விஷாலும் கார்த்தியும்தான் பிரச்னை பண்ணறாங்க...



சீறுகிறார் ராதாரவி

-நா.கதிர்வேலன்

இப்பொழுதெல்லாம் ஆச்சரியப்படுத்துகிறார் ராதாரவி. திரைப்படங்களில் வெறுப்பையும், குரோதத்தையும் சிந்திய கண்கள் இப்போது குணசித்திர நடிப்பில் மின்னுகின்றன. ‘பிசாசு’, ‘மனிதன்’, ‘அச்சமின்றி’ என அவர் மீண்டும் வெளிப்பட்டது... விமர்சனங்களில் பேசப்பட்டது. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் இல்லத்தில் நடந்தது இந்த சந்திப்பு. ‘‘எனக்கே புரியலை. எல்லோரும் பாராட்டுகிறார்கள். ரொம்ப நாளைக்கு முன்னாடி சத்யம் தியேட்டரில் ‘பிசாசு’ பார்த்திட்டு வந்தபோது என்னைக் கட்டிக் கொண்டு கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தினார்கள்.

நம் கைகளில் விழுகிற ரசிகர்களின் கண்ணீர் துளிதான் பெரிய ஆசீர்வாதம். எம்.ஆர்.ராதா ஃபேமிலினாலே வில்லன்தான் என முத்திரை குத்திட்டாங்க. அதை கழட்டிப்போட இவ்வளவு நாளாகிவிட்டது. அப்பா எப்பவும் நம்பியார் அப்பா மாதிரி கடுமையான வில்லனாக வந்ததே இல்லை. நாட்டு நடப்புக்களை கிண்டல் பண்ணிக்கிட்டே அய்யா பின்னுவார். அவர் லவ்வபிள் வில்லன். அதுமாதிரியும் என்னால் பண்ண முடியலை. இப்பத்தான் இவ்வளவு நாள் கழிச்சு அமையுது...’’ தாடையை தடவியபடியே சிரிக்கிறார்.

ராதாரவியின் அதே டிரேட் மார்க் வாஞ்சையான புன்னகை. உங்களை கோபக்காரன்னு சொல்வாங்களே..?
ஏங்க, உங்களை பார்த்து சிரிச்சுக்கிட்ேடதானே இருக்கேன். சரிங்க, கோபத்துக்கும் நடிப்புக்கும் என்ன சம்பந்தம்! நீங்க ஒழுங்கா இருந்தா நான் ஒழுங்கா இருக்கப் போறேன். சுயமரியாதையை விட்டுட்டா நடிக்க முடியும்! இப்ப சினிமா மாறிப்போச்சு. என்னை சிங்கம்புலி, கரடி மாதிரி உருவாக்கி ஒரு உருவத்தை கொடுத்திட்டாங்க.

‘பிசாசு’ படத்தில நடிக்கப்போறேன்னு சொன்னதுமே, என்கிட்டேயே மிஷ்கினை பத்தி பயமுறுத்த ஆரம்பிச்சிட்டாங்க. ஸ்பாட்டுக்கு போனால் மனுஷன் பிரமாதமா வேலை செய்கிறார். அவர் படத்தில நடிச்சதே அனுபவமாக மாறிப்போச்சு. இதே மாதிரித்தான் என்னையும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. இங்கே casting directors இல்லை. அது இருந்தால் நல்லா இருக்கும். ‘காட்பாதர்’ல முதலில் மா்ர்லன் பிராண்டோ இல்லை. கடைசியில்தான் வந்தார்.

முதலில் இங்கே யாருக்கும் தனிப்பட்ட அந்தஸ்து, இடம் எல்லாம் இல்லை. ஒருசிலரைத் தவிர யாருக்கும் இங்கே முகம் பார்த்தாலே மக்கள் கூடுகிற பெருமையெல்லாம் இல்லை. நல்லா நடிச்சா, வித்தியாசம் பண்ணினால் பொழைச்சு போகலாம். அந்த இடத்திற்கு வந்திடுச்சு சினிமா. இதில நாம் நடிக்கிறதும், அடையாளம் காணப்படுவதும், புகழப்படுவதும் சிறப்புத்தான்.

