அமெரிக்காவில் பொங்கல்



-அமெரிக்காவிலிருந்து வேதா கோபாலன்

நியூ ஜெர்ஸியில் இருக்கும் ரங்கராஜன் ஸ்ரீதர், அச்சு அசல் தஞ்சைக்காரர். ‘‘அங்கே நேரடியாக எங்கள் வயலில் விளைந்த புது அறுவடை நெல்லில் அரிசி எடுத்துப் பொங்கல் வைப்பார்கள். தாத்தா வீட்டில் அப்படித்தான் நடக்கும். அமெரிக்கா வந்த பிறகும் சம்பிரதாயங்களை விடாமல் கொண்டாடுகிறோம். ஊரிலிருந்து வெண்கலப்பானை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். என் மனைவி வசுதா, சம்பிரதாயப்படி சேலை அணிந்து பொங்கல் வைப்பாள்.

ஓரிரு சமயங்களில் என் தாய் அல்லது மாமியார் உடனிருப்பார்கள். எப்போதுமே ஃப்ளாட் வாசலில் கோலம் போடும் வழக்கம் உண்டு. பண்டிகை நாட்களில் பெரிதாக கோலம் போடுவோம். எங்கள் குருவை வணங்க இங்குள்ள ஆண்டவன் ஆசிரமம் செல்வோம். திருப்பாவையை கட்டாயம் முழுமையாகப் படிப்போம். எங்கள் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. இப்போது அழகாக திருப்பாவை சொல்கிறார். மழலையில் அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது...’’ என்கிறார் ரங்கராஜன் ஸ்ரீதர். 

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தமிழ் குஷி டாட்காமின்’ நிறுவனர் திருமதி மோகனா ஓபேஷ். சென்னைப் பெண்மணியான இவர், இப்போது வாஷிங்டன் வாசி. அவர்களின் சொந்த கிராமத்தில் ஆடி மாதம் விதை போட்டு தைமாதம் அறுவடை செய்யும் வழக்கத்தை இங்கும், அமெரிக்க கார்டனில், விதைகள் போட்டு கடைப்பிடிக்கிறார். அதுமட்டுமல்ல. வேறு நாட்டில் சென்று படிக்கும் தங்கள் ஒரே மகளுக்கு இந்தப் பழமையையும் பாரம்பரியத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்கவும் தயங்கவில்லை. 
 
‘‘தை பிறந்தால் வழி பிறக்கும் என்றெல்லாம் நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. அதற்கென்று ஓர் அர்த்தம் இருக்கவே செய்கிறது. பொங்கல் அன்று சூரியனுக்கு விருந்து வைப்பதை இங்கும் கடைப்பிடிக்கிறேன். பொங்கலுக்கு மறுநாள் கலந்த சாதத்தையும் சர்க்கரை பொங்கலையும் பால்கனியில் வைக்கிறோம். தமிழகம் போலவே இங்கும் காகங்கள் வந்து அவற்றை சாப்பிட்டுவிட்டு செல்கின்றன...’’ என்று சிரிக்கும் மோகனா, மார்கழி 30 நாளும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து திருப்பாவை படிக்கிறாராம்.

பென்சில்வேனியா மாகாணத்தில் இருக்கும் மணி லட்சுமிநாராணன், 37 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கிறார். ‘‘தமிழகம் போலவே இங்கும் பொங்கலன்று அருமையான விருந்து சமைப்போம். சர்க்கரைப் பொங்கல், வெல்லப் பச்சடி, வடை அவியல் என்று சகலமும் உண்டு. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் (கரும்பு உள்பட) Indian Grocery storeல் கிடைக்கின்றன. பொங்கலுக்கு மறுநாள் என் தாயாருக்கும் எங்களின் இரண்டாவது மகள் நித்யாவுக்கும் பிறந்தநாள். எனவே கேக், அலங்காரங்கள் என அமர்க்களப்படுத்திவிடுவோம்...’’ என்கிறார்.

