ஐரோப்பாவில் பொங்கல்



-ஸ்வீடனிலிருந்து ரவி

ஐரோப்பாவில் பொங்கல் வைக்க அரிசி கிடைக்கிறதா, கரும்பு கிடைக்கிறதா என்ற சந்தேகத்தோடு அணுகினால் ஆச்சர்யம். ஆடல் பாடல் என தூள் கிளப்பும் பொங்கல் விழாவினை ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் செய்கிறார்கள். ‘தமிழ் இளையோர் அமைப்’பின் உதவியுடன் நாம் தொடர்புகொண்ட ‘தமிழ் தேசிய செயற்பாட்டாளர்’ ராஜரத்தினம் ராஜா மிகுந்த மகிழ்ச்சியோடு ஜெர்மனியில் வருடம்தோறும் நடைபெறும் பொங்கல் விழாவை பற்றி பகிர்ந்துகொண்டார்.

‘‘பல்வேறு ஊர்களில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் ஆலயங்களில் தமிழர் திருநாட்களை கொண்டாடுகிறார்கள் (தமிழ் ஆலயம் என்று அவர் சொல்வது தமிழ்ப் பள்ளிகளை). அந்தவகையில் கிட்டத்தட்ட 130 தமிழ் ஆலயங்கள் இங்கே உண்டு. வருடந்தோறும் சிறப்பாக திட்டமிட்டு, நம் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும், தொடர்ந்து பின்பற்றும் வகையிலும் பொங்கல் விழாக்களை நடத்துகிறோம்...’’ என்றார்..

தமிழர் அரங்கம் நடத்தும் வீ.சபேசன் பொங்கல் விழாவை மாறுபட்ட வகையில் வடிவமைத்துள்ளார். ‘‘‘தமிழர் திருநாள்’ என்பதை வலியுறுத்தும் விதமாக ஓர் இந்து, ஒரு கிறிஸ்தவர், ஒரு இஸ்லாமியர், ஒரு கடவுள் மறுப்பாளர் என்று நான்கு பேர் சேர்ந்து பொங்கல் வைப்பார்கள். மண்டப முற்றத்தில்தான் பொங்கல் பொங்கப்படும். சரியாக பொங்கல் அன்றுதான், வேலை நாளாக இருந்தாலும், இதை செய்கிறோம்.

பானையில் பால் பொங்கும்போது வெடி வெடிப்போம். மத்தாப்பூ, வாண வேடிக்கைகள் நடத்தப்படும். எந்த ஒரு மதச் சின்னங்களும் இதில் இடம்பெறாது. பொங்கல் பானையில் விபூதி பூசுவது, சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பது போன்றவைகள் இருக்காது. பொதுவான தமிழர் திருநாளாக கொண்டாடுவோம். அது மட்டுமல்ல... வேற்று மொழிப் பாடல்கள் ஒலிக்காது. தமிழ்ப்பாடல்கள் மட்டுமே இசைக்கப்படும். நடனம் ஆடுகின்றவர்களும் முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்களுக்கே நடனமாடுவார்கள்.

கடந்த ஆண்டு தந்தை பெரியாரை போற்றும் விதமாக ‘கிழவன் அல்ல, இவன் கிழக்குத் திசை’ என்ற பாடலுக்கு சிறுமிகள் நடனமாடினார்கள். சிறப்புரை ஆற்றுபவர்களும் தமிழர்களின் பெருமைகளைத்தான் பேசுவார்கள்...’’ என்றார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் தமிழர்கள் வசிக்கும் பிரான்ஸ் நாட்டில், ‘பிரான்ஸ் தமிழ்ச் சங்கம்’ பொங்கல் விழாவை சிறப்பாக நடத்துகிறது.

பற்களைக் கிடுகிடுக்கவைக்கும் குளிர் பிரதேசங்களான நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளில் சிறிய அளவில் பொங்கல் விழாக்களும், ஆடல், பாடல் என கலைநிகழ்ச்சிகளும் களைகட்டுகின்றன. இங்குள்ள சிறிய திரையரங்குகளில் ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களின் படங்களை திரையிடுகிறார்கள். இது தவிர பொங்கலையொட்டி வெளியாகும் தமிழ்ப்படங்களும் உடனுக்குடன் ரிலீசாகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ‘பைரவா’ ரிலீஸாவதால், ஸ்வீடன் நாட்டில் ‘‘பைரவா’வுடன் பொங்கல் கொண்டாடுங்கள்’ என தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் விளம்பரம் செய்யப்பட்டுவருகின்றன.