துபாய் பொங்கல்



-துபாயிலிருந்து ஆசிப் மீரான்

‘பிறக்க ஒரு நாடு; பிழைக்க ஒரு நாடு. தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா’ என்றொரு வசனம் ‘பராசக்தி’யில் வரும். பிழைப்பதற்காகக் கடல் கடந்து வாழும் தமிழர்கள், தாங்கள் பிழைக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் தங்களது பண்பாட்டு அடையாளங்களையும் உடன் அழைத்துச் செல்லத் தவறுவதில்லை. ஐக்கிய அரபு அமீரக நாட்டின் வணிகத் தலைநகரான துபாயில் வாழும் தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்ததுமே பொங்கல் பற்றிய எதிர்பார்ப்புகளோடு நாட்களை நகர்த்தத் துவங்கிவிடுகின்றனர் துபாய் வாழ் தமிழர்களும். கடந்த பத்தாண்டுகளாக துபாயில் வசிக்கும் ஆனந்தன் - ஸ்ரீவாணி தம்பதிகளுக்கு பொங்கலைப் பற்றிச் சொல்லும்போதே தாயகத்தின் நினைவும் வந்துவிடுகிறது. ‘‘அங்க இருந்திருந்தா கரும்புப் பந்தல் கட்டுவோம். இங்க கரும்பு கிடைக்குது. ஆனா, பந்தல் கட்ட முடியறதில்ல...’’ வருத்தப்படுகிறார் ஸ்ரீவாணி. ‘‘ஆனாலும் பொங்கலுக்குத் தேவையான எல்லாமும் இங்க கிடைக்குது...’’ என்று மகிழ்கிறார்.

‘‘பொங்கலுக்கு விடுமுறை கிடையாது. அதனால பெரும்பாலும் காலைல சாமி கும்பிட்டதுமே அலுவலகம் வந்துடுவேன். மாலை வீடு திரும்பினதும் அம்மா செய்து வைச்சிருக்கிற பலகாரங்களோட பொங்கலைக் கொண்டாடுவேன்...’’ என்கிறார் ஸ்ரீவாணியின் மகளான நிவேதிதா. தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதோடு தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்காக இங்கிருந்து செய்திகளும் வழங்கி வருகிறார் இவர்.

‘‘ஊர்ல முற்றம் இருக்கும். இங்க அது கிடையாது. அதனால சமையலறைலயே பொங்கல் வைப்போம். பத்து வருஷங்களுக்கு முன்னாடி பொங்கல் சாமான் கிடைப்பது கஷ்டமா இருந்தது. இப்ப தட்டுப்பாடில்லாம எல்லாமே கிடைக்குது...’’ என்கிறார் ஆனந்தன் ‘‘தனியா வீடு எடுத்திருக்கிறவங்க வரவேற்பு அறைல பொங்கல் வைப்பாங்க. ஆனா, இது மாதிரி வாழறவங்க சில பேர்தான். பெரும்பாலும் ஒரே அடுக்ககத்தைப் பகிர்ந்து கொள்ளும் குடும்பங்கள்தான் இங்க அதிகம்.

இதை ‘ஷேரிங்’னு சொல்லுவோம். இது மாதிரி இடங்கள்ல வசிக்கிற எல்லாருமே தமிழர்களா இருந்துட்டா பொங்கலை ஜமாய்ச்சுடுவாங்க. அப்படி அமையாதவங்க அட்ஜெஸ் செஞ்சுதான் கொண்டாடுவாங்க...’’ என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ரம்யா சிவகுமரன். ஜனவரி முதல் வாரத்திலிருந்தே தோகையோடு கரும்பு இங்கே கிடைக்கிறது என்று பூரிக்கிறார் சக்திவேல். 26 வருடங்களுக்கு முன்னால் பெருமாள் என்பவரால் தொடங்கப்பட்ட ‘சாமி பூக்கடை’ என்கிற ‘பெருமாள் பூக்கடை’ என்கிற அங்காடியில் இவர் பணிபுரிகிறார்.

‘‘பொங்கலுக்கு தேவையான மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, பனங்கிழங்கு, செங்கரும்பு, தூதுவளை, பிரண்டை, வல்லாரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, அகத்திக்கீரை, மொச்சை, பொடி பாகற்காய், வெள்ளை முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, நாட்டுத் தக்காளி, கத்திரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், பொங்கலுக்காகவே கருணைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, சேனைக் கிழங்குனு எல்லாமே வந்துடும்.

இதோட பூஜைக்குத் தேவையான மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, தாமரை மொட்டு மாதிரியான பூக்களையும் வரவைச்சுடுவோம்...’’ என பட்டியலிடுகிறார் துபாய்க்கு மல்லிகைப்பூவை முதன் முறையாகத் தமிழகத்திலிருந்து அறிமுகம் செய்த பெருமாள் அண்ணாச்சியின் இளைய மகனான முத்து. இப்போது துபாய் - சென்னை விமானப் போக்குவரத்து எளிதாகி விட்டதால் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கான பொருட்களை எடுத்து வருவது எளிதாகிவிட்டது.

அத்துடன் தமிழர்களின் தேவையறித்து பொங்கல் பொருட்களை வினியோகம் செய்ய பல கடைகளும் இப்போது துபாய், சார்ஜா நகரங்களில் தலையெடுத்திருக்கின்றன. உறவுகளைப் பிரிந்து இருப்பதுதான் புலம்பெயர் வாழ்க்கையின் பெரும் துயரம். முக்கியமான நாட்களில் பெற்றவர்களுடனோ உற்றவர்களுடனோ இருக்க முடியாமல் போவதுதான் பெரும் சோகம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு நடுவில், ‘‘இப்ப டெக்னாலஜி வளர்ந்துடுச்சு.