இவ்வளவு பெரிய நடிப்புப் பரம்பரை. ஆனால், ‘நடிகர் சங்கத்தில் நிறைய சிக்கல் பண்ணி வைச்சிருக்கீங்க’னு சொல்றாங்க?
அந்தப் பசங்க முன்னுக்குப் பின் முரணா பேசுறாங்க. முன்னாடி ரூ.110 கோடி, ரூ.250 கோடினு சொல்லிட்டு இப்ப ரூ.1.50 கோடின்னு இறங்கி வர்றாங்க. இவங்களுக்கு நிர்வாகம் பத்தி ஏதாவது தெரியுமா? ‘வாங்க, வாங்க’னு கூப்பிடுறேன். ‘வரமாட்டேங்கிறாங்க’னு விஷால் எங்களைப் பத்திச் சொல்றாரு. ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமான ஆள் அவர். லயோலா காலேஜில் நடிகர் சங்கம் கூட்டம் நடத்துறேன்னு சொன்னார். கடைசி நேரத்தில் நடிகர் சங்கத்துக்கே மாத்துகிறார்.

எல்லாத்துக்கும் காரணம்னு எங்களை சொல்றார். எப்பப் பார்த்தாலும் என்னை, சரத்குமாரை, வாகை சந்திரசேகரை குறை சொல்றார். நாங்க என்ன சோத்துக்கு இல்லாமையா ஊழல் பண்ணினோம். எங்க பின்னணி எல்லாம் சாதாரணமானதா? பொதுக்குழுனா தனியாக நடத்தறது. புரட்சித் தலைவர் 100வது ஆண்டு விழான்னு சேர்த்து சொல்றார். அவரைக் ெகாண்டாட தனியாகத்தான் விழா நடத்தணும். இப்படி சேர்த்து செய்யக்கூடாது.

ஒரு சங்கத்தை எப்படி நடத்தணும்னு இவங்களுக்கு தெரியவே இல்லை. ஆயுள் முழுக்க நீக்குறோம்னு சொல்லியிருக்காங்க, ஒருத்தரை தப்பே பண்ணினாலும் அஞ்சு வருஷத்திற்குத்தான் நீக்கி வைக்கவே முடியும். விஷாலுக்கு நிறைய விஷயம் தெரியலை. சூர்யா எங்க கமிட்டியிலேயே முன்னாடி இருந்திருக்கார். தப்பு நடந்தால் அவரே சொல்லியிருக்கலாமே! எஸ்.வி.சேகர், அவரோட தம்பி மனைவி, சீஃப் செகரட்டரி கிரிஜா மேடத்துகிட்டே சொல்லி எங்களை கைது பண்ணப் போறோம்னு சொல்லிக்கிட்டு இருக்காராம்... 

என்னதான் பிரச்னை விஷாலோட..?
இந்த விஷாலும், கார்த்தியும் சேர்ந்துதான் பிரச்னை பண்றாங்க. நாங்க குளறுபடி பண்ணிட்டோம்னு எங்க பார்த்தாலும் சொல்லிக்கிட்டே இருக்காங்க. இப்ப அவங்க நடத்தின கிரிக்கெட்டில அவ்வளவு ஊழல் நடந்திருக்கு. அதிலேயே கணக்கு வழக்கு எல்லாம் ஒண்ணும் சரியில்லை. அவங்களே பணம் வாங்கிக்கிட்டு கிரிக்கெட் ஆடியிருக்காங்க. இப்பக்கூட ரஜினி சாருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். ‘ரவி, இந்த விஷயத்தில் எதாவது நான் பேசணுமா’னு கேட்டார். ‘நான் பார்த்துகிறேன் இந்தப் பசங்களை. விடுங்க’னு சொல்லிட்டேன். பேசலாமான்னு கேட்கத் தேவையில்லை.. அவரே பேசியிருக்கலாம்.

