டிஜிட்டலில் பொங்கல் பிசினஸ்!



-செனகா

சிறு, குறு வணிகர்களுக்கான டிப்ஸ்

செல்லாக் காசு திட்டத்துக்கு பின், மக்கள் கையில் பணமே இல்லை. வணிகம் குறைவாக நடக்கிறது. ஏடிஎம்கள் மூடியே இருக்கின்றன. வங்கியில் போட்ட பணத்தினை எடுக்கவே முடியவில்லை. இருக்கிற இரண்டாயிரம் ரூபாய் தாளை மாற்றப்போனால் சில்லறை இல்லை. நவம்பர் - டிசம்பரில் தமிழகம் முழுக்க இதுதான் நிலை. முழுமையாக இந்நிலை சீராக பல மாதங்களாகும் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இச்சூழலில் சில்லறை வியாபாரிகள், சிறு வணிகர்கள், சந்தையில் கடை போடுபவர்கள் இந்த தட்டுப்பாட்டையும், பணச் சிக்கலையும் அதுவும் பொங்கல் சமயத்தில் எப்படி எதிர்கொள்வது? கரும்பு, அலங்காரப் பொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பவர்கள், பூக்காரம்மா என எல்லா சிறு வியாபாரிகளும் சிறு குழுக்களாக ஒன்றாய்ச் சேருங்கள். தனித்தனியாக வாங்கினால் ஒவ்வொன்றுமே 100, 200 ரூபாய்க்குள்தான் வரும்.

அதற்கு வாடிக்கையாளர் ஐந்நூறோ, இரண்டாயிரமோ நீட்டினால் சில்லறை தர முடியாது. சில்லறை இல்லையென்றால் அவர் வேறு கடைக்கு போய் விடுவார். அனைவருக்கும் கடனும் கொடுக்க முடியாது. அதனால் ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை வேறுவிதமாக மாற்றுங்கள். ஒன்றாகச் சேர்ந்த சிறுவியாபாரிகள் அனைவரும் ஒரே இடத்தில் மொத்தமாக வாடிக்கையாளரை பரிவர்த்தனை செய்ய சொல்லுங்கள். இல்லத்தரசியோ, குடும்பத் தலைவரோ, பெரிய வீட்டு வேலைக்காரர்களோ சந்தைக்கு வந்து மொத்தமாக வாங்கினால்... எல்லாம் சேர்த்து ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு வரும்.

ஒவ்வொரு சிறு வணிகரும் கடைக்கு ஏற்ப ஒரு வண்ணச்சீட்டினை எழுதிக் கொடுத்து, ஒரு ஆள் வைத்து வாடிக்கையாளர் வாங்கிய பொருளை ஒரே இடத்தில் சேர்த்துவிடுங்கள். நம்பிக்கையான ஒருவரை பரிவர்த்தனைக்காக நியமியுங்கள். எல்லா பரிவர்த்தனைகளும் - அது ரொக்கமாக இருந்தாலும், கார்டாக இருந்தாலும் - ஒரே இடத்தில் செய்யப்பட்டு, வாடிக்கையாளரின் தேவைகளை பையில் போட்டுக் கொடுத்து விடுங்கள். சில்லறைப் பிரச்னைகளும் இருக்காது. கார்டு பரிவர்த்தனைகளும் ஒரே இடத்தில் முடியும்.

ஆளாளுக்கு ஸ்வைபிங் மெஷின்கள் வைத்திருக்க வேண்டிய தேவையுமில்லை. இப்படி செய்ய வாய்ப்பில்லை என்றால் இன்னொரு வழி இருக்கிறது. வாடிக்கையாளர் சந்தைக்கு வரும்போதே இரண்டாயிரம் ரூபாய்க்கு சீட்டு கட்டுவதற்கு பயன்படுத்துவது போல ஓர் அட்டையும், அதனுள் ஐம்பது, நூறு ரூபாய்க்கான கூப்பன்களையும் இணைத்துவிடுங்கள். இதன் பிறகு வாடிக்கையாளர் பொருட்களை வாங்கும் இடங்களில் எல்லாம் கூப்பன்களையும், அட்டையில் விற்பவரின் ரப்பர் ஸ்டாம்பையும் பெற்றுக் கொண்டால் போதும்.

