மரம் நட வேண்டுமா? app டவுன் லோட் பண்ணுங்க!
-டி.ரஞ்சித்
‘‘சமூகம் சார்ந்த பல விஷயங்களை தனி மனிதர்களும், என்.ஜி.ஓக்களும் செய்து வருகிறார்கள். இது எந்தளவுக்கு மக்கள் இயக்கமாக மாறும் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் சமூக நலன் தொடர்பாக டெக்னாலஜி அடிப்படையில் செயல்படும் திட்டங்கள் அதிகமாக இல்லை. இங்கே தொழில்நுட்ப அறிவும், செயல்பாடுகளும் நல்ல நிலையில் இருந்தாலும் அதை சமூக செயல்பாட்டுக்காக பயன்படுத்துபவர்கள் மிக குறைவே.
 ஆனால் தொழில்நுட்பத்தை சமூகம் சார்ந்து திறமையாகப் பயன்படுத்தினால் பெரிய அளவில் நம்மால் சாதிக்க முடியும்...’’ என்று நம்பிக்கையோடு பேசுகிறார் மகேஷ். ‘க்ரயாண்ட்.காம்’ நிறுவனர். இந்த நிறுவனம் உருவாக்கிய ‘பி த ட்ரீ ஹக்கர்’ (Be The Tree Hugger) என்ற app ‘வர்தா புயலுக்குப் பின் சமூக நலனுக்கான நொடிப்பொழுது தீர்வு’ எனும் தலைப்பில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய படைப்பாளர்களுக்கான போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறது.
‘‘கடந்த வருடம் காற்று... அதற்கு முந்தைய வருடம் தண்ணீர்... இந்த வருடம் நெருப்பா இருக்குமோ என்று சென்னைவாசிகள் அச்சத்துடன் 2017ஐ தொடங்கியிருக்கிறார்கள். பயம் ஒரு பக்கம் இருக்கட்டும். இயற்கையின் சீரழிவுக்கு நாம்தான் முக்கிய காரணம். இதை தடுக்க முடியாவிட்டாலும் சீரழிவை சீர் செய்யலாம் என்று மக்களை நம்பி களத்தில் இறங்கியுள்ளோம். மரம் நடுவது போன்ற ஒரு செயல்பாட்டை தொழில்நுட்பமாகச் செயல்படுத்தும்போது அது ஒரு மக்கள் இயக்கமாக மலரும் என்று உறுதியுடன் நம்புகிறேன்...’’ என்கிற மகேஷிடம் இந்த app பற்றி கேட்டோம்.
‘‘சென்னையில் இருந்த மரங்கள் அனைத்தும் ‘வர்தா’ புயலால் வேரோடு சாய்ந்துவிட்டன. அந்த இடங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கான ஆப்ஷன்தான் இந்த app. இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். உள்ளூர் மரங்கள் இந்தப் புயலை தாங்கி இன்றும் நிற்கின்றன. அதனால் உள்ளூர் மரங்களை நடவே இந்த appல் இடமுண்டு. மரம் நட கன்று தேவை. இதை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். பண உதவியை நாங்கள் பெறுவதில்லை.
விழுந்த மரங்களைப் பற்றிய தகவலையும் இந்த appல் தெரிவிக்கலாம். என்ன... மரம் விழுந்த இடத்தில் இருந்து மட்டுமே அந்த நபர் தெரிவிக்க முடியும். அதிகபட்சம் நூறு மீட்டர் தொலைவிலிருந்து தகவலை பகிரலாம். மரம் விழுந்த இடத்திலிருந்து இந்த app-ஐ செயல்படுத்தும்போது குறிப்பிட்ட அந்த நபர் எங்கே நிற்கிறார் என்பதை ஜிபிஎஸ். காண்பித்துவிடும். பிறகு மரம் விழுந்த இடமும் appல் தெரியும்...’’ என்று சொல்லும் மகேஷ், ஐம்பது சதவிகித மரங்கள் திரும்ப நடப்பட்டாலே அது வெற்றிதான் என்கிறார்.
‘‘தார் ரோடு, கட்டிடங்களை துளைத்து வளர்ந்த மரங்கள்... மாதிரியான இடங்களில் மீண்டும் கன்றுகளை நட முடியுமா என்று தெரியவில்லை. அதனால்தான் ஐம்பது சதவிகிதம் என்று குறிப்பிடுகிறோம். கன்றுகளை நடுவதற்கு என்றே தனியாக ஒரு குழுவை வைத்திருக்கிறோம். நட்டால் மட்டும் போதாது. சரியாக பராமரிக்கப்படுகிறதா, வளருகிறதா என்று கண்காணிக்கவும் வேண்டும். இதற்காகவே இந்த appல் ஒரு விளையாட்டை ஆப்ஷனில் வைத்திருக்கிறோம்.
இதன் மூலம் யார் வேண்டுமானாலும் நடப்பட்ட கன்றுகளை சரியாக கண்டுபிடித்து அதன் வளர்ச்சியை தொடர்ச்சியாக கண்காணிக்கலாம். இது தொடர்பான தகவல்களையும் எங்களுக்கு தெரிவிக்கலாம். எதுவும் தடாலடியாக நடந்து விடாது என்பது எங்களுக்கு தெரியும். சுற்றுச்சூழலை பொறுத்தே மாற்றம் நிகழும்.
இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்னைக்கான விதை முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்னாலேயே தூவப்பட்டிருக்கும். இந்த உண்மை கன்றுகளை நடுவதற்கு நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கும் பொருந்தும். அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் இப்போது உழைக்கிறோம்...’’ அழுத்தமாக சொல்கிறார் மகேஷ். வாழ்த்துகள் ப்ரோ!
படங்கள்: ஆ. வின்சென்ட் பால்
|