லட்சுமி காந்தன் கொலை வழக்கில் ஆஜரானவர்!



கோமல் அன்பரசன் - 11

வி.வி.சீனிவாச அய்யங்கார்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராக புகழ் பெற்றிருந்தவர் கே.பாஷ்யம். அரசியல் செல்வாக்கும் கொண்டவர். இளைஞரான சீனிவாசனுக்கு ஒரு வகையில் உறவுக்காரரும் கூட. வக்கீலுக்குப் படித்து முடித்ததும் பாஷ்யத்திடம் தொழில் பழக வேண்டும் என்பது சீனிவாசனுக்கு நெடுநாள் ஆசை. அப்போது சட்டம் படித்துவிட்டு ஓராண்டு காலம் வழக்கறிஞரிடம் ‘அப்ரண்டீஸ் ஷிப்’ ஆக இருந்தால்தான் வக்கீலாகவே பதிவு செய்ய முடியும்.

இதற்காக பாஷ்யத்தைத் தேடி போன சீனிவாசனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘தெரிந்தவர்கள், உறவுக்காரர்களை நான் அப்ரண்டீசாக சேர்த்துக் கொள்வதில்லை’ என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டார் பாஷ்யம். கொஞ்சம் வருத்தப்பட்ட சீனிவாசனின் நெஞ்சில் ஒரு வைராக்கியம் பிறந்தது.

‘யார் பரிந்துரையும் இல்லாமல், முன்பின் தெரியாத ஒருவரிடம் தொழில் பழகி வழக்கறிஞராக வென்று காட்ட வேண்டும்’. அறிமுகமில்லாத ஜேம்ஸ் ஷார்ட் என்ற வெள்ளைக்கார சொலிசிட்டரிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்தார். ‘சொலிசிட்டர்’ என்பவர் அக்காலத்தில் வழக்குகளைத் தயார் மட்டுமே செய்வார். நீதிமன்றத்தில் வாதிட மாட்டார். அவர்கள் தயார் செய்த ஆவணங்களை வைத்துக்கொண்டு ‘பாரீஸ்டர்கள்’ வாதம் செய்வார்கள். ஜேம்சுக்கு முதல் சந்திப்பிலேயே சீனிவாசனைப் பிடித்துபோய்விட்டது.

பயிற்சிக்காலம் முடிந்ததும் 1898 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். அதில் சவால் நிறைந்த ‘ஒரிஜினல் சைடு’ வக்கீலானார். உயர் நீதிமன்றத்தில் சென்னை நகரப் பகுதியிலுள்ள வழக்குகளை விசாரிக்கும் அந்தப் பிரிவில் வெள்ளையர்களே ஆதிக்கம் செலுத்தினர். சட்டத்தொழிலில் சாதிக்கும் வெறியோடு இருந்த சீனிவாசன், அவர்களோடு முட்டி மோதி படிப்படியாக மேலே வந்தார்.

ஆழமான சட்ட அறிவுடன் ஆற்றொழுக்கான நடையில் அமைந்த ஆங்கிலப் பேச்சாற்றல் வெற்றிக்கு முதற்படியானது. குறுக்கு விசாரணை செய்வதில் கெட்டிக்காரராகவும் திகழ்ந்ததால் இவரது திறமை சென்னை மாகாணம் முழுக்க பேசப்பட்டது. வெளியூர் நீதிமன்றங்களுக்கும் சென்று வாதாடி வாகை சூடி வந்தார். சொத்துப் பிரச்னைகள் போன்ற சிவில் வழக்குகளில் இவரை அடித்துக்கொள்ள முடியாது என்று பெயர் வாங்கினார்.