ஸ்கைப் வழியா எங்க உறவுகளோட இங்கிருந்தே பொங்கல் கொண்டாடறோம்...’’ என்று பாசிடிவ் ஆக பேசத் தொடங்குகிறார் சிவராமன். ‘‘பத்து வருஷங்களுக்கு முன்னாடி துபாய் வந்தேன். அப்ப திருமணமாகலை. பொங்கல் பண்டிகையையும் பெருசா கொண்டாடணும்னு தோணலை. ஊர் நினைவு பொங்கிப் பொங்கி வரும். தவிர இங்க பொங்கல் எப்படி கொண்டாடறாங்கன்னும் அப்ப தெரியாது.

இப்ப அப்படியில்ல. நிறைய தமிழ்க் குடும்பங்கள் இங்க வசிக்கிறாங்க. எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பொங்கல் கொண்டாடும் நிலை வந்திருக்கு. மண்பானைல ஆரம்பிச்சு சகல பொங்கல் அயிட்டங்களும் இங்கயே கிடைக்குது. இரண்டு வருஷங்களுக்கு முன்னாடி பொங்கல் அப்ப ஸ்ரீரங்கத்துல இருந்தேன். அப்பதான் ஓர் உண்மை பளிச்சுனு பட்டது. தமிழகத்துல இப்ப பொங்கலை வெறும் விடுமுறை நாளா டிவி முன்னாடிதான் கழிக்கிறாங்க.

குழந்தைகள்கிட்ட எதுக்காக பொங்கல் வைக்கிறோம்னு சொல்லக் கூட யாருக்கும் அங்க நேரமில்ல. எவர்சில்வர் பாத்திரத்துலதான் பொங்கலே வைக்கிறாங்க. இதையெல்லாம் பார்க்கிறப்ப துபாய்ல நாங்க இன்னும் பழமை மாறாம பொங்கலை அதுக்கான தன்மையோட கொண்டாடறோம்னுதான் சொல்லணும்...’’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் சிவராமன். இதற்கு நேர்மாறான கருத்தை சொல்கிறார் ராமலிங்கம். ‘‘ஊர்ல இருந்தா நல்லா இருக்கும். இங்க நாங்களே ஒண்ணா கூடி பொங்கல் வைக்கறோம்.

உறவுகள் சுத்தமா இல்ல. வேலைநாள்ல பொங்கல் வந்துட்டா ஆபீஸ் போகணும். இல்லைனா லீவு போடணும். ஊர்லன்னா சொந்தங்களோட ஜாலியா இருப்போம்...’’ என்று பெருமூச்சு விடும் ராமலிங்கம், மீடியா சிட்டியில் தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். உண்மைதான். மனைவி மக்களோடு துபாயில் வசிக்கும் தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட எல்லா வழிகளும் இருக்கின்றன. புலம்பெயர்ந்து சேவல் பண்ணைகளில் வாழும் ராமலிங்கம் போன்ற எளிய தொழிலாளர்களின் பொங்கலில்தான் இன்னமும் தித்திப்பு சேர மறுக்கிறது.

‘‘முன்னாடி தமிழர்களுக்குன்னு நிறைய அமைப்புகள் இருந்துச்சு. ஒருமுறை பாவலர் அறிவுமதி துபாய் வந்திருந்தப்ப, ‘இத்தனை அமைப்புகள் தனித்தனியாக இயங்குகிறீர்கள் சரி. ஏன் தமிழர் திருநாளான பொங்கலை நீங்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடக் கூடாது’னு கேட்டார். நல்ல கேள்வி. உடனே ‘அமீரகத் தமிழ் மன்றம்’, ‘துபாய் தமிழ்ச்சங்கம்’, ‘தமிழ்நாடு பண்பாட்டுக்கழகம்’, ‘தாய்மண் வாசகர் வட்டம்’, ‘அமீரகத் தமிழர் அமைப்பு’ உள்ளிட்ட ஏழு அமைப்புகள் ஒருங்கிணைந்து ‘துபாய் தமிழர் கூட்டமைப்பு’ங்கிற பெயர்ல முழுநாள் நிகழ்ச்சியை வழங்கினோம்.

காலைல ஆண்களுக்கான கபடி போட்டி, பெண்களுக்கு ஓவியம் மற்றும் கோலப் போட்டி, சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்னு கொண்டாடினோம். மதியம் எல்லாருக்கும் உணவு, மாலை கலை நிகழ்ச்சிகள்னு சிறப்பா செஞ்சோம். இப்ப துபாய் அரசு தனிப்பட்ட அமைப்புகளை தடை செஞ்சுடுச்சு. அதனால தமிழர்களுக்காக தனியா பொங்கல் நிகழ்ச்சிகளை நடத்த முடியல.

இடைப்பட்ட காலத்துல தனியார் வானொலி ஒண்ணு, போன வருஷம் வரைக்கும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒரு பெரிய மைதானத்துல வைச்சு நடத்துச்சு. இந்த வருஷம் அதுவும் இல்ல...’’ என்று வருத்தப்படுகிறார் துபாய் தமிழர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்த ‘குத்தாலம்’ அஷ்ரஃப் அலி.         

படங்கள்: சரவணவேல்