ரஜினியின் வலது கை பி.வாசு!



- நா. கதிர்வேலன்

இன்னமும் ‘ஹிட்’ லிஸ்டில் இருக்கிறார் இயக்குநர் பி.வாசு. தமிழ் சினிமாவின் வரலாற்றில் வசூலில் பிரம்மாண்டம் காட்டிய படங்களில் அவரது பங்கும் அனேகம். இந்த தடவை காத்திருக்கிறது ‘சிவலிங்கா’. அனுபவ சாந்தத்தில் ஆரம்பித்தது அவருடனான உரையாடல். ‘‘இங்கே ட்ரெண்ட் மாறிக்கிட்டே வரும். அதுக்கு ஏத்த மாதிரி நம்மை மாத்திக்கணும். ஆனால், கதையை மாத்தக்கூடாது. குடும்பம் ஒண்ணுதான். அப்பா, அம்மான்னு வளர்ந்து கொண்டு போகிற உறவுகள். அது மாறலை. நான் மினிமம் கேரண்டி டைரக்டர்.

தப்பான படம் கொடுக்கக்கூடாதுன்னு உறுதியாக இருக்கேன். பழைய படங்களில் அம்மா பிள்ளைக்காக தியாகம் பண்ணுவாங்க. அதையே பிள்ளை செய்து படம் எடுத்தால் அது ‘பிச்சைக்காரன்’. கதைக்களன் பழசு. ட்ரிட்மெண்ட் புதுசு. 35 வருஷமா இந்த சினிமாவில் இருக்கேன். என் கனவும், நேற்று வந்த சினிமா பண்றவன் கனவும் ஒண்ணுதான். கனவுக்கும், கற்பனைக்கும் வயது ஏது!

ஹாலிவுட்டில் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் வயதுக்கும், அவங்க படத்திற்கும் தொடர்பு இருக்கா! என்ன கிரியேட்டிவ்! ட்ரண்ட்னு சொல்லிக்காட்டினால் எனக்கு சிரிப்பு வருது. என்னோட வெற்றி என்னோட பயம், என்னுடைய தோல்வி, என்னோட தைரியம்!’’ அனுபவச் சாரல் தெறிக்கிறது அவர் பேச்சில்.

நீங்களே எட்டு வருஷம் கழிச்சு ரஜினி படம் செய்தீங்க..?
‘சந்திரமுகி’ பண்ணனும்னு ரஜினி கூப்பிட்டபோது என்னால நம்பமுடியலை. அவருக்காக நானே பல கதைகளை ரெடி பண்ணி வச்சிருந்தேன். பிரபுதான் கூப்பிட்டு ‘அடுத்த படம் ரஜினி நமக்கு பண்றார். நீதான் டைரக்டர்’னு சொல்றார். அப்பத்தான் ‘பாபா’, ‘படையப்பா’ முடிச்சிருக்கார். நானே அவரை வைச்சு முழுநீள திரைக்கதை ரெடி பண்ணியிருந்தேன். ‘வலது கை’னு டைட்டில் வச்சேன். ரஜினியின் வலது கை பி.வாசுனு படிச்சிட்டு போற மாதிரி வைச்சு யோசிச்சிருக்கேன்.

இன்ன வரைக்கும் அந்த ஸ்கிரிப்டை நான் அவருக்கு ெசால்லலை. அவரே உங்க ‘ஆப்தமித்ரா’வை பண்றோம்னு சொன்னார். நான் பயந்துட்டேன். அது ஹீரோயின் டாமினேஷன் உள்ள படம். ஜோதிகா கேரக்டரில் கை வைக்கவே முடியாது. அவரு படத்திற்குள்ளே வர்றாருன்னு எதையும் மாத்தவும் முடியாது. அப்புறம் வந்ததுதான் வேட்டையன், வடிவேலு எல்லாம். இது எல்லாம் ‘ஆப்தமித்ரா’வில் கிடையாது.

எனக்கு என்ன ஆச்சர்யம்னா இந்தப் படம் சரியாக இருக்கும்னு அவருக்கு ஜட்ஜ்மென்ட் எப்படி வந்தது? நான் இப்ப வர்றவங்க எல்லோரையும் நல்லா கவனிக்கிறேன். என் உதவியாளர்களிடம் நான் மனசு விட்டுப் பேசுவேன். நீ என்ன சொல்றது, நான் எனன கேட்கிறதுங்கிற விஷயம் சினிமாவில் நடக்காது. சொல்றது நல்லாயிருக்கேன்னு யோசிச்சா ஜெயிக்கலாம். நான்தான் எல்லாம்னு சொன்னால் கொஞ்ச நாள்தான்.