பெரிய நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள், வணிகர்கள் என இவரது பெரும்பாலான கட்சிக்காரர்கள் பணக்காரர்களாகவே அமைந்தனர். இதனால் வருமானமும் குவிந்தது. அதிகபட்சமாக ஒரே மாதத்தில் 48 ஆயிரம் ரூபாய் சம்பாதித்ததாக அவரது மருமகனும் பிரபல வழக்கறிஞருமான வி.சி.கோபால்ரத்னம் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இன்றைக்கும்கூட இந்தப் பணத்தை ஈட்டுவதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது! ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு வக்கீலாக இவ்வளவு வருமானம் வந்தது என்றால் எந்தளவுக்கு தொழிலில் அவர் புகழ் பெற்றிருக்க வேண்டும்? அத்தகைய புகழுக்கு இன்னொரு காரணமும் இருந்தது.

கொடுக்கும் தொகையின் அடிப்படையில் இவர் கட்சிக்காரர்களுக்கு முக்கியத்துவம் தந்ததில்லை. பணம் படைத்தவரானாலும், இல்லாதவரானாலும் ஒரே மாதிரிதான் நடத்துவார். வழக்கில் வெற்றி ஈட்டுவதற்கான முயற்சிகளை முழு மனதோடு எடுப்பார். அதனால்தான் சாதாரண சீனிவாசனாக தொழிலைத் தொடங்கியவர், வெகுவிரைவில் வி.வி. என்று அன்போடு அழைக்கப்படும் வி.வி.சீனிவாச அய்யங்காராக உயர்ந்து நின்றார்.

‘ஒரு வக்கீல் எப்போதும் மிடுக்காக இருக்க வேண்டும்’ என்று சொல்லும் வி.வி. அதைப்போலவே வாழ்ந்தும் காட்டினார். கோட் சூட், காதுகளில் மின்னும் வைரக்கடுக்கன், தலையை அலங்கரிக்கும் ஜரிகை தலைப்பாகை, ஒவ்வொரு நாளும் ஒருவித ஷூ, புதுப்புது கைத்தடி என கம்பீரமும் அழகும் எப்போதும் அவரிடம் குடிகொண்டிருந்தன. கடைசி காலம் வரையிலும் இதில் கொஞ்சமும் குன்றாமல் பவனி வந்தார்.

சென்னை ‘காஸ்மோபாலிட்டன் கிளப்’ உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்த வி.வி., ஓர் அரசரைப் போன்று அங்கு வந்து போவதைக் காண கண் கோடி வேண்டும் என்று அக்காலத்தவர் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் கடவுள் பக்தியும் வைணவ முறைகளில் ஈடுபாடும் கொண்டிருந்த அய்யங்கார், இறைப்பணிகளுக்குச் செல்லும் போது பாரம்பரியப்படி பஞ்ச கச்சம் கட்டுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

வக்கீல் தொழிலில் பெற்ற வெற்றியால் அய்யங்காருக்கு நீதிபதி பதவி தேடிவந்தது. 1924ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார். ஆனால், நீதிபதியான பிறகு பணக்கஷ்டத்திற்கு ஆளானார். முன்னணி வக்கீலாக தொழிலில் வாரி குவித்து, சம்பாதித்த பணத்தைத் தான, தருமங்கள் செய்ததால், நீதிபதி பணிக்காக அரசாங்கம் கொடுத்த மாதச்சம்பளம் 10 நாட்களுக்குக்கூட போதவில்லை.

4 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடித்தவர் பிறகு நீதிபதி வேலையை விட்டுவிட்டு மீண்டும் வழக்கறிஞர் தொழிலுக்கே திரும்பினார். முன்பு சிவில் வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர் இப்போது கிரிமினல் வழக்குகளையும் கையிலெடுத்தார். அப்படி இவர் வாதாடிய முக்கியமான வழக்குகளில் ஒன்று ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’! தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் புகழின் உச்சியில் இருந்தபோது இவ்வழக்கில் கைதானார்.