ஜார்ஜியாவில் வசிக்கும் சண்முகவள்ளி வேதநாயகம், ‘‘நம் ஊராயிருந்தால் பொங்கலுக்கு முன் வீட்டை வெள்ளையடித்து சுத்தம் செய்வோம். இங்கே எப்போதுமே வீடுகள் பளிச்சென்று இருப்பதால் அதற்கு அவசியமில்லை. காலையில் எழுந்து கோலம் போட்டு சர்க்கரைப் பொங்கலும், பச்சரிசிப் பாயசமும், வடையும் செய்வேன். இரு வருடங்களுக்கு முன் என் கணவருடன் வேலை பார்க்கும் அமெரிக்கர்களை வீட்டுக்கு அழைத்து தடபுடலாக தமிழக விருந்தை பரிமாறினோம். ஒவ்வொன்றும் என்ன என்ன எனக் கேட்டு கேட்டு ரசித்து சாப்பிட்டனர். இந்த வருடமும் அப்படி அழைப்பேன்...’’ என்கிறார்.

னிவாசன் உப்பிலி, கலிபோர்னியாவில் பல வருடங்களாக வசித்து வருகிறார். ‘‘சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கும் தமிழ்க்கலாச்சார மையம் என பாரதி தமிழ்ச் சங்கத்தை சொல்லலாம். வழக்கமாக பொங்கல் பண்டிகையை இச்சங்கம் ஏதாவது ஒரு கோயிலின் அரங்கத்தில் சிறுவர்களும், பெரியவர்களும் தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சியாகக் கொண்டாடும். 

சென்ற முறை பொங்கல் விழாவை முன்னிட்டு இப்பகுதியில் உள்ள பிற சமூகத்தினரிடம் தொடர்பும் நல்லிணக்கமும் ஏற்படுத்தும் விதமாக, ஒரு சமூக நல நோக்குடன் வீடிழந்த எளியவர்களுக்கு ஒரு வேளை உணவு வணங்க முடிவு செய்து சில இந்து இயக்கங்களுடன் இணைந்து நடத்தியது. இந்த உணவு தயாரித்து வழங்கும் வேலையில் ஈடுபட விரும்பும் சேவகர்கள் அனைவரும் தங்களுக்கு டிபி இல்லை என்பதை மருத்துவமனையில் பரிசோதித்து சான்றிதழ் பெற்று வரவேண்டும்.

அனைவரும் கை உறைகள் அணிந்து பரிமாறவும் சமைக்கவும் உணவுகளைக் கையாளவும் வேண்டும். சமையலறையினுள் சாப்பிடுவதும் உணவுப்பொருட்களைக் கையால் தொடுவதும் தவிர்க்கப்பட்டிருந்தது. தானிய சாலட், குலோப் ஜாமூன், அப்பளம், புலாவ், சன்னா உருளைக்கிழங்கு மசாலா, இரண்டு நான்கள், பன்னீர் மசாலா, சீஸ் பாஸ்தா, காஃபி, ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ். ஒரு வாழைப்பழம் உள்ளடங்கிய சைவ உணவுத் தட்டை அளித்தோம்.

இதில் பாஸ்தா, நான், பன்னீர் மசாலா, புலாவ், குலோப் ஜாமூன், அப்பளம், தானிய சாலட் ஆகியவற்றை ஏற்கனவே சமைத்து பாரதி தமிழ்ச் சங்கத்து நண்பர்கள் கொண்டு வந்திருந்தனர். சாக்ரமெண்டோ நகரில் இருந்து பாலாஜி என்னும் நண்பர் வந்திருந்தார். இவை போன்ற நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும் பழக்கமுள்ள இவரே, தலைமை சமையல்காரர்.

பெரிய அலுமினியத் தட்டுக்களில் இவற்றைப் பரப்பி எடுத்து வைத்தோம். வழங்கப்படும் ஒவ்வொரு உணவு குறித்த தயாரிப்பு மற்றும் பதார்த்த விவரங்களையும் அச்சடித்து அனைவரும் படிக்கும் விதத்தில் ஒட்டியிருந்தோம். அன்ன பூரணித் தாயாரின் உருவத்தின் முன்பாக ஒரு தட்டு உணவைப் படைத்து விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லி வறுமையற்ற பசியற்ற உலகுக்காக பிரார்த்தனை செய்தோம். இந்த ஆண்டும் இதேபோல் செய்யும் எண்ணம் இருக்கிறது...’’ என்றார் ஸ்ரீனிவாசன் உப்பிலி.