங்கா ஒன்றுக்கு விசிட் அடித்திருந்தார் பாலிவுட் குயின் அனுஷ்கா சர்மா. அவ்வளவுதான். அங்குள்ள மயில் ஒன்று அவரிடம் வந்து உணவு கேட்க... சிலிர்த்துவிட்டார். தன் கையாலேயே மயிலுக்கு உணவு வழங்கி (ஊட்டிவிட்டு?!) ‘In the end, It’s all about cherishing the simple things in life’ என ஃபீலாகியிருக்கிறார். மயிலுக்கு இரங்கிய மயிலின் இந்த வீடியோ காட்சி வைரலாகி இருக்கிறது. ஒரு ரசிகர் ‘ஐ லவ் யூ அனு... சொந்த ஊரான கர்னாடகாவுக்கு ஒருமுறையாவது வாங்க...’ என உருகி அழைத்திருக்கிறார்.
ஊர்ப்பாசம்!

டெக் டிக்

விதவிதமான ஸ்மார்ட் போன்கள், பென் டிரைவ்கள், ஹெட் போன்கள் என பல கேட்ஜெட்கள் நாள்தோறும் சந்தையில் இறங்கி நம்மை கலங்கடிக்கின்றன. அந்த வகையில் உலகிலேயே அதிக மெமரி திறன் கொண்ட யுஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவை கிங்ஸ்டன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு டி.பி அளவுக்கு இதில் டேட்டாக்களை சேமித்துக் கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். சின்க்-அலாய் மெட்டல் பாடியுடன் ஷாக் ரெசிஸ்டன்ட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ஜஸ்ட் ரூ.45,000.

ஷாக்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விவசாயிகளின் தற்கொலை பதறடிக்கிறது. ‘சரியாக பெய்யாத பருவ மழை, அதிகப்படியான வறட்சி, விவசாயிகளின் மீது அக்கறையில்லாத மத்திய, மாநில அரசு’ இவைதான் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ‘இவை அல்ல காரணம்’ என்று ஓர் இடியை தூக்கிப் போட்டிருக்கிறது ஓர் ஆய்வு. ‘வங்கிக் கடன் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் சுய உதவி தொழில்களுக்கான கடன் வழங்கும் நிறுவனங்களின் இடைவிடாத தொல்லை மற்றும் நெருக்கடிகள்’தான் விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணம் என்று சொல்கிறது அந்த ஆய்வு.

ரீடிங் கார்னர்

மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன்
தொகுப்பாளர்கள்: பா.ெசயப்பிரகாசம், ரேவதி குணசேகரன்
(புலம், 332/216 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. விலை ரூ.300/- தொடர்புக்கு 98406 03499) தமிழ்க் கலை உலகில் நீங்கள் புழங்குபவராக இருந்தால் மக்களின் பாடகன் கே.ஏ.  குணசேகரனை கடந்து செல்ல முடியாமல் வந்திருக்க முடியாது. ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பாட்டை, சோகத்தை, இன்னலை, கம்பீரமாக ஓங்கி ஒலித்த குரல் குணசேகரனுடையது. அவர் மறைந்தபோது ‘அந்தக் குரலை, மனதில் ஆழப்போய் தைக்கும் வித்தையை இனிமேல் நேரடியாகக் கேட்க முடியாது’ என துயருற்றவர்களே அதிகம். 

முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதி மக்களின் துயரை வெளிப்படுத்தியதைவிட, குணசேகரன் பாடிப் புரிய வைத்தது ஏராளம். பேராசிரியராக இருந்தும், நீண்ட நெடும் பயணங்கள் செய்து சாதாரண மனிதர்களை சந்தித்தபடியே இருந்தார். இந்தப் புத்தகம் அவரோடு பழகியவர்கள், அவரது செயல்திறனைப் புரிந்துகொண்டவர்கள், அவரது  பாடலில் உயிர்த்தவர்கள் என அத்தனை ஆளுமைகளின் கட்டுரைகளும் சேர்ந்த  படைப்பு. ஒவ்வொருவரும் குணசேகரனை உள்வாங்கிக்கொண்ட விதம் அருமை.