மேல் முறையீட்டில் பாகவதருக்காக வி.வி. முன்னிலையானார். வழக்கில் அய்யங்காரை வாதாட வைப்பது குறித்துப் பேசுவதற்காக பாகவதரின் சார்பில் அவரது விலை உயர்ந்த காரில் ஆட்கள் வந்தார்கள். அந்தக் காரைப் பார்ப்பதற்காக அய்யங்கார் வசித்த ‘போலீஸ் ராகவாச்சாரியார் ஸ்கொயர்’ பகுதியில் கூட்டம் சேர்ந்தது. பாகவதர் பயணித்த காரைத் தொட்டுப் பார்த்த பாக்கியம் கிடைக்க வேண்டுமென மக்கள் முண்டியடித்தனர். வேறு வழியில்லாமல் யானைக்கவுனி காவல் நிலையத்திலிருந்து போலீசார் வந்து கூட்டத்தைக் கலைத்ததாக ராண்டர்கை எழுதியிருக்கிறார்.

பாகவதரின் புகழை இச்சம்பவம் காட்டினாலும், அப்படிப்பட்ட ஒருவரை வழக்கிலிருந்து காப்பாற்றும் சக்தி வாய்ந்த வழக்கறிஞராக சீனிவாச அய்யங்கார் பார்க்கப்பட்டார் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். வழக்கறிஞர் தொழில் மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களின் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார். நாடகங்கள் எழுதியதோடு அவற்றில் நடிக்கவும் செய்தார். பம்மல் சம்பந்த முதலியார் நடத்திய ‘சுகுண விலாச சபா’வின் உறுப்பினராக அய்யங்கார் இருந்தார். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் சிறிய நகைச்சுவை நாடகங்களை எழுதி, அவற்றில் நடித்திருக்கிறார்.

இவரது புகழ் பெற்ற ஆங்கில நாடகங்களில் ஒன்றான ‘சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்திரேட் ஆஃப் சுல்தான் பேட்’ சம்பந்த முதலியாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம் தவிர சமஸ்கிருதத்தில் பேசும் திறனும் வி.வி. பெற்றிருந்தார். ‘டிராமடிக் டைவர்டீஸ்மென்ட்ஸ்’ (Dramatic Divertissements) என்ற இவரது நூல், 3 பாகங்களாக வெளியாகி பெரும் பெயர் வாங்கித்தந்தது. மெட்ராஸ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். புகழ்பெற்ற ‘லா வீக்லி’யின் ஆசிரியராக 1936ல் இருந்து 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

‘‘தீவிரமான இலக்கிய, கலை வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் என் நண்பர் வி.வி.சீனிவாச அய்யங்கார், ஓய்வு நேரங்களில் மிகுந்த வெற்றியுடன் தொழில் செய்யும் சென்னை ஹை கோர்ட் வக்கீல்’’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் புகழ்வாய்ந்த வெள்ளைக்கார நீதிபதி சர்.விக்டர் மர்ரே கூட்ஸ்ட்ராட்டர் கிண்டலாக அய்யங்காரைப் பற்றி கூறுவதுண்டு. அந்தளவுக்கு வக்கீல் தொழிலிலும் கலைப்பணியிலும் சுறுசுறுப்பாக இயங்கினார். இவை தவிர பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் போன்ற விளையாட்டுகளிலும் இவர் கெட்டிக்காரர்.

சென்னையில் புகழ் பெற்றிருந்த வெம்பாக்கம் வைணவ குடும்பத்தில் 1871 மார்ச் 9 ஆம் தேதி பிறந்த வி.வி.சீனிவாச அய்யங்கார், பச்சையப்பன் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் வாங்கியவர். கல்லூரியில் படிக்கும்போதே ஆங்கிலப்புலமையுடன் இவர் தீட்டிய கட்டுரைகள் பதக்கங்களைப் பெற்றன. பின்னர் பி.எல் முடித்துவிட்டு வழக்கறிஞரான அய்யங்காருக்கு இரண்டு மகள்கள்.

இவரது மூத்த மருமகன் வி.சி.கோபால்ரத்னம் பிற்காலத்தில் ஆற்றல் மிக்க வழக்கறிஞராக இருந்தார். 56 ஆண்டுகள் வெற்றிகரமான சட்ட வல்லுநராக விளங்கிய வி.வி. சீனிவாச அய்யங்கார், 83 வது வயதில் 1954 பிப்ரவரி 25ல் மறைந்த போது தமது அற்புதமான மகன்களில் ஒருவரை இழந்து விட்டதாக நீதிதேவதை கண்ணீர் சிந்தினாள்.  

