மோடி படிக்க வேண்டிய மேட்டர்!



-த.சக்திவேல்

அஸ்லிண்ட். இந்த ஆறு வயது பெண் குழந்தைதான் அமெரிக்காவின் இப்போதைய ஹாட். கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளின் முன் பக்கத்தை அஸ்லிண்ட் அலங்கரித்திருக்கிறார். ‘இவளை மகளாகப் பெற்றதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று நெகிழ்கிறார் அம்மா பெத்தானி! அப்படி அஸ்லிண்ட் என்னதான் செய்துவிட்டார்?

பெத்தானி நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது கைரேகையை ஐபோனில் பதிந்து, அமேசானுக்குள் நுழைந்து 250 டாலருக்கு கிஃப்ட் ஆர்டர் செய்திருக்கிறார் அஸ்லிண்ட்! அமேசானில் இருந்து ஷாப்பிங் செய்த விவரங்கள் பற்றிய மெசேஜ்கள் பெத்தானியின் மொபைலுக்குள் கொட்டியிருக்கின்றன. ‘மை காட். யாரோ என் அக்கவுன்ட்டை ஹாக் செய்துவிட்டார்கள்’ என்று பதறியிருக்கிறார் பெத்தானி.

அப்போது ‘மம்மி... நேத்து நீ தூங்கிட்டு இருந்தப்ப நான்தான் ஷாப்பிங் செஞ்சேன். பதறாத. அட்ரெஸ் சரியாத்தான் கொடுத்திருக்கேன். கிஃப்ட் நம்ம வீட்டுக்கு வந்துடும்’ என மழலையில் சிணுங்கியிருக்கிறார் இந்த சுட்டிப்பெண். ‘ஆறு வயசு குழந்தை நம்ம செக்யூரிட்டி சிஸ்டத்தை உடைக்கிற அளவுக்கா நாம டிசைன் செய்திருக்கோம்..?’ என சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் விழி பிதுங்கி நிற்க - ‘விரைவில் எல்லா இடங்களிலும் கைரேகை டிரான்ஸாக்‌ஷன் வந்துவிடும்’ என்று அறிவித்திருக்கிறார் நம் பிரதமர்!