இறுதியில் கணக்குப் பார்த்து மீதி சில்லறையை வாடிக்கையாளருக்கு கொடுத்து விடலாம். இதனால் சிறு சிறு உரசல்கள் ஏற்படலாம். ஆனால் பணம் கையில் இல்லாத, சில்லறைத் தட்டுப்பாடுகள் நிலவுகிற, கார்டுகள் மட்டுமே வைத்திருக்கிற மக்களோடு வணிகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். சரி. ஒரளவுக்கு சிறிய அளவில் கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்கள் என்ன செய்யலாம்?

பிரதமர் ‘பீம்’ என்றொரு செயலியை (app) அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த செயலி வங்கிக் கணக்குகளோடு இணைக்கப்பட்ட ஆதார் அட்டையைக் கொண்டு செயல்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சாதாரண போன்கள் போதும். ஸ்டேட் பாங்க் உட்பட 31 வங்கிகள் ஏற்கனவே இந்த செயலியோடு இணைக்கப்பட்டிருக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக இருக்க, இதில் அனுப்ப, பெற, ஆதார் அட்டையோடு கணக்கினை இணைக்க... என அடிப்படை வசதிகள் இருக்கின்றன. ஸோ, வணிகர்கள் ஆதார் கணக்கோடு இணைக்கப்பட்ட ‘கைரேகை’க் கருவியை வைத்திருந்தால் போதும். வாடிக்கையாளரிடம் செல்போன் இல்லையென்றாலும் பரவாயில்லை. கருவியில் அவர்கள் கைநாட்டு வைத்தால் போதும்.

அந்த அடையாளத்தை வைத்து வங்கிக் கணக்கோடு தொடர்பு கொண்டு தன் கணக்குக்கு உரிய தொகையை வியாபாரிகள் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். இது அத்தனையும் உடனடியாக நடக்கும். கணக்கில் வரவு வருமா என்று காத்திருக்கக் தேவையில்லை. ஆனால், தமிழ் வணிகர்கள் உடனடியாக இந்த பொங்கலுக்கு இதை பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் இப்போதைக்கு இது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கிறது.

மற்ற மொழிகளிலும் இந்த வசதி கூடிய விரைவில் வந்து விடும் என்று அரசு உறுதி அளித்திருக்கிறது. அமலுக்கு வந்ததுமே வணிகர்கள் இந்த வசதியை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர் மற்றும் வியாபாரிகளின் கிரெடிட் மதிப்பினைக் கூட்டும். பிற்காலத்தில் வங்கியில் கடன் பெறவும், பிற சேவைகள் பெறவும் உதவும். சிறு, குறு வணிகர்கள் ஒரு விஷயத்தை மட்டும் மறக்க வேண்டாம். மெதுவாக, ஆனால், உறுதியாக இந்தியா டிஜிட்டல் வழிப் பரிவர்த்தனைகளை நோக்கி நகர்கிறது.

எனவே தற்காலிக சிரமங்களை எப்படி எதிர்கொள்ளலாம் என்று யோசிக்கும் அதேநேரம், எதிர்காலத்தில் எப்படி டிஜிட்டலில் வியாபாரம் செய்யலாம் என்பதையும் ஆலோசிப்பது நல்லது. அப்போதுதான் வெற்றிகரமான வணிகராக எப்போதும் இருக்க முடியும். அந்த வகையில் இந்த ‘முதல் டிஜிட்டல் பொங்கல் வியாபாரத்தில்’ நீங்கள் சேதாராம் இல்லாமல் கரைசேர மனமார்ந்த வாழ்த்துகள்!