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

இனிப்பும், இரண்டு வகை ரசமும்

சீனிவாச அய்யங்கார் அலாதியான சாப்பாட்டுப் பிரியர். வாழும் காலத்தில் வகை வகையாக சாப்பிட்டு பார்த்துவிட வேண்டுமென்று நினைத்தவர். அதிலும் இனிப்பு பண்டங்கள் என்றால் கொள்ளை ஆசை. அவற்றை செய்வதற்கென்றே தனியாக ஒரு சமையல்காரரை நியமித்திருந்தார். மற்ற உணவுகள் சமைக்க இன்னொரு சமையல்காரர். இனிப்பைப் போலவே ரசம் என்றால் இவருக்கு உயிர். ஒரு நாளைக்கு இருவகை ரசம் இவருக்காக தயாரிக்கப்படும். தன்னைத் தேடி வருபவர்களுக்கும், விருந்தோம்பல் செய்து மகிழ்ச்சியடைவார்.

பத்திரத்தை பத்திரமாக எழுதும் வித்தகர்

சொத்து வழக்குகளிலும் பத்திரங்கள் தயாரிப்பதிலும் அய்யங்கார் பெற்றிருந்த நிபுணத்துவம், அவர் மறைந்த பிறகும் பெயர் சொல்லி நின்றது. சென்னையின் கோடீஸ்வர மருந்து வியாபாரி ஒருவர், பெரிய கட்டடத்தை வாங்கி இருந்தார். அதை அவருக்கு விற்றவர் கணவரை இழந்தவர். இதற்கு கிரய பத்திரம் தயாரித்தவர் வி.வி. பல ஆண்டுகள் கழித்து அந்தப் பெண்ணின் வாரிசு ஒருவர், ‘வீட்டை விற்றது செல்லாது; வாங்கியவர் திருப்பி கொடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்திற்குப் போனார்.

அப்போது அய்யங்கார் உயிரோடு இல்லை. ஆனால், அவர் எழுதி வைத்த பத்திரத்தில் உயிர் கொடுக்கும் வார்த்தைகள் இருந்தன. பத்திரத்தின் நிபந்தனைகளில் ஒன்றாக இந்தப் பிரச்னையைத் தீர்க்கதரிசனமாக கூறி, அதற்கு தீர்வையும் தந்திருந்தார். ‘பிற்காலத்தில் இந்த விற்பனை செல்லாது என வாரிசுகள் பிரச்னை கிளப்பினால், அவர்கள் கட்டடத்தை அடையலாம்.

ஆனால், அவர்கள் உரிமை கோரும் நேரத்தில் சொத்தின் மதிப்பு நடுநிலையாளர்களால் நிர்ணயிக்கப்பட்டு, அதனை ஒரே தவணையில் வாங்கியவருக்கு அளிக்க வேண்டும்’ என்றிருந்த வாசகங்களைப் பார்த்து வழக்கு தொடர்ந்த வாரிசு மிரண்டு பின்வாங்கிவிட்டார். விற்கும்போது ஆயிரங்களில் இருந்த கட்டடத்தின் மதிப்பு, உரிமை கோரியபோது லட்சங்களுக்கு உயர்ந்துவிட்டதே இதற்கு காரணம்.

காசு இல்லாமல் போன் பேசலாம்

தொலைபேசி என்பது பெரும் அதிசயமாக இருந்த 1940களில் அந்த வசதியை வைத்திருந்தவர்கள் பொத்திப்பொத்தி பாதுகாத்தனர். ஆனால், சீனிவாச அய்யங்கார் வீட்டு போன் மட்டும் ‘பப்ளிக் பூத்’ போன்று திறந்தே கிடக்கும். யார் வேண்டுமானாலும் அதில் பேசிக்கொள்ளலாம். அதற்காக காசு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.