இந்த பார்த்திபனுக்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்கேன். ஏழு புரடியூசர்கள் அவரை வைச்சு படம் பண்ணமாட்டேன்னு சொன்னபோது பஞ்சாயத்து பண்ணினேன். எனக்கு அந்த புரடியூசர்கள் படம் கொடுக்கலை. பார்த்திபன் ஒரே ஒரு படம் கொடுத்திட்டு விட்டுட்டார். அதை வைச்சு சாப்பிட முடியுமா! தொகை கையாடல்னு பொய் சொல்றாங்க. பத்திரம் எல்லாம் அவங்ககிட்டே இருக்கு. சரத்குமார் செய்த தப்பு, அந்த நடிகர் சங்க பத்திரத்தை ஐசரி கணேஷிடம் கொடுத்தது. அவர் விஷால் பக்கம் சாய்ந்துவிட்டார். ெகாடுக்காமல் இருந்திருந்தால், கோர்ட்டில் ஒப்படைத்து இருந்தால், அவங்க அதை வாங்குவதற்குள் நாக்குத் தள்ளிப்போயிருப்பாங்க.

இந்த விஷால் நடிகர்களுக்கு என்ன பண்ணியிருக்கார்! நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிரச்னை வந்ததே... அவர் பக்கத்தில நின்னாரா! சிவகார்த்திகேயனையே டேட்ஸ் குடுக்க வைச்சிட்டாங்களே! ராதாரவி விட்டு இருப்பானா! நடிகையை அடிச்ச இயக்குநரை ஒரு வருஷம் வீட்டில் உட்கார வைச்சான் இந்த ராதாரவி. அந்த கெத்து இவங்களுக்கு இருக்கா!

சின்னச்சின்ன நடிகர்களுக்கு நீங்க வந்த 10 நிமிஷ வீடியோ குடுங்கன்னு கேட்கிறாங்க. அவங்களால் அதை வாங்கித் தர முடியுமா! ‘சிறுத்தை’யில மொட்டை அடிச்ச ஒரு ெபாண்ணுக்கே அடையாளத்துக்கு வீடியோ கேட்கிறாங்க. நீ அதைப் பார்க்கலையா கார்த்தி! ரஜினிக்கே ‘உழைப்பாளி’ ஷூட்டிங் நடக்க இந்த ராதாரவிதான் உதவினான்.

ஏம்பா விஷாலு! நாங்க என்ன தெருவிலா திரியுறோம்? நாங்க திராவிடம் வளர்த்த பேமிலிய்யா! நீங்க எல்லாம் சுண்டைக்காய் பசங்க. உங்களுக்கு எந்த காலத்திலும் மக்கள் பிரச்னைகளில் கவலை இருந்ததில்லை. அந்த விஜய் தம்பி அருமையான ஆளு. மோடி, பணத்தை செல்லாமல் பண்ணிட்டபோது ‘நல்ல திட்டம். ஆனால் செயல்படுத்தின விதம் மக்களை பாடா படுத்திவிட்டது’னு சொன்னார். இது மாதிரி ஒரு வார்த்தை நீ  சொல்லியிருக்கியா! உணர்வு இருக்கா உனக்கு! எதுக்கெடுத்தாலும் ஒரு மைக்கை பிடிச்சுக்கிட்டு எங்களை திட்ட மட்டும் தெரியுது... 

ஏன் இவ்வளவு கோபம்?
பின்னே வராதா! எங்களுக்கு மடியில கனம் இல்லை. அதனால் வழியில பயம் இல்லை. இந்த பழமொழி தெலுங்குக்காரர் விஷாலுக்குத் தெரியாது. நானும் தெலுங்குக்காரன்தான். ஆனால், திராவிடம் வளர்த்தவன். ராதாரவிக்கு பதில் சொல்லமாட்டேன்னு கார்த்தி சொல்றாரு. நீ என்ன ஓவியமா! பெரியாரோட இருந்த குடும்பம் எங்களுடையது. காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மானு பார்த்து பழகி, பக்கத்தில் இருந்து வளர்ந்திருக்கோம். அதெல்லாம் இந்த பசங்களுக்குத் தெரியுமா! ஒண்ணு கேட்கிறேன். விஷால் நீ ஒழுங்கா! நீ எவ்வளவு சம்பளம் வாங்குறாய்... அதில எவ்வளவு ஒயிட், எவ்வளவு ப்ளாக் அதைச் சொல்லு! நீ என்னமோ தப்பு பண்ணாத மாதிரி பேசுறதை முதலில் விடு. நமக்கு இந்த நடிப்புத்தான் சோறு போடுது. அதைப் புரிஞ்சுக்க!
               

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்