மிரட்டலா, அதிரடியாக ‘சிவலிங்கா’வில் புறப்பட்டு வர்றீங்க..?
என் ஹீரோவுக்கு அனுபவம் இருக்கணும். கன்னடத்தில் சிவராஜ்குமார் செய்திருந்தார். பெரிய ஸ்டார். ரொம்ப ஃபேன் ஃபாலோயிங். 100 படங்களைத் தாண்டிட்டார். அப்படின்னா எனக்கு லாரன்ஸ் இங்கே சரியாக வந்தது. ஹுயூமரில் பின்னுவார். நகைச்சுவை வருகிற ஹீரோ இங்கே ரொம்பக் குறைவு. நிறைய ஹீரோக்கள் ஹுயூமர் பண்ணினால் இங்கே ரசிக்க முடியாது. அம்மாவிற்கு அடங்கின பிள்ளையா வருவார். அம்மா மடியில் போய்க்கூட உட்கார்ந்திருப்பார்.

நம்பலாம். அதே நேரத்தில் ‘ஃபைட்’டில் பதற அடிப்பார். இப்படி ஒரு ஆளு சி.பி.ஐ. ஆபீஸராக ‘சிவலிங்கா’வில் வேண்டியிருந்தது. ‘வெளியில புலி, வீட்டில எலி’ மாதிரியிருப்பார் மாஸ்டர். இந்தப் படத்தில் அவர் ஸ்டைலையும், கெட்டப்பையும் பார்த்து ‘இவ்வளவு நல்லாயிருக்கே’ன்னு கேட்காதவர்கள் இல்லை. ஒரு ஹேர்ஸ்டைல் கண்டுபிடிக்க ஒரு மாதம் ஆனது. 

ரித்திகாவை கொண்டு வந்திட்டீங்க..?
‘இறுதிச் சுற்றி’ல் ரவுடித்தனமாக இந்தப் பொண்ணைப் பார்த்தேன். எங்கேயும் நின்னு, உட்கார்ந்து பார்க்க முடியாது. கண்ணே பல கேள்வி கேட்கும். பவ்வியத்தை எதிர்பார்க்க முடியாது. அப்படி ஒரு பொண்ணுக்குத்தான் இதில் இடம் போட்டு வைச்சிருந்தேன். இரண்டு பேருக்கும் இந்த ஜோடிப் பொருத்தம் வேற புதுசாக, இருக்கு. நம்ம பையன் சக்தி இதில் வர்றான். அவன் நடிப்பைப் பார்த்திட்டு தம்பி க்ளைமேக்ஸில் வரணும்னு ஒரு டைரக்டர் மாதிரியே பாதை போட்டுக் கொடுத்தார் மாஸ்டர்.

எப்பவும் அவருக்கு கோவை சரளா நல்ல அம்மாவாக இருப்பாங்க. இதில் ஊர்வசியை சேர்த்திருக்கேன். மறுபடியும் வடிவேலு. கதை கேட்ட பின்னாடி ‘அண்ணன் படத்தில நடிக்கப் போறன்’னு நண்பர்களிடம் சொல்ல ஆரம்பிச்சிட்டார் வடிவேலு. அவர் ஸ்பாட்டுக்கு வந்தோம், நடிச்சோம்னு  போறது கிடையாது. எதிரே இருக்கிறவங்களுக்கு காமெடி பண்ண உதவமுடியுமான்னு பார்ப்பார்.

இடைவேளைக்குப் பிறகெல்லாம் சிரிச்சு மாள முடியாது. நான், ராஜா, ரஹ்மான், வித்யாசாகர், தேவான்னு ஒர்க் பண்ணிட்டேன். இதில் தமன். அவரோட முதல் நாள் மீட்டிங்கிற்கே ஷார்ட், சட்டை போட்டுட்டு போயிட்டு, தோளில் கை போட்டு பழகி, பாட்டுப்பாடி, ம்யூசிக் பண்ணி அவரை குஷிப்படுத்திட்டேன். அருமை பெருமையா பாடல்கள் போட்டுக் கொடுத்தார் தமன். எனக்கு நிறைவாக இருந்தது.