பரட்டைத்தலை அன்பு



-இசை

தெருமுக்கில் குந்தி
பீடி வலிக்கும் பரட்டைத்தலை என் அன்பு
நீ பார்க்கும் போது
அது பீடியைக் கீழே எறிவதில்லை
நீ காணும் போது எறிய வேண்டும்
என்பதற்காகவே
அதைப் பற்ற வைப்பதுமில்லை.
ஒரு நிமிடம் முன்புதான்

அது ஒரு குருட்டுப் பிச்சைக்காரனுக்கு
சாலையைக் கடக்க உதவியது.
அதற்குத் தெரியும்
ஒரு நிமிடத்தில் நீ வந்துவிடுவாயென.
அதற்குத் தெரியாததோ
ஒரு நிமிடம் அவனைத் தாமதிக்க வைக்கும் லாவகம்
அது பீடியிலிருந்து சிகரெட்டுக்கு மாறும் முன்பே
கண்டு கண்டு சலூன் கண்ணாடிகளை உடைக்கும் முன்பே
கிளிப்பச்சையிலிருந்து மென் கட்டச்சட்டைகளுக்கு மாறும் முன்பே
அதை கால்சட்டைக்குள் செருகிவிட்டுக்கொள்ளும் முன்பே
கிச்சுக்குள் நறுமண தைலங்களை பூசிக்கொள்ளும் முன்பே
ஒரு கனவானைப் போல் மண்டியிட்டு
ஸ்டைல் மலரை
நீட்டிப்பழகும் முன்னே
பிறவியிலிருந்தே சாய்ந்திருக்கும் நடையை வெட்டிச்சீராக்கும் முன்பே
அவசர அவசரமாக
அதற்கு அன்பு வந்துவிட்டது
நேர்த்தியற்ற அன்பு
உன்னை முத்தமிடுகிறது
அது இந்த உலகத்தில்
இதுவரை யாராலும் இடப்படாத ஒரு முத்தம்
ஆனாலும் என்ன,
கடைவாயில் கொஞ்சமாக சல்லொழுகிவிட்டது.
சல்லொழுக்கும் சேர்ந்தே அதன் முத